spot_img
More
    முகப்புUncategorized’’செந்தில் பாலாஜி சிகிச்சை; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது..!’’உச்சநீதிமன்றம்

    ’’செந்தில் பாலாஜி சிகிச்சை; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது..!’’உச்சநீதிமன்றம்

    ’’செந்தில் பாலாஜி சிகிச்சை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது’’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக் கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்கும் வகையில், அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது அதிருப்தியளிப்பதாக கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்களின் கருத்தைத் தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.. வேண்டுமானால், அமலாக்கத்துறையும் ஒரு மருத்துவக் குழுவை வைத்து ஆய்வு செய்யலாம்; சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அதற்கு அனுமதி அளித்திருக்கிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை, ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறையினர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜூன் 13 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கைது செய்தனர். பின்னர் அவரை, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சென்னை மாவட்ட முதன்மை அமைர்வு நீதிபதி எஸ்.அல்லியை மருத்துவமனைக்கே நேரில் வந்து, செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். அவர் செந்தில் பாலாஜி, ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனிடையே, தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ள தாக கூறி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அத்துடன் தனது கணவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த வழக்கில், இருதரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, “அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜி-யை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனு மதி அளித்து உத்தரவிட்டனர்.

    மேலும் மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழு வும் ஆராயலாம் என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக, செந்தில் பாலாஜியை அம லாக்கத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க 8 நாட்களுக்கு அனுமதி வழங்கிய முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லி, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, செந்தில் பாலாஜி யை மருத்துவமனையில் மட்டுமே வைத்து விசாரிக்க வேண்டும் வெளியே அழைத்து செல்லக்கூடாது. துன்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தது.

    எனினும், செந்தில் பாலாஜியிடம் எந்த விசாரணையும் நடத்தாத அமலாக்கத்துறை, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தங்களின் மேல்முறையீட்டை அவசர வழக்காகவும் விசாரிக்குமாறு கூறியது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், புதனன்று (ஜூன் 21) நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் போது காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? என அமலாக்கத்துறையினரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்விக்குரியது; ஏனெனில், விசாரணையை தாமதப்படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள் என்று வாதிட்டார்.

    அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரி வித்தார். இதயத்தில் 4 அடைப்புகளை எவ்வாறு பொய்யாக காட்ட முடியும்? சிகிச்சையில் உள்ளவர் மீது போலி குற்றச்சாட்டுகளை அமலாக்கத்து றை முன் வைக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து, உடல்நிலை சரியில்லை என மருத்துவ அறிக்கை அளித்த பிறகும் காவலில் எடுக்க வேண்டும் என்கிறீர்களா..? என கேட்ட நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிக்கிறது; செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தர விட்ட உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது;

    செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்பே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்; மீண்டும் மருத்துவக் குழு அமைத்து அவரை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கும் முழு அதிகாரம் உள்ளது; எனவே, மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்கள் கருத்தைக் கொண்டுதான் விசாரணை நடத்த முடியும்; உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம்; அந்த அடிப்படையில், தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வதுதான் சரியாக இருக்கும். உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும்” என்று உத்தரவிட்டனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments