spot_img
More
    முகப்புUncategorized’’சிதம்பரம் தோழர் மணிவண்ணன் திடீர் மறைவு..!’’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் இரங்கல்

    ’’சிதம்பரம் தோழர் மணிவண்ணன் திடீர் மறைவு..!’’ தமிழ்த்தேசியப் பேரியக்கம் இரங்கல்

    ’’சிதம்பரம் தோழர் மணிவண்ணன் திடீர் மறைவு பேரியக்கத்திற்குப் பேரிழப்பு’’ என்று தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

    தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் இரங்கல் அறிக்கை:

    தமிழ்த்தேசியப் பேரியக்கம் (தொடக்கத்தில் எம்.சி.பி.ஐ.) உருவாக்கப்பட்ட காலத்தில், இளம் வயதில் இணைந்ததிலிருந்து சிதம்பரத்தில் தொடர்ந்து முன்னணிச் செயல்பாட்டாளராக விளங்கிய தோழர் ச. மணிவண்ணன் இன்று (21.06.2023) அதிகாலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இராசா முத்தையா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு அகவை 60.

    திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 15 நாட்களாக அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பயனின்றி, அவர் நம்மைவிட்டுப் பிரிந்தார்.

    தொடக்க காலத்தில், ”கண்ணோட்டம்” என்ற பெயரில் பதிவு பெறாத இதழாக நமது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாத இதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அவ்விதழில் “மூன்றாம் பக்கத்து மூலை” என்ற தலைப்பில், கூர்மையான அரசியல் செய்திகளை தொடர்ந்து எழுதியதிலும், அவ்விதழை வடிவமைப்பதிலும் சிறப்பான பங்காற்றியவர் தோழர் மணிவண்ணன்.

    எம்.சி.பி.ஐ. முதலில் கொண்டு வந்த “உதயம்” – கலை இலக்கிய இதழை மிகச் சிறப்பான வடிவத்தில், சென்னையில் அச்சேற்றிக் கொண்டு வந்ததில் அவரது பணி முகாமையானது.

    தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இளைஞர் அமைப்பான, தமிழக இளைஞர் முன்னணியின் துணைத் தலைவர், உடற்பயிற்சி மற்றும் கராத்தே தற்காப்புக் கலை ஆசிரியர், சிதம்பரத்தைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை இணைத்து பல்லாயிரம் மரக் கன்றுகளை ஒரே நாளில் நட்டு, பல தொண்டு நிறுவனங்களால் பாராட்டப் பெற்ற செயல்பாட்டாளர், சிதம்பரத்தில் சிறந்த அச்சகங்களில் ஒன்றான “மணிபாரதி” அச்சகத்தின் உரிமையாளர், அச்சக உரிமையாளர் களின் தமிழ்நாடு தழுவிய சங்கத்தின் பொறுப்பாளர், சிதம்பரத்தில் சிந்தனைப் பட்டறையாக “தகவல் நேரம்” நடத்திய ஒருங்கிணைப்பாளர், சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் – என பல தளங்களில் பணியாற்றிய பன்முகச் செயல்பாட்டாளர் தோழர் மணிவண்ணன்.

    பேரியக்கத் தலைவர்களின் தொடக்க கால புகைப்படங்களை நேர்த்தியாக எடுத்தவரும் அவரே. தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, தீ்ண்டாமை ஒழிப்பு – தமிழர் ஒற்றுமை பரப்புரை போன்ற பல நிகழ்வுகளில் சிதம்பரம் நகரத்திலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் மணிவண்ணன் எழுதிய சுவரெழுத்துகள் வலுவான பரப்புரையாக அமைந்தன.

    தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட 1990களில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட தமிழின உணர்வு அமைப்புகள் அரசின் கடும் அடக்குமுறைகளைச் சந்தித்தன. அந்த நெருக்கடியான காலகட்டத்தில், அன்று சிதம்பரத்தில் இயங்கிய பேரியக்கத்தின் தலைமை அலுவலகப் பொறுப்பாளராக திறம்பட செயலாற்றியவர் தோழர் மணிவண்ணன்.

    தஞ்சையில், வெறும் வெற்று ஆரவாரத்திற்காக செயலலிதா ஆட்சி தமிழ் மாநாடு நடத்தியபோது, அதைக் கண்டித்து நடைபெற்ற எழுச்சிமிகுப் போராட்டத்தில் பங்கேற்று, திருச்சி சிறையில் அடைபட்டவர்களில் தோழர் மணிவண்ணனும் ஒருவர், சிறையிலும் தமிழ்நாடெங்கிலுமிருந்து வந்திருந்த உணர்வாளர்களுக்கு உடற்பயிற்சி அளித்து, அவர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

    பேரியக்கத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும், கூர்மையான ஆலோசனைகளை வழங்கியதோடு, சிதம்பரத்தில் புதிதாக இணைந்த இளைஞர்களை இயக்கப் பண்பாட்டில் நெறிப்படுத்தியதில், சிறப்பான பங்காற்றியவர் மணிவண்ணன்.

    மறைவிற்குப் பிறகும் தன் இரு விழிகளையும், உடலையும் கொடையாக வழங்கியவர்.

    தோழர் மணிவண்ணனின் மறைவு, யாரும் எதிர்பார்த்திராத பேரிழப்பாகும். தோழர் மணிவண்ணனின் அன்புத் துணைவியார் பாரதி, மகள்கள் வையவி, வானவி ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments