உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி குறித்து டிராவிட் கூறியதாவது:
“இது 469 ரன்கள் குவிப்பதற்கான ஆடுகளம் கிடையாது. முதல் நாள் கடைசிப் பகுதியில் 157 ரன்கள் கொடுத்தது ஏமாற்றமளிக்கிறது. எந்த லைனில் போட வேண்டும், எந்த லெங்த்தில் போட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். லெங்த்தில் பெரிய தவறுகள் இல்லை. நிறைய பந்துகளை வைடாக வீசினோம். ஹெட்டுக்கு நிறைய இடைவெளி கொடுத்து வீசினோம்.
இந்த ஆடுகளத்தில் நேற்றைய ஆட்டத்தில் நாங்கள் விளையாடிய மூன்று, நான்கு ஷாட்களில் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.
நிச்சயமாக இது கடினமான இலக்குதான். எவ்வளவு பின்னடைவில் இருந்தாலும், இலக்கை அடைவதில் எப்போதும் ஒரு நம்பிக்கை இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய டெஸ்ட் ஆட்டங்களில் நாங்கள் கடினமான நிலையிலிருந்துதான் போராடி வந்துள்ளோம்.
ஆனால், இந்த ஆட்டத்தில் இரண்டு நாள்கள் நாங்கள் பின்னடைவில் இருந்தோம். இருந்தாலும், விடாமுயற்சியோடு போராடினோம். பெரிய பாட்னர்ஷிப்பின் தேவை இருந்தது. அதற்கான சிறந்த வீரர்களும் இருந்தார்கள். எனினும், ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது. அவர்கள் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள், இது கிரிக்கெட்டில் நடப்பது யதார்த்தம்.
பந்துவீச முடிவெடுத்தற்கான காரணம், ஆடுகளத்தில் புற்கள் இருந்தன, சூழலும் மேகம் சூழ்ந்திருந்தது.

இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆட்டம் செல்லசெல்ல பேட்டிங் செய்வது எளிமையாகும். நான்காம் நாள், ஐந்தாம் நாளில் பெரிய உதவிகள் இருக்காது. அவர்களை 70/3 எனக் கட்டுப்படுத்திவிட்டு, அதிலிருந்து ஆட்டத்தைத் தவறவிட்டோம்.
அவர்களை ஒரு 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். நாங்களும் ஆட்டத்தில் இருந்திருப்போம். மூன்றாவது, நான்காவது இன்னிங்ஸ் நெருக்கடியுடன் நகர்ந்திருக்கும்.
எட்ஜ்பாஸ்டனில் கடந்தமுறை விளையாடியபோதும், பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. 300-க்கும் மேற்பட்ட ரன்கள் சேஸ் செய்யப்பட்டன. 444 ரன்கள் என்பது அதிகம்தான். அவர்களை ஒரு 320 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், இலக்கை அடைந்திருக்க முடியும். டாப்-5 வீரர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள். இதே வீரர்கள்தான் ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் வெற்றி தேடித் தந்துள்ளார்கள்.
இவர்கள் தரத்துக்கேற்ப விளையாடவில்லை. இதைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறோம். சில ஆடுகளங்கள் சவாலானதாக இருந்தது. இது (ஓவல்) நல்ல ஆடுகளம் என்பதை நான் ஒப்புக்கொள்வேன். மற்ற இடங்களில்தான் கடினமான ஆடுகளங்கள் இருந்துள்ளன. இந்திய ஆடுகளங்களுமேகூட கடினமானதாக இருந்துள்ளன.
பேட்டிங் சராசரியைப் பார்க்கும்போது இவற்றையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்திய வீரர்களுடைய பேட்டிங் சராசரி மட்டும் குறையவில்லை. இருந்தபோதிலும், பேட்டர்களினுடைய செயல்பாடு விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ரன்களைக் கட்டுப்படுத்துவதற்கு பந்துவீச்சாளர்களிடம் ரன்கள் இருந்தால்தான், டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற முடியும்.
முதல் பந்திலிருந்தே பந்தைத் திருப்ப வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கும் கிடையாது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. டிராவுக்காக விளையாட முடியாது. புள்ளிகளுக்காக விளையாடும் நேரத்தில் சில தருணங்களில் சிலவற்றை துணிந்து செய்தாக வேண்டும். நாங்கள் மட்டும் துணிந்து செயல்படவில்லை. ஆஸ்திரேலிய ஆடுகளங்களைப் பார்த்தால் தெரியும். பிரிஸ்பேன் ஆடுகளத்தைப் பார்க்க வேண்டும்.
ஐந்து நாள்களுக்கு நடைபெறும் வகையிலான ஆடுகளங்களையே ஆஸ்திரேலியா தயார் செய்து வந்தது. ஆனால், தற்போது அவர்களது சொந்த நாட்டிலேயே மூன்று நான்கு நாள்களில் ஆட்டம் நிறைவடையும் வகையிலான ஆடுகளங்களைத் தயார் செய்கிறார்கள். எல்லா ஆட்டங்களிலும் புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்கிற நெருக்கடி சில நேரங்களில் இருக்கும். எனவே, துணிந்துதான் செயல்பட வேண்டும்.
அரையிறுதி முதல் இறுதி ஆட்டம் வரை என கோப்பை வெல்வதில் நெருங்கி வருகிறோம். ஆனால், அன்றைய தினத்தில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் வெளிப்படுத்துவதில்லை. வீரர்களைக் காட்டிலும் கோப்பை வெல்ல முனைப்பு காட்டுபவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது. எனவே, அவர்களது முயற்சிகளைக் குறைகூற முடியாது.
ஒரு பயிற்சியாளராக வீரர்களைத் தயார்படுத்துவதற்கான நேரத்தில் குறைகள் இருக்கின்றன. ஆனால், இதுதான் நிதர்சனம். அட்டவணை மிகவும் நெருக்கமாக உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டை விளையாடும்போது, மூன்று வாரங்களுக்கு முன்பே இங்கு வந்து பயிற்சி ஆட்டம் விளையாடுவது மிகச் சரியானதாக இருக்கும். ஆனால், காரணங்கள் கூற விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். ஐந்து நாள்களில் அவர்கள் எங்களைவிட சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள்” என்றார் ராகுல் டிராவிட்.

