Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
’’பெரியார் என்ற தத்துவத்தினுடைய விளைவு தான் இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு..!’’ – திருச்சி சிவா - Madras Murasu
spot_img
More
    முகப்புUncategorized’’பெரியார் என்ற தத்துவத்தினுடைய விளைவு தான் இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு..!’’ - திருச்சி சிவா

    ’’பெரியார் என்ற தத்துவத்தினுடைய விளைவு தான் இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு..!’’ – திருச்சி சிவா

    தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பொது நலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 16 ஆம் ஆண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசியதாவது:

    ஒரு நூலகத்தின் 16 ஆவது ஆண்டு விழா என்கிற பெயரிலே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துகிற ஆற்றலும், திறமையும், சாமர்த்தியமும் நம்முடைய இயக்கத் தோழர்களுக்கு மட்டும்தான் உண்டு, பொதுக்கூட்டம் என்று ஒரு வீட்டுக்குள் நடத்துபவர்களும், மாநாடு என்று ஒரு மன்றத்துக்குள்ளே நடத்துபவர்களும் உண்டு. ஆனால், இங்கே ஒருவருடைய நினைவு நாளில் ஒரு நூலகத்தை திறந்து அது 16 ஆண்டுகளைத்தொட்டு இப்படி ஒரு நூலகம் வேறெங்காவது இருக்கிறதா என்கிற வியப்பை இந்த சாலையில் போகிறவர்களுக்கு ஏற்படுத்துகிற அளவிற்கு வெறும் செய்தித்தாள் மட்டுமே இருக்கிற நூலகமாக இல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிற மாணவர்களுக்கு தேவையான நூல்களையும், வசதி வாய்ப்புகளையும், தருகின்ற படிப்பகமாக மிகப்பெரிய நூலகமாக இது விளங்கி வருகின்றது.

    திராவிட இயக்கம் தலையெடுக்க ஆரம்பித்த பிறகு தான் எல்லோரும் படிக்கவேண்டும் எல்லோரும் படிக்க வைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தலைத் தூக்கியது. வரலாற்று ரீதியாக சொல்லவேண்டுமென்றால் நம்முடைய இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பவர்கள், உரிமைகள் கோருவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான தகுதியும் யோக்கியதையும் இல்லை என்றிருந்த சமுதாயத்தில் மிகப்பெரிய பிரளயமாக தோன்றிய திராவிட பேரியக்கம் நீதிக்கட்சியாக உருவாகி திராவிடர் கழகமாக சமுதாய சீர்திருத்த இயக்கமாக தந்தை பெரியார் தலைமையில் மலர்ந்து மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்தது. அய்யா பெரியார் அவர்களுடைய கொள்கைகள் நடைமுறைக்கு வர வேண்டுமென்றால் அதற்கு அரசியல் பாதை தான் ஏற்றது என்று அறிஞர் அண்ணா தீர்க்கமாக யோசித்து தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் பேரியக்கமாக மாறி தேர்தல் வழியில் ஆட்சியிலே அமர்ந்து இன்றைக்கு உயர்ந்து இந்தியாவிலேயே இன்றைக்கு பல துறைகளில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு தான் என்று அளவிற்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் நூற்றாண்டுகளை கடந்து வந்திருக்கிற இந்த திராவிட பேரியக்கம்.

    திராவிடர் கழகம் 

    இந்தப் பகுதியிலே வாழ்கிற மக்கள் நடுநிலையோடு எண்ணிப் பார்க்கிற போது இந்த உண்மையை உணர முடியும். நம்மை விட பெரிய மாநிலங்கள் எல்லாம் இன்னும் பின்தங்கித் தான் இருக்கின்றன. மிகப் பெரிய தலைவர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள், இந்திய அளவிலே பெரிய பதவிகளை அலங்கரித்து இருக்கிறார்கள், மக்கள் தொகை மட்டுமல்ல, அவர்களுக்கு பல்வேறு வகையான வசதி வாய்ப்புகளும் உண்டு. இயற்கை வளம் உண்டு, மண்வளம் உண்டு, தொழில் வளமெல்லாம் உருவாக்கிக் கொள்வார்கள். எல்லாவற்றையும் அங்கேயே கொண்டு போய் கொட்டுவார்கள். ஆனால் தமிழ்நாடு கண்டிருக்கக்கூடிய மனித வளர்ச்சி என்கின்ற மனித மேம்பாட்டு வளர்ச்சி என்பது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதற்கு ஒரே காரணம் நாம் என்றென்றைக்கும் நினைத்து பார்க்க வேண்டிய தலைவர்கள் டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம். நாயர், பிட்டி, தியாகராயர் இவர்களுடைய வரி சையில் அந்த இயக்கம் கொஞ்சம் பொலிவிழந்த நேரத்திலே அதனை தூக்கிப் பிடித்து திராவிடர் கழகம் என்ற அமைப்பு மூலமாக தமிழ்நாட்டை விடிய வைத்த பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும். அந்த பெரியார் மறைந்து இன்றைக்கு சற்று ஏறக்குறைய 50 ஆண்டுகளை தொடப்போகிறது. ஆனால் யாராலும் எண்ணிப் பார்க்க முடியாது ஒரு மனிதன் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் ஒரு வலிமையான சக்தியாகத் திகழ்கிறார். இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பெரியார் என்ற தத்துவத்தினுடைய விளைவு தான் இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு என்கின்ற அளவிற்கு பெரியார் அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதிலே முக்கியமான நிகழ்வு தான் இன்றைக்கு கொண்டாடப்படுகின்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா.

    வரலாற்றிலே நாம் இந்த மண்ணை ஆண்டிருக்கிறோம் என்று சொல்லலாம். ஆண்டு கொண்டு இருந்த இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பின்னர் வேறு இனத்திற்கு பல்வேறு காரணங்களினால் அடிமையாகி, இருந்ததை இழந்து, இழந்ததை உணராமலேயே இருந்ததை மீண்டும் மக்களுக்கு உணர்த்தி அவர்களை சுயமரியாதையோடு நடமாடச் செய்த பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும். அதைத்தான் நம்முடைய அதிரடி அன்பழகன் இங்கே பேசுகிற பொழுது சொன்னார் சுயமரியாதை என்றசொல்லுக்கு ஈடாக இன்னொரு சொல் உலக மொழிகளில் இல்லை என்று.

    மனிதனுக்கு அடிப்படையில் தேவை மானம்- அவனுக்கு தேவை சுயமரியாதை என்று சொல்லி, ஊட்டி வளர்த்து ஒடுங்கி கிடந்தவர்களை உரிமைக்குரலாக மாற்றியவர் தந்தை பெரியார். அவருடைய முக்கியமான போராட்டங்களில் ஒன்றுதான் வைக்கம் போராட்டம். இது ஒன்று மட்டும் அல்ல. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் 1938 இல் தமிழ்நாட்டிலே தொடங்கிய பொழுது அதற்கு தலைமை ஏற்று எல்லோரையும் ஒருங்கிணைத்த பெருமைக்குரியவரும் தந்தை பெரியார். அதே போல தொடர்ந்து இதழ்களின் மூலமாக, எழுத்துக்களின் மூலமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, எதிர்த்தவர்களை தன்னு டைய வலிமையான படையின் மூலம் சந்தித்து, அதன் மூலமாக விடுதலை தேடித்தந்த அந்த பெரியார் நடத்திய விடுதலை நாளேட்டிற்கு ஆசிரியராக, அந்த இயக்கத்தின் தலைவராக இன்றைக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருக்கிறார்.

    எதுவுமே கிடைக்காது

    நான் அடிக்கடி சொல்வேன் – பொதுவாக ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் ஒரு தனி மனிதன் கூட இன்னொரு மனிதனை அணுகுவது வழக்கம். இவரால் ஏதாவது கிடைக் கும் என்றால் அவரை தேடிச் செல்வது, இவரால் நமக்கு ஏதாவது துன்பம் நேரும் என்றால் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்பது என்பதற்காகவே பலருக்கு உறவும் பழக்கமும் இருக்கும். ஆனால் எதுவுமே கிடைக்காது என்று தெரிந்தும் ஒரு அமைப்பிலே இருக்கிறார்கள் என்றால் அது திராவிடர் கழகத்தில் மட்டும் தான். இங்கே உழைப்பதும் போராடுவதும் மட்டும்தான்- தங்களுடைய கடமை என்று இருக்கின்ற அந்த பேரியக்கத்தின் சார்பில் இன்றைக்கு இந்த விழாவினை நடத்துகிறார்கள். அதிலே நம்முடைய பூபதி அவர்களினுடைய 16 ஆவது ஆண்டு நினைவு நாள்.

    1982 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணிக்கு என்று ஒரு அமைப்பு இப்போது இருப்பதைப் போல கிளைக்கழக அளவில், நகர, ஒன்றிய அளவில் மாவட்ட அளவிலே கூட தோன்றாத காலத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 5 பேர் கொண்ட குழுவாக இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நானும் இன்னும் மூன்று பேரும் கிளம்பிய நேரத்தில் அய்ந்து பேர் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றது மூன்றே பேர்தான் தி.மு.கழகத்தின் இன்றைய தலைவர் தளபதி அவர்கள், நான். இளம்வழுதி.

    எங்களோடு தொடர்ந்து அந்த சுற்றுப்பயணத்திலே பெரும்பாலான இடங்களுக்கு வந்தது பூபதி மட்டும்தான். பின்னர் பொய்யாமொழி எங்களோடு சேர்ந்து கொண்டார். அப்போது இந்த அமைப்பு மாவட்ட அளவில் அமைப்பாளராக உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் தஞ்சை மாவட்டத்தில் அமைப்பாளராக இன் றைக்கு சட்டமன்ற உறுப்பினராகவுள்ள அண்ணாதுரை அவர்களும், துணை அமைப்பாளர்களாக அய்யராசுவும், தம்பி அசோகனும் இருந்தார்கள். சந்திரசேகரன் அப்போது பெங்களூரில் சட்டம் படித்து அப்போதுதான் திரும்பி இருந்தார். பின்னர் அவர் 1989 தேர்தலில் நடிகர் திலகத்தை எதிர்த்து தேர்தலில் நின்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபலமான ஒரு வேகமான இளைஞராக அவரும் அறிமுகமாகிறார்.

    கையிலே ஒரு பையோடு நீண்ட ஜிப்பா அணிந்து எப்போதும் குரலிலேயே ஒரு கம்பீரம் அதே நேரத்திலே அதட்டல் என்ற தோரணையோடு பேசுகிற பூபதிதான் எங் களுக்கு நினைவுக்கு வரும். எல்லா இடங்களிலும் எங்களோடு இருப்பார் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தளபதிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்களில் ஒருவர் பூபதி. அந்த நேரங்களில் எல்லாம் நாங்கள் அவருடைய வீட்டிற்கு எல்லாம் சென்று இருக்கிறோம். இன்றைக்கு அவருடைய துணைவியார் வந்திருக்கிறார், எங்களுடைய அன்புச்செல்வி அஞ்சுகம் தேர்தலில் போட்டியிட்டு இன்றைக்கு துணை மேயராக தி.மு.கழகத்தின் மருத்துவரணி இணைச் செயலாளராக இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் பொறுப்போடு இந்த இயக்கத்தில் ஒரு லட்சிய வீராங்கனையாக அவர் திகழ்கிறார் என்பதுதான் நமக்கெல்லாம் பெருமை ஒரு பதவியால் தான் அடையாளத்திற்கு வந்தோம் என்பதைவிட பூபதியினுடைய மகள் அவரைவிட இன்னும் வேகமாக முனைப்பாக இந்த இயக்கத்திற்கு பாடுபடுகிறார் என்கிறபோது பெருமையாக இருக்கிறது.

    ஐந்தாம் தலைமுறை

    இன்றைக்கு கூட ஒரு தோழர் தனக்கு குழந்தை பிறந் திருப்பதாக எனக்கு தகவல் அனுப்பி ‘வாழ்த்துங்கள்’ என்றதும் மறுபடியும் குறுந்தகவலிலே அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன், அவர் மறு செய்தி அனுப்பினார் அதில் இயக்கத்திற்கு பணியாற்ற 5ஆம் தலைமுறை பிறந்து விட்டது அண்ணா என்று தான் எழுதியிருந்தார். நான்கு தலைமுறை கடந்து இப்போது பிறக்கிற குழந்தை அய்ந்தாவது தலைமுறையாக இந்த இயக்கத்தின் கொள்கைகளை உணர்வுகளை ஏந்திச் செல்கின்ற உணர்வு மிக்க ஒரு பெரும் படையாக நம்முடைய அமைப்பு திகழ்கின்றது. பூபதியினுடைய 16 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று என்பது ஒரு நூலகத்தினுடைய 16 ஆவது ஆண்டு விழாவாக இங்கே நடைபெறுகிறது. இங்கே சாதாரண இடமாக இருந்ததை அய்யா வீரமணி அவர்களின் முயற்சியால் ஒரு பெரிய கட்டடமாக உருவாக்கி பலரும் குறிப்பிட்டதை போன்று வெறும் படிப்பகம் என்ற நிலையை கடந்து நூலகமாக உயர்ந்து பல வகைகளிலே இன்றைக்கு பயன் தருவதாக இருக்கிறது.

    இந்த அரங்கத்திற்கு அன்னை மணியமையாருடைய பெயரை சூட்டி இருக்கிறார்கள், இங்கே பேசுகிறபோது சொன் னார்கள் நான் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்தவன் என்று. அங்கே படித்த காரணத்தினால் நான் பகுத்தறிவு உள்ளவனாக மாறினேன். என் தாயார் இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். எனக்கு முதலில் அறிமுகமான தலைவரின் பெயரே பெரியாரின் பெயர்தான். அதற்கு பின்னால் அரசியல் ரீதியாக சாதாரண மக்களுக்கு பயன்படக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் என்று சொன்னதும் அங்கேதான். பள்ளியிலே படிக்கிறபோது எனக்கு கிடைக்காத வாய்ப்புகளும், பல சந்தர்ப்பங்களும் அந்த கல்லூரியில் எனக்கு கிடைத்தது.

    என்னோடு அன்றைக்கு படித்தவர்களில் மிக முக்கிய மானவர்கள் இப்போது நம்முடைய நினைவில் நிற்கின்ற துரை.சக்கரவர்த்தி. அவர் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் என்பது இங்கு இருக்கிற மூத்தவர்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல் ஈரோட்டில் சேதுபதி என்ற ஒருவர், கோவையில் இருக்கிற ராமகிருஷ்ணன் அப்போது எங்களோடு தொடர்பு கொண்டு இருந்த ஒரு மாணவர் அமைப்பின் தலைவர். இப்படிப்பட்டவர்களை கொண்ட தலைமுறையாக மெல்ல நாங்கள் வளர்ந்து வந்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்களும் அங்கே இருந்தார்கள் பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியை விட்டு பிரிந்த போது ஒரு பிரிவினர் அங்கே செல்கிற பொழுது முழுமையாக உறுதியாக தி.மு.க.வின் பக்கம் நின்றது திராவிடர் கழகத்திலிருந்த மாணவர் நண்பர்கள் தான்.

    முதலில் நீ தான் படிக்க வேண்டும்

    அந்த கல்லூரியில் நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்து எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க இடம் தேடுகிறேன். அப்போதெல்லாம் இத்தனை கல்லூரிகள் கிடையாது. இத்தனை கல்லூரிகளில் ஆங்கில இலக்கியப் படிப்பும் கிடையாது. பூண்டி யில் இருந்தது அதேபோல சென்னையிலே பல இடங்களில் இருந்தது திருச்சியிலே ஒன்று இரண்டு இடங்களில் இருந்தது என்ற நிலையில் எங்கு செல்வது என்று தேடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் கல்லூரியினுடைய முதல்வர் பின்னாளில் ஐஏஎஸ் அதிகாரியாக மாறி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மறைமலை அடிகள் அவர்களுடைய பேரன் ஆவுடைய பிள்ளை அழைத்துச் சொன்னார் இந்த கல்லூரியில் படித்து முடித்தவர்களில் தேர்வானவர்கள் 4 பேர் தான் அதிலே உனக்கு நான் எம்.ஏ. வகுப்பிலே இடம் தருவதற்கு காரணம் நீ பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற பிரிவு என்று சொன்னார்.

