அஹமதாபாதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வியடைந்தாலும் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது. சிஎஸ்கேவின் இறுதிக்கட்ட ஓவர் ஸ்பெசலிஸ்ட் பதிரானா தொடங்கி தேஷ்பாண்டே, தீக்ஷனா, ஜடேஜா என்று ஒருவரையும் சாய் சுதர்சன் விட்டு வைக்கவில்லை.
பேபி மலிங்கா என்று வர்ணிக்கப்படும் பதிரானாவின் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சுதர்சன் அடித்த சிக்ஸரை இந்த ஆட்டத்தின் சிறந்த ஷாட் என்று வர்ணித்தார் ரவி சாஸ்திரி. 2021 டிஎன்பில் போட்டியில் சாய் சுதர்சனின் ஆட்டத்தைப் பார்த்த அஸ்வின், தமிழ்நாடு அணிக்கு உடனடியாக சுதர்சனைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தார்.
லைகா கோவை கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய 17 வயதான சுதர்சன், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அஸ்வினை எதிர்கொண்ட விதத்தைப் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஏன் அஸ்வினே வியந்து போய் தனது யூடுயூப் பக்கத்தில் “அடேங்கப்பா இதோ பார் ரா இந்தப் பையன!” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.
சாய் சுதர்சனின் தந்தை பரத்வாஜ், ஒரு முன்னாள் தடகள வீரர். முன்னாள் கைப்பந்து வீரரான அவருடைய தாய் உஷா, தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் உடற்தகுதி (strength and conditioning) பயிற்சியாளராக உள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி இருக்கிறார் சுதர்சன்.
ஆனால் உடற்தகுதியில் கவனம் செலுத்தாமல் விட்டதால் தேர்வுக்குழுவின் கவனத்தை அவர் ஈர்க்கவில்லை. ஆனால் அவருடைய தாய் உஷாவின் கண்காணிப்பில் இப்போது தனது உடற்தகுதியை சுதர்சன் அதிகரித்துள்ளார். ஐபிஎல்-லில் சாதித்து சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க வேண்டும் என்பதுதான் சாய் சுதர்சனின் லட்சியம். “என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் இரண்டு வருடங்களில் சுதர்சன் ஐபிஎல்-லில் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் சாதிப்பார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹார்திக் பாண்டியா.
கடைசி ஓவரில் பதிரானா பந்தில் எக்ஸ்ரா கவர் திசையில் அடித்த சிக்ஸர் தான் தனக்கு மிகவும் பிடித்த ஷாட் என்று சொல்லும் சாய் சுதர்சன். “குஜராத் அணி நிர்வாகத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் அணியில் இடமில்லாமல் இருந்த போதும் குஜராத் அணி என் மீது வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. இன்னிங்ஸ் முடிந்து வீரர்கள் அறைக்கு வந்து நான் அடித்த அந்த ஷாட்களைப் பார்த்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார் சுதர்சன்.
சாய் சுதர்சன் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பும் போது மில்லர், ரஷித் கான், மோஹித் சர்மா உள்ளிட்ட குஜராத் அணி வீரர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். சாய் சுதர்சன் மீது மிகுந்த அக்கறை கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அவரை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டார். மற்றொரு தமிழக வீரரான சாய் கிஷோர் தன் கை வலிக்கும்வரை கைதட்டி சுதர்சனை உற்சாகப்படுத்தினார்.
“இப்போது அந்த தருணத்தை நினைத்தாலும் எனக்குப் புல்லரிக்கிறது. விஜய் சங்கர் அண்ணாவும் சாய் கிஷோரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தமிழ்நாடு அணிக்காக நான் அறிமுகமாகிய போது எனக்கு தொப்பியைக் கொடுத்தவர் அவர். கிரிக்கெட் பற்றி மட்டுமில்லாமல் வாழ்க்கை குறித்தும் நாங்கள் பேசிக் கொள்வோம்”. என்று மகிழ்ச்சியைப் பகிர்கிறார் சுதர்சன்.
சாய் சுதர்சனின் இன்னிங்ஸைப் பார்த்துவிட்டு கேன் வில்லியம்சன் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதுகுறித்துப் பேசிய சுதர்சன், “கேன், ரொம்பவும் இனிமையானவர். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று என்னிடம் அவர் கூறியுள்ளார். என்னுடைய இன்னிங்ஸைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு “மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக விளையாடினாய்” என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.” என்றார்.
சென்னை அணிக்கு எதிராக பட்டையைக் கிளப்பி இருந்தாலும் சாய் சுதர்சன் ஒரு காலத்தில் சூப்பர் கிங்ஸ் அணியில் ஓர் அங்கமாக இருந்தவர் தான். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த சுதர்சன், அப்போது ஆலோசகராக இருந்த அம்பதி ராயுடுவிடம் இருந்து தான் நிறையக் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.
சென்னைக்கு எதிராக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்லும் அவர் ” சென்னைன்னா சிஎஸ்கே தான்; சென்னைன்னா தல தான்” என்கிறார்.
லைகா கோவை கிங்ஸ் அணியில் அவருடைய ஒப்பந்தத் தொகை ரூ. 21.6 லட்சம், ஆனால் ஐபிஎல்-லில் அவருடைய ஒப்பந்த தொகை ரூ.20 லட்சம் மட்டுமே. டிஎன்பிஎல், சையது முஷ்தாக் அலி, ஐபிஎல் என்று செல்லும் இடமெல்லாம் கோப்பைகளாக அடுக்கி வருகிறார் சாய் சுதர்சன். விரைவில் இந்திய அணியின் கதவு சுதர்சனுக்குத் திறக்கட்டும்!