’’கடந்த மூன்று ஆண்டுகளாக நான் நூல் விமர்சனம் எழுதி வருகிறேன். அதில் ஒரு புத்தகத்தின் விமர்சனமானது பதிவு செய்த இரண்டு நாட்களில் 5500 பார்வைகளை கடந்தது இதுவே முதல் முறை’’ என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் பட்டுக்கோட்டை பா விமலா தேவி. அந்த நூல் விமர்சனத்தை நீங்களும் படித்து பாருங்கள்.
உப பாண்டவம் : நூல் அறிமுகம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பக்கங்கள்: 400
விலை: 375
பதிப்பகம்: தேசாந்திரி
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் முதல் நாவல் என அறியப்படும் உபபாண்டவம் உண்மையில் அவருடைய எழுத்துக்களின் வலிமையை அறிய உதவும் நூலாக காண்கின்றேன். அவரால் திரும்ப எழுத முடியாத நாவலாக இதுவே தான் இருக்கும் என்று கூறி இருப்பதிலிருந்து அவருடைய உழைப்பின் கடினத் தன்மையும் அறிய முடிகிறது.
மகாபாரதம் என்றாலே அது பாண்டவர்களின் கதை என்று கருதுகிறோம். உண்மையில் பாண்டவர்களின் கதை மட்டுமல்ல. கௌரவர்கள், உப பாண்டவர்கள் இந்திய நிலத்தின் கதையும் அதுதான் என்கிறார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அனைவருக்கும் அறிமுகமான இதிகாசமாக இருக்கும் இந்த மகாபாரதம் இந்தியாவை இணைக்கும் முக்கிய கண்ணியாகும்.
உண்மையில் இந்த நாவலானது மகாபாரதம் மீதான ஒரு புனைவு வடிவம். பெரும்பாலும் மகாபாரதத்தில் அறியப்படாத கதாபாத்திரங்களை அவர்களின் அகம் சார்ந்த உலகை மிக விரிவாக சித்தரிக்கிறது.
மகாபாரதக் கதைகளை நம் இந்திய நிலப்பரப்பில் சிறு வயது முதலே கேட்கும் வாய்ப்புகள் எல்லோருக்கும் வாய்த்திருக்கும். ஆனால் கதாபாத்திரங்கள் தன் மனதளவில் இக்கட்டான சூழ்நிலைகளில் எவற்றையெல்லாம் நினைத்து உழன்றிருப்பார்கள் என்பதை இந்த நாவல் மூலம் நாம் அறியலாம்.
நாவல் என்பது ஒரு தொடர்ச்சியான கதையை இலகுவாக கடத்துவது. ஆனால் இந்த உபபாண்டவம் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொண்டு ஆரம்பம் முதல் முடிவு வரை நகர்த்திச் செல்கிறது. வெண்முரசு வாசிப்பில் ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் அப்படித்தான் கதாபாத்திரங்களின் வெவ்வேறுபட்ட மனோநிலையை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து இருப்பார்.

இதிகாசங்கள் என்பது மாபெரும் சிகரங்கள் போன்றவை. அவற்றை நாம் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. தொடர்ந்து வாசிப்பதும் ஆழ்ந்து கரைந்து போவதன் வழியே இதிகாசங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதோடு ஒவ்வொருவரின் கதை சொல்லலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது.
ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேசாந்திரி போல மகாபாரதம் நடந்த இடத்தை காணும் ஆவலில் பயணம் செய்கிறார். அக்கதை சார்ந்த பல விஷயங்களை அச்சூழலில் உள்ள மக்களிடம் கேட்டு பெறுகிறார். கதைகளின் புனைவு இழைகளால் நெய்யப்பட்டு யுகயுகமாக சுழன்று வரும் அஸ்தினாபுரத்தையும் அதன் மனிதர்களையும் காண்பதற்காகவே இந்த பயணம் என்று கூறும் இவர் பல்வேறு வகையான சூல் நிலை குறித்து விவரிக்கிறார்.
யுதிர்ஷ்டனுக்கு பகடை ஆடுவதில் உள்ள பலவீனத்தை அவர் யாசகன் என்ற புதிய கதாபாத்திரம் கொண்டு கதை புனைந்து , அக்கதையின் ஊடாக சகுனிக்கு படைக்களம் அமைக்கும் திட்டம் தீட்ட தெளிவு கிடைக்க வைத்திருப்பது அருமை. மிக நேர்த்தியாக வெறும் பசுக்களை மட்டும் கவர வந்தவனை தன் சொற்திறமையால் கவர்ந்த அத்தனை பசுக்களையும் சகுனி பெறும் காட்சி சகுனியை சதித்திட்டத்தின் மன்னவனாக நம் முன் நிறுத்துகிறது.
போர்க்களக் காட்சிகளாகட்டும் , அக்காட்சிகளின் ஊடாக போர் செய்வதற்கு தேர்வான இடம் அதற்கு வேறு என்னென்ன வகை உதவிகள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேண்டும், பிற தொழில் புரிவோர் எத்தனை பேர் அந்த இடத்திற்கு தேவைப்படுவார்கள் என்று குறிப்புகள் சிறப்பு. போர் நடக்கும் போதும் போர் நடந்த பின்னரும் அவ்விடத்தை பற்றிய காட்சி வர்ணனையும் வேறு எங்கும் காட்டப்படாத காட்சிகள்.
கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் மறுபடியும் அரசாட்சியில் ஏறும் பொழுது அஸ்தினாபுரியில் இருந்த திருதன் மற்றும் காந்தாரி அவர்களின் எண்ண ஓட்டங்களை செம்மையாக செதுக்கியிருக்கிறார். நூற்றுவர்களை இழந்த துக்கத்தை திருதனும் தன் சகோதரன் சகுனியை இழந்த துக்கத்தை காந்தாரியும் பீமன் மீது கட்டவிழ்க்க, பீமனும் தன் மகன் கடோத்கஜன் இறப்பின் துக்கத்தை தாள முடியாமல் தன் பெரியப்பா திருதராஷ்டிரன் மீது வன்மம் கொள்கிறான்.
ஒவ்வொரு முறையும் அரசு சார்ந்த நாற்காலி பிரச்சினை வரும்போது எல்லாம் பாண்டவர்கள் வனவாசம் செல்ல நேரிடும். ஆனால் இறுதியாக பாண்டவர்களின் குழந்தைகளான உப பாண்டவர்கள் மற்றும் கௌரவ நூற்றுவர்கள் அனைவரும் இறந்த பின்பு தருமன் அரியணை ஏறுகிறான். அதை காண முடியாமல் புத்திர பாசம் திருதனையும் காந்தாரியையையும் வனவாசம் செல்ல வைக்கிறது. வெவ்வேறு அரசு சூழ்தல் நிகழ்வுகளில் மட்டுமே தன்னை ஆட்படுத்திக்கொண்டு பேரரசர்களாக இருக்க விரும்பும் இதே மன்னர்கள் தான் எல்லாம் முடிந்த பின்னர் காடேகி முற்றும் துறந்தவர்களாக மாறுகின்றனர்.
பாஞ்சாலி தன் கணவர்களோடு வரிசைக்கிரமமாக வாழ முற்படும் நேரங்களில் தருமன் முதற்கொண்டு ஒவ்வொருவருக்கும் அவர்களின் புத்திரர்களை சுமந்து தாயாகிறாள். ஆனால் அந்தப் புத்திரர்களைப் பேணிப் பாதுகாத்து விளையாடக்கூடிய பேற்றை அவளுக்கு குந்தி மறுக்கிறாள். அந்த உப பாண்டவர்கள் அனைவரும் தன் தாய் மாமனான திருஷ்டத்யுமனனிடம் வளர்க்கப்படுகிறார்கள்.

காந்தாரியும் கூட தன் நூற்றுவர்களை வளர்க்கும் பொறுப்பை மாமனாகிய காந்தார இளவரசரான சகுனியிடம் ஒப்படைக்கிறாள். ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்டு அதிகாரத்தின் நிராகரிப்பு கிடைக்கும் பொழுது அவர்கள் எல்லாம் பெருவலியால் ஆட்கொண்டு இறுதியில் சபா பருவம் பன்னிரு படைக்கள முடிவில் திரௌபதி துகிலுரிக்கப்பட்டு துரியோதனனின் குருதியை தன் கேசத்தில் தடவுவேன் என்று வஞ்சம் கொண்டு மகாபாரத போருக்கு வழி கூடுகிறது.
மகாபாரதக் கதை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று சூல் கொள்வது முதல் அவர்களின் இறப்பு வரை கதாபாத்திரங்கள் மூலமாகவே கதையை விவரிக்கும் இப்பாங்கானது ஆசிரியரின் எழுத்து பேராண்மைக்கு பெரிய சாட்சியாய் அமைகிறது. நீங்கள் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் உங்கள் வாசிப்பை தொடரலாம். குறிப்பிட்டு யாரைப் பற்றி நீங்கள் தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அது சார்ந்த கருத்துக்களை மிக துல்லியமாக தொகுத்து அளித்திருக்கிறார்.
கதாபாத்திரங்கள் சார்ந்த அவரது பார்வையாக இந்த நாவல் நமக்கு கண் முன் விரிந்தாலும், இதுவரை பார்த்திராத கோணத்தில் கதாபாத்திரங்களை அறிவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பை தருகிறது இவ்வாசிப்பு. படகோட்டியாக அறிமுகமாகும் கிருஷ்ண துவைபான வியாசன் நாவலின் இறுதியிலும் வந்து நம்மை துவக்கத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
மொத்தத்தில் இந்த நிலத்தில் வாழ்ந்தவர்களின் கதைகளை செவி வழியாக தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு இது போன்ற படகோட்டிகள் எப்போதும் நமக்கு தேவைப்படுவார்கள். மகாபாரதக் கதைகளை கேட்டு கேட்டு திளைத்தவர்களுக்கு இது ஒரு மீளாய்வு. இதுவரை கேட்டிராத இளம் தலைமுறையினருக்கு இந்நாவல் ஒரு கதம்பமான இதிகாச விருந்து. வாசித்துப் பாருங்கள்.
பா விமலா தேவி , பட்டுக்கோட்டை