    வாய்ப்பு கிடைக்காதா என்று பல இடங்களில் தேடி அலைகிற பொழுது என்னை அழைத்து உனக்கு இடம் தருகிறோம் அதற்கு காரணம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் என்ற பொழுது அது கிடைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருப்போம் என்பது ஒரு பெரிய வினா? இப்போது கூட வலைதளங்களில் இந்த விவாதம் வருகின்றது. நான் ஒரு கல்லூரியில் பேசப் போகும்போது ஒரு மாணவன் எழுந்து கேட்டான் ஜாதி இல்லை என்கிறீர்களே, பேதமற்ற ஒரு சமுதாயம் வேண்டும் என்று பேசுகிற நீங்கள் உங்கள் கட்சி நடத்துகிற அரசாங்கம் அந்த காலகட்டத்திலே நாங்கள் கல்லூரிக்குள்ளோ, பள்ளிக்குள்ளோ நுழையும் பொழுது முதலில் கேட்கிற கேள்வியே நீ என்ன ஜாதி என்று. அதுவரை எனக்கு ஜாதி தெரியாது, ஜாதி என்றால் எனக்கு யாரும் சொல்லித்தரவில்லை.

    ஆனால் உள்ளே நுழையும் பொழுது நீங்கள் கேட்டு எனக்கு ஜாதியை தெரிய வைத்தது நீங்கள் தானே என்று விரல் நீட்டி குற்றம் சுமத்தி கேட்டார். அவருடைய அந்த குரலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். நான் பதற்றப்படாமல் பதில் சொன்னேன் உண்மைதான் தம்பி, முன்பும் உங்களை பார்த்து ஜாதி என்ன என்று கேட்டார்கள். அப்படி கேட்டதற்கு காரணம் நீ படிக்க உள்ள வரக்கூடாது என்று சொல்லி. இப்போது நாங்கள் கேட்கிறோம். நீ என்ன ஜாதி என்று தெரிந்தவுடன் முதலில் நீ தான் படிக்க வர வேண்டும் என்று சொல்லி. அந்த இட ஒதுக்கீட்டால் தான் கல்வி கிடைத்தது. அதனால் தான் வேலை கிடைத்தது. அதனால் தான் உயர்வு கிடைத்தது. ஒருவேளை எம்.ஏ. படிக்காமல் போயிருந்தால் எப்படி எல்லாம் திசை மாறி இருப்போம் என்று தெரியாது. பின்னர், ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறேன், பின்னர் மிசா சட்டத்தில் கைதாகி உள்ளே சென்று வெளியே வந்து முழு நேரமாக இந்த இயக்கத்திலே இணைந்து இன்றைக்கே நாடாளுமன்றத்திலே நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கே பொறுப்பிலே இருக்கிற பொழுது இத்தனைக்கும் காரணம் பெரியார் கல்லூரி. நான் படித்த நாட்களில் பெரியார் வந்து அங்கே பேசி இருக்கிறார், ஆசிரியர் வீரமணி பேசியிருக்கிறார், தலைவர் கலைஞர் வந்திருக்கிறார், ஜெயகாந்தனும் கண்ணதாசனும் வந்து பேசி இருக்கிறார்கள், பல பெரிய தலைவர்கள் இலக்கியவாதிகள் எல்லாம் பேசிய காலகட்டம் அது. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நிலை கிடையாது.

    பணம் கொடுத்தவர் தந்தை பெரியார்

    நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்தக் கல்லூரியில் அறிஞர் அண்ணா அவர்கள் வந்த புதிய கட்டிடங்களை எல்லாம் திறந்து வைத்தார். நான் ஒரு தகவலுக்காக சொல்லுகிறேன் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த பொழுது அந்த கல்லூரி பெரியார் கொடுத்த பணத்தால் அவர் கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டது ஆனால் கல்லூரி திறக்கின்ற அந்த நாளன்று அவரை எதிரே உட்கார வைத்திருந்தார்களே தவிர மேடையில் அழைத்து பேசச் சொல்லவில்லை. பணம் கொடுத்தவர் இடம் கொடுத்தவர். அவர் இல்லாவிட்டால் அந்தக் கல்லூரியே கிடையாது. அவருக்கு மேடையில் இடமில்லை எல்லோரும் வருந்தியபொழுது, கொஞ்சம் ஆவேசப்பட்ட பொழுது, பெரியார் சொன்னது, என்னை மேடையில் அமர வைக்கவேண்டும் பேச வைக்கவேண்டும் என்பதற்காக நான் பணம் தரவில்லை ஒடுக்கப்பட்ட வீட்டுப் பிள்ளைகள் படிக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தேன் என்று அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

    அந்த கல்லூரியிலேயே முன்னிருந்த அதிமுக ஆட்சி செய்த போது கல்லூரி வளாகத்திற்குள்ளே கல்வி இணை இயக்குநரகத்தை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி நடந்து அடிக்கல் வரை நாட்டி விட்டார்கள். பின்னர் மேனாள் மாணவர்களாகிய நாங்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று இது கல்லூரி படிப்பதற்கான வளாகம் மட்டுமே இதற்குள்ளே வேறு வளாகம் வரக்கூடாது என்று தடை உத்தரவு பெற்று அதை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பெருமை எங்களுக்கு உண்டு. அப்போது கலைஞர் அவர்கள் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்றை திறந்து வைத்து ஒரு உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.

    ஆனால் அந்த சிலை பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவிலே இருந்தது. நன்றி உணர்ச்சியின் காரணமாக நாங்கள் மேனாள் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து பக்கத்தில் இருக்கிற பாபநாசத்தில் இருந்து ஆறடி உயரத்திற்கு பெரியாருடைய வெண்கலச்சிலை ஒன்றை எங்களுடைய சொந்த செலவில் செய்து அந்த கல்லூரியில் வைத்தோம். என்னுடைய நாடாளு மன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து அங்கே மிகப் பெரிய கலையரங்கம் அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு நினைவாக பெண்கள் தங்குவதற்கு என்று ஒரு பெரிய விடுதி கட்டினேன், கணினி அறை பின்னர் கல்லூரி கட்டடத்திற்கு தேவையான கட்டடங்கள் என்று கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் இவர்களால் இங்கே படித்தோம் என்கிற பொழுது அவர்களினுடைய நினைவாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக.

    பெரியார் போய் நின்றார்

    இன்றைக்கு வைக்கம் நூற்றாண்டு விழா என்று கொண் டாடுகிற போது அந்தப் போராட்டத்திற்கு பெரியார் எந்த அளவிற்கு பாடுபட்டு இருப்பார், இந்தியாவில் இருக்கிற பலருக்கு அங்கே இருக்கிறவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் எங்களை இந்த ஊரிலே அவமானப்படுத்துகிறார்கள், ஆலயம் இருக்கிற வீதி வழியாக கூட நாங்கள் நடக்கக்கூடாது ஜாதியின் காரணமாக என்கிறார்கள். அங்கே மேலாடை அணியக் கூடாது என்று கேரளாவில் இருந்த பெண்கள் துன்புறுத்தப்பட்ட காலம் அது. நம்முடைய ஊரிலே பெண்கள் கணவனை இழந்தால் மேல் சட்டையை கழட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நிலவியது.

