சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்: சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ் விஸ்வநாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நிதியாண்டு 2025–26-ல் (ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை) சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் அவர் செயதியாளர்களிடம் விவரித்தார்.
இந்தத் துறைமுகங்களில் ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒரு கார் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தினமும் சுமார் 3 லட்சம் டன் சரக்குகள் என மொத்தம் 107 மில்லியன் டன் (சென்னை துறைமுகம் 57.9 மில்லியன் டன், காமராஜர் துறைமுகம் 49.08 மில்லியன் டன்) சரக்குகளைக் கையாண்டு, 2024-25-நிதியாண்டில் 103.37 மில்லியன் டன் என்ற சாதனையை முறியடித்திருப்பதாகவும் காமராஜர் துறைமுகம் 2030-க்குள் சரக்கு கையாளும் திறனை 100 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னைத் துறைமுகம் 2,04,165 கார்கள் ஏற்றுமதி செய்து 11.5% வளர்ச்சி கண்டுள்ளது. காமராஜர் துறைமுகம் 1,91,825 வாகனங்களைக் கையாண்டுள்ளது. இது சென்ற நிதியாண்டைவிட 18.86% அதிகமாகும். மேலும் இந்தத் துறைமுகம் ரூ. 440 கோடி முதலீட்டில் 17 மீட்டர் ஆழத்துடன் “கேப் இணக்க துறைமுகமாக” மாறியுள்ளது என்ற தவல்களையும் அவர் தெரிவித்தார்.
இரு துறைமுகங்களும் இணைந்து ரூ.2,400 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளன. இதில் சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டு வருமானம்: ரூ.1,185.01 கோடி ஆகும். காமரரஜர் துறைமுகத்தின் செயல்பாட்டு வருமானம்: ரூ. 1,239.15 கோடி ஆகும். மேலும் இந்தத் துறைமுகத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,356.39 கோடியாக உயர்ந்துள்ளது. இரு துறைமுகங்களும் நிதியாண்டு 2025-26-ல் மொத்தம் ரூ.992 கோடி மூலதன முதலீடு செய்துள்ளன என்று விஸ்வநாதன் கூறினார்.

சென்னை துறைமுகம்-மதுரவாயல் நான்கு வழிச்சாலை உயர்மட்டப் பாதை (ரூ.3,570 கோடி) துறைமுக உட்சாலைகளுடன் இணைக்கும் தரைமட்டச் சாலை மற்றும் சந்திப்பு மேம்பாடுத்துதல் (ரூ. 37.18 கோடி) செயல்படுத்தப்பட்டன. வடக்கு நுழைவாயில் வளாகம் மற்றும் இணைப்பு சாலைகள் (ரூ.68 கோடி) பொது சரக்கு மற்றும் வாகன சரக்குகளுக்கான பொதுப் பயன்பாட்டு ரயில் பாதை (ரூ. 65.36 கோடி) அமைக்கப்பட்டது என்ற விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
சென்னை துறைமுக மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டதன் மூலம், வெளி மருத்துவமனைகளுக்கான பரிந்துரைகளும் அதற்கான செலவினங்களும் பெருமளவு குறைக்கப்பட்டு, ரூ. 5.87 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக மருத்துவமனை வசதிகள் மேம்பாடு, சித்த மருத்துவ சேவை மூலம் 10,280 பயனாளிகள் பயனடைந்தனர் என்றும் அவர் கூறினார்.
சென்னை துறைமுக கல்வி அறக்கட்டளை பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 1,000 மாணவர்கள் பயின்றனர். 2025-26 கல்வியாண்டு நிதியுதவியாக ரூ. 68.33 லட்சம் செலவிடப்பட்டது. 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: 98.5%; 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: 97% என சாதனை படைத்துள்ளது என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.

