சென்னை தலைமைச் செயலகத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள வானுயர்ந்த கொடிமரத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு அன்று உரையாற்றுகிறார். சமுக சேவையாற்றுவோர், சாதனையாளர்களுக்கு விருதுகளையும் பாராட்டு சான்றுகளையும் வழங்குகிறார் முதலமைச்சர்.
தேசியக் கொடிக்கம்பம்..!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
தலைமைச் செயலகத்தில், 2.8.2023 அன்று “தேசிய கொடி கம்பம்“ புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது, தேசிய கொடிமரத்தினை புதுப்பித்தல் பணி ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கொடிமர நடைமேடை & பிணைகயிறு புதுப்பித்தல் பணி ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
கொடிமரத்தின் விவரம்..!
முத்தமிழறிஞர் கலைஞர், தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது.
1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலே ஆளுநராக இருந்த ‘யேல்‘ காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. மரக்கம்பம் பழுதடைந்ததால், 1994 ஆண்டு 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் L & T நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது.
மூன்று அடுக்குகள்..!
கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.
கொடி கம்பம் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.
கொடி கம்பம் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அமைச்சருடன் ஆய்வு செய்த அலுவலர்கள்..!
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் மேனகா, செயற்பொறியாளர் குழந்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