    இந்த புரட்சிகரமான இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் தமிழ் நாட்டிலே பல பெண்களுடைய மானம் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்காது என்பதை இன்றைக்கு எண்ணிப் பார்க்க வேண்டும். எங்கெல்லாம் இப்படிப்பட்ட அநீதிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பெரியார் போய் நின்றார். கேரளா வில் இருந்த மக்கள் பலரையும் அழைத்தார்கள் எங்களை காப்பாற்ற வாருங்கள் என்று காந்தியாருக்குக்கூட அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அங்கிருந்து அவர் அனுதாபக் கடிதம் எழுதினாரே தவிர களத்திற்கு சென்ற ஒரே தலைவர் பெரியார் மட்டும்தான். இத்தனைக்கும் அவர் அங்கே செல்லுகிற பொழுது திருவாங்கூர் சமஸ்தானம் மகாராஜா அவருடைய நண்பர் என்னோடு வாருங்கள் என்கிறபோது அவர் சொல் லுகிறார் உங்களை எதிர்த்து போராட வந்திருக்கிறேன் உங்க ளோடு தங்குவது முறையல்ல என்று சொல்லிவிட்டு போராட்ட களத்தில் நின்றார்.

    இன்றளவும் அடக்கி வைத்திருக்கிறது

    அவரோடு துணைக்குச் சென்ற அவருடைய அன்பு மனைவியையும் அருமை சகோதரியையும் எந்த சாலையில் நடக்கக்கூடாது என்றார்களோ அந்த சாலைக்குள் அழைத்துச் செல்கிறார். அதுதான் பெரியாருடைய அணுகுமுறை, துணிச்சல். பல பேர் சொல்லுவார்கள் அந்தத் தடி யாரையும் அடிக்கவில்லை ஆனால் இன்றளவும் அடக்கி வைத்திருக்கிறது. யாரெல்லாம் நம்மை அடக்கி ஒடுக்க முனைந்தார்களோ அவர்களெல்லாம் அந்த தடியை பார்த்து இன்னமும் அஞ்சுகிறார்கள். பெரியார் அதை கையிலே வைத்திருப்பதை பார்க்கும் பொழுது அது ஊன்றுவதாக தெரியாது கம்பீரமாக கையில் இருக்கும், ஒரு பெரிய வீரன் கையில் ஆயுதம் இருப்பதைப் போல.

    அன்றைக்கு பெரியார் தன்னுடைய மனைவியையும் தன்னுடைய சகோதரியையும் அழைத்துக் கொண்டு எந்த ஈழவர் மக்களை நடக்கக்கூடாது என்று சொன்னார்களோ அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்த தெருவுக்குள்ளே நடக்கிறார் முடிந்தால் என்னை நிறுத்திப் பாருங்கள் என்று சொல்லுகிற பொழுது அவரை தடுக்கிற துணிச்சல் யாருக்கும் இல்லை; மாறாக அவமானப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதற்காக உடன் பெண்கள் வருகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது மனம் கூசுகிற அளவிற்கு ஒரு காரியத்தை செய்தால் போராட்டம் நலிவடையும் என்ற காரணத்தினால் ஆதிக்க சக்தியினர் மேல் ஜாதிக்காரர்கள் சாலையின் இரு பக்கத்திலும் நின்று கொண்டு தங்களுடைய ஆடைகளை அவிழ்த்துவிட்டு பல கேவலமான செய்கைகளை செய்கிறார்கள்.

    அதைப் பார்த்து பெரியாருடைய அன்பு மனைவி, அவருடைய தங்கை இரண்டு பேரும் கொஞ்சம் தயங்கியபோது கொஞ்சம் தலைகுனிந்த போது பெரியார் அன்று சொன்ன சொல் இன்றைக்கும் நம் அத்தனை பேருக்கும், பொது வாழ்க்கைக்கு வந்தவர்களுக்கு தனி மனித வாழ்வில் ஏற்படுகிற மான அவமானங்கள் என்பவை இரண்டாவது பட்சம் தான், இந்த செய்கைகளை பார்த்து நாம் திரும்பிச் செல்வோமேயானால் இந்த தோழன் காலம் காலமாக ஒடுக்கி வைக்கப்படுவான் வாருங்கள் நீங்கள் என்ன பெரிய அதிசயத்தை பார்க்கிறீர்கள் என்று சொல்லி தொடர்ந்து அழைத்துச் சென்று பெரியார் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்ட பிறகு சிறையிலேயே பெரியார் சாக வேண்டும் என்று அந்த உயர் ஜாதிகாரர்கள் யாகம் நடத்தினர். ஆனால், யாகம் நடத்தியதன் விளைவு மகாராஜாவே இறந்து போன நேரத்தில் அச்சப்பட்டு பெரியாரை விடுதலை செய்து பின்னர் எந்த சாலையில் நடக்கக் கூடாது என்றார்களோ அதில் அவர்கள் நடக்கலாம் என்ற உரிமையை பெற்று பெரியார் திரும்பியது தான் வைக்கம் போராட்டத்தின் வரலாறு. அதற்குப் பின்னால் காந்தியார் நன்றி சொன்னார் பெரியாருக்கு. நீங்கள் நடத்திய போராட்டத்திற்கு நன்றி என்று ஆனால், களத்தில் சென்று அந்த மாநிலத்தில் இருந்த மக்களினுடைய உரிமைகளை மீட்டுத் தந்த அடிமைத்தனத்தை அகற்றிய பெருமை தந்தை பெரியார் அவர்களை சாரும்.

    பெரியாரின் வழி

    கலைஞர் அடிக்கடி சொல்வார் நான் பெரியாருடைய தொண்டனாகத்தான் இன்னும் இருக்கிறேன் என்று. அறிஞர் அண்ணாவும் அதைத்தான் சொன்னார் ஆட்சிப் பொறுப் பேற்பதற்கு முன்னால் கட்சி ஆரம்பித்த நேரத்தில் பல பேர் பலவற்றை சொன்ன பொழுது பெரியார் விமர்சிக்கிறார் என்று சொன்னார்கள். எந்த காலத்திலும் பெரியார் எங்களை கண்டிக்கலாம் பெரியார் எங்களை அடிக்கலாம் பெரியார் எங்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் மட்டுமே, அவருடைய வழியில் நடைபோடுவதே என்னுடைய கடமையேத் தவிர அவரை எதிர்த்து பேசுவது என்னுடைய வேலை அல்ல என்று அண்ணா பெருந்தன்மையோடு சொல்லி ஒரு நாற்காலியை காலியாகவே வைத்திருந்தார். இது பெரியாருக்காக காத்திருக் கிறது – இந்தக் கட்சியினுடைய தலைவராக பெரியார் தான் இருப்பார் என்று சொல்லி அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மரியாதையை கொடுத்தார்.

    அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களை தொடர்ந்து நடைபோடுகிற அத்தனை பேருடைய நெஞ்சத்திலும் இன்றைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிற உந்து சக்தியாக இருப்பவர் தந்தை பெரியார். அவருடைய பெயரால் இயங்குகிற படிப்பகம் நம்முடைய பூபதியினுடைய நினைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது அய்யா வீரமணி அவர்கள் அதை தெளிவாகவே செய்திருக்கிறார். இதை அவருடைய முயற்சியால் கட்டடமாக கட்டி பெயர் சூட்டியபோது, பூபதி நினைவு பெரியார் படிப்பகம் என்று சொன்னதற்கு காரணம் பெரியார் தானே படி என்று சொன்னார் பெரியார் தானே படிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். அதனைத் தொடர்ந்து தான் அறிஞர் அண்ணாவின் இந்த ராஜபாட்டை ஆரம்பித்தது. இந்த மாநிலத்தில் வாழ்கிற எல்லா தரப்பு மக்களுக்குமான கட்சியாக இது இருக்கும் என்று அண்ணா பிரகடனப்படுத்தினார்.

    ‘திராவிட மாடல்’ என்பதன் பொருள்

    திராவிட கழகத்திலிருந்து திமுக அரசியல் கட்சியாக மாறுகிறபோது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் விமர்சனம் செய்யக்கூடிய உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் சந்தேகம் கேட்கக் கூடியவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தால் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்றுதானே இருக்க வேண்டும் நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைக்கிறீர்கள் என்று சொன்ன பொழுது அண்ணா சொன்ன விளக்கம் திராவிடர் கழகம் என்ற அமைப்பு இந்த மண்ணெங்கும் பரவிக்கிடக்கிற திராவிடர்களின் உரிமை களுக்காக