இந்திய அணி 162 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை கோலியும் ஜெயிஸ்வாலும் தொடங்கினார்கள். ஆடுகளத்தின் குறைவேகத்தைப் பயன்படுத்தி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க இரண்டாவது ஓவரிலேயே வாரிகனை பந்துவீச அழைத்தார் பிராத்வெயிட். ஹோல்டர் பந்தில் ஒரு அட்டகாசமான ஆன் டிரைவ் அடித்து நாளின் முதல் பவுண்டரியை அடித்தார் ஜெயிஸ்வால். நன்றாக விளையாடிய அவர் அறிமுக டெஸ்டிலேயே 150 ரன்களைக் கடந்தார். 125-வது ஓவரில் வாரிகன் பந்துவீச்சில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சிக்ஸரை ஜெயிஸ்வால் அடித்தார். அறிமுக ஆட்டத்திலேயே இரட்டை சதம் அடிப்பார் என்று எதிபார்க்கப்பட்ட அவர் ஜோசப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய துணை கேப்டன் ரஹானே ஒரு பொறுப்பற்ற ஷாட் விளையாடி வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இஷான் கிஷனுக்கு முன்னதாக களமிறங்கிய ஜடேஜா ஆரம்பம் முதலே நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து விளையாடினார். 147 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த கோலி மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக தனது ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டினார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர்தான் பந்துவீச வந்தாலும் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் கார்ன்வெல். அவருடைய வேகத்தையும் பவுன்ஸையும் தாக்குப்பிடிக்க முடியாமல் இஷான் கிஷன் தடுமாறினார். இஷான் கிஷன் தனது முதல் ரன்னை எடுத்ததும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக ரோஹித் சர்மா அறிவித்தார். 45 ஓவர்கள் வீசிய வாரிகன் 106 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 271 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்தியாவை மீண்டும் பேட்டிங் செய்ய வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரிலேயே அஸ்வினிடம் பந்தைக் கொடுத்தார் ரோஹித் சர்மா. நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருந்த தேஜ்நரைனை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. நேற்று ஒரு பிரமாதமான ஸ்டம்பிங் செய்த இஷான் கிஷன் இன்று கீப்பிங்கில் தடுமாறுவதைப் பார்க்க முடிந்தது. ஆடுகளத்தில் திருப்பம் தாறுமாறாக இருந்ததால் அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து அஸ்வின் பந்துவீசினார். தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்த பிராட்வெயிட் அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின்-ஜடேஜா இணையின் சுழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியாமல் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் தடுமாறினார்கள். ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடி இந்திய சுழலர்களின் ரிதத்தை குலைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் ஒருவரும் விளையாடவில்லை.
அஸ்வினின் அரவுண்ட் த விக்கெட் வியூகத்தில் பிளாக்வுட் ஆட்டமிழந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய அதனேஸ் களமிறங்கினார். அடுத்த ஓவரிலேயே ரெய்ஃபர் விக்கெட்டை வீழ்த்தி தன் பங்குக்குப் பாதகமில்லாமல் ஜடேஜா பார்த்துக் கொண்டார். அதனேஸ் – டா சில்வா இணை நம்பிக்கையுடன் ரன் சேர்க்கத் தொடங்கிய நிலையில் சிராஜைப் பந்துவீச அழைத்தார் ரோஹித். எல்லா பந்துகளையும் பேக்புட்டில் ஆடிக் கொண்டிருந்த டா சில்வாவை ஒரு முழு நீளப்பந்தில் வீழ்த்தினார் சிராஜ். விக்கெட்டுகள் ஒருபக்கம் சீட்டுக் கட்டுகள் போல சரிந்தாலும் அதனேஸ் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர் அஸ்வின் விரித்த வலையில் சிக்கி ஜெயிஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தோல்வி உறுதி என்றாகிவிட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப் இருவரும் அடித்தாடத் தொடங்கினர். சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஜோசப். முடிந்தவரைக்கும் போரடிப் பார்ப்போம் என்ற எண்ணமே இல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர்கள் விளையாடினார்கள். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் முயற்சியில் வெற்றி கிட்டாமல் அஸ்வின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார் வாரிகன். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மேற்கிந்தியத் தீவுகள் அணி 280 ரன்களை மட்டுமே எடுத்தது. டெஸ்ட் ஆட்டத்தில் அதிக 10 விக்கெட்டுகள் எடுத்த வரிசையில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் அஸ்வின்; ஒட்டுமொத்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ரோஹித் – ஜெயிஸ்வால் இணை 229 ரன்கள் குவித்து ஒரு நல்ல அடித்தளத்தை இந்திய அணிக்கு அமைத்துக் கொடுத்தது. தனது அறிமுக ஆட்டத்திலேயே 171 ரன்கள் குவித்த ஜெயிஸ்வால் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

