சென்னை, வடலூரில் இன்று 22.06.2023 அன்று நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம் என்று கூறினார்.
இந்த நிலையில், வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்” புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு கவர்னர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை” ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே கவர்னர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் கவர்னரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார்.
சங்கியாக, சண்டித்தனம் செய்து வருகிறார்!
வள்ளலாருக்கு இப்போது ஜெயந்தியாம்! எது நுழைகிறது பார்த்தீர்களா?
வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத்தாளர் என்ற முழுப் பொய் புரட்டை முன்னால் நிறுத்திப் பேசி வம்பளக்கிறார்!
‘மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும்…’
”நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே”
”வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்க விலை
என்ன பயனோ இவை.”
”கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக…
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றுங்கொண்டறியர் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்’
வேதநெறி ஆகமத்தின் நெறியபு ராணங்கள்
விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே சித்தமே”
என்று ஆறாம் திருமுறையில் ஒப்புதல் வாக்குமூலம் போல், தனது முந்தைய கருத்துகளுக்கெல்லாம் விடை கொடுத்து விடுதலை கண்ட வித்தகரை சனாதனச் சழக்கராகக் காட்டி, வெள்ளை அணிந்த எம் வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் – பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என். ரவியின் தில்லுமுல்லுப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
“யானையைத் தடவிப் பார்த்து வர்ணனை கூறிய அய்வர்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நாடு தழுவிய கண்டனம் வெடிக்கட்டும்.

