கோரமண்டல் ரெயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய உதயநிதி ஒடிசா விரைந்தார். விடிய விடிய மீட்பு பணிகள் நடந்தது. பலி எண்ணிக்கை 233 என்று தகவல் வெளியாகி இருக்கிறது. காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் நேற்று இரவு சுமார் 6.51 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் மூன்று ரெயில்கள் மோதியது.
சென்னை ரெயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து ஒடிசா முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை ஒடிசா விரைய வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் உதயநிதி உடன் செல்கிறார். இந்தக் குழு இன்று காலை விமானம் மூலம் ஒடிசா சென்றடைகிறது. இந்நிலையில், கோரமண்டல் ரெயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

