மணிரத்னம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்! பலரால் முடியாது என கைவிடப்பட்ட ஒரு காவியத்தை முடிந்தவரை திரைப்படமாக உருவாக்கி சாதித்தமைக்கு!
தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருமே சிறப்பாக தன் பங்களிப்பை அளித்துள்ளனர்! மணிரத்னம் அப்படி வேலை வாங்கி உள்ளார் என சொன்னாலும் சரியாகவே இருக்கும்!
வரலாற்றில் வாழ்ந்த கதாபாத்திரமான ஆதித்த கரிகாலனுக்கு திரையில் உயிர் கொடுத்தவர் விக்ரம் என்று சொன்னால் அது சால பொருத்தம்! என்னே கம்பீரம்!!
அவர் நடிப்பு பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை! இனியாவது முக அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வார் என நம்புகிறேன்!
ராஜராஜசோழனாக பட்டப்பெயர் கொண்டு அரியணை ஏறும் அருள்மொழிவர்மன் என்ற இளவரசன் இளவயதில் எப்படி இருந்திருப்பான் என்பதை நாவலில் சிறப்பாக சொல்லி இருப்பார் கல்கி! அதை முடிந்தவரை திரையில் கொண்டு வந்த ஜெயம்ரவிக்கு பாராட்டுக்கள்! விவேகமுடன் கூடிய வீரம், அரசியலில் சரியானதொரு கண்ணோட்டம், தன் சோழ மக்களிடம் நன்மதிப்பை பெறுவது என அருள்மொழிவர்மனின் வரலாற்று உண்மைகளை திரையில் சரியாக பிரதிபலித்து உள்ளார்!
நாவலை படித்தவர்களுக்கு கதையின் நாயகன் வல்லவரையன் வந்தியதேவன் என்பது தெரியும்! இன்றளவும் பெண்களின் மனம்கவர் கள்வன் வந்தியதேவனாக கார்த்தி தன் அசால்ட்டான செய்கைகளால் ரசிக்கும்படி திரைப்படத்தில் நடித்துள்ளார்!
குந்தவையாக திரிஷா! அதெப்படி இப்பவும் இவ்ளோ அழகா இருக்கீங்க னு புரியவே இல்ல! செயற்கை அழகு இல்லாமல் குந்தவையாக கம்பீரமான சோழ இளவரசியாக, தன் சகோதரர்களை காப்பாற்ற முயற்சிக்கும் பெண்ணாக வசிகரிக்கிறார்!
கடைசியாக என் அழகு செல்லம் நந்தினி
முதல்பாகத்தில் நந்தினிக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே என சற்று வருத்தமாக இருந்தது! இரண்டாம் பாகத்தில் நந்தினி தான் எல்லாமே என வடிவமைத்த மணிரத்னம் அவர்களுக்கு கோடானகோடி நன்றி!
நாவலில் ஜொலித்த நந்தினியை திரையில் காட்டவேண்டும் என்பது சாதாரணமான காரியமல்ல! ஐஸ்வரியா ராய் அவர்கள் நடிப்பு உச்சம்!
நந்தினி ஒரு பாவப்பட்ட பெண் என்பதை சரியாக பார்வையாளர்களுக்கு கடத்திய விதத்தில் இந்த படம் வெற்றி பெற்று விட்டது! ஆதித்த கரிகாலன் பழுவூர் நாகப்பாம்பு என சொல்வது சால பொருந்தும்! அதன் கவர்ச்சி அதிபயங்கரம்!
மந்தாகினி தேவி
படத்தில் அருள்மொழிவர்மனை காப்பாற்றும் காட்சியிலும், சுந்தரசோழரை காப்பாற்ற போராடும் போதும் அழுதே விட்டேன்! ஐஸ்வர்யா ராய் முதிய கதாபாத்திரமாக நடித்தது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்! தாய்மை பாசம், காதலன் நேசம் ஆகியவற்றை தன் ஊமை மொழியால் கண்களாலேயே கடத்தும் வல்லமை ஐஸ்வரியா ராய்-க்கு மணிமகுடம் இந்த படத்தில்!
நந்தினி எப்போது திரையில் இருந்து மறைந்து போனாலோ அப்போதே எனக்கு படம் முழுமை ஆகி விட்டது! பின்வந்த காட்சிகள் அனைத்தும் அதிகப்படி தான் எனக்கு!
கடைசி போர்க்காட்சி என்பது மதுராந்தகன் திருந்தி சோழ சாம்ராஜ்ஜியத்தின் பக்கம் நிற்க வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று!
சேந்தன் அமுதனை உத்தம சோழனாக முடி சூட போர்க்காட்சி தேவைப்பட்டிருக்காது! ஆனால் மணிரத்னம் தன் அதிமேதாவி தனத்தால் நாவல் படித்தவர்களுக்கும் திருப்புமுனையாக இருக்க வேண்டும் என ரொம்ப மூளையை கசக்கி இந்த காட்சியை சேர்த்து உள்ளார்!
ஆதித்த கரிகாலன்-நந்தினி சந்திப்பு
வந்தியதேவன்-குந்தவை சந்திப்பு காட்சிகள் காலாகாலத்திறகும் பேசப்படும்!
நந்தினியை கண்டு நான் திருப்தி அடைந்தேன்! I am satisfied!
பூங்குழலி நீ நாவல் படித்தவர்களுக்கு ராணி தான் சமுத்திரக்குமாரி! என்றும் நீ ராணி தான்!
கடைசியாக மணிமேகலை! நீ நாவலிலேயே இருப்பது நல்லது கண்ணே!
கடைசியாக நாவல் நாவல்தான்! கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க முடியாது என்ற கூற்று இன்றும் நிரூபனமானது! இது மணிரத்னம் எழுதிய பொன்னியின் செல்வன்!
# முகநூல் : ஜெகதீஸ் குமார்.எஸ்

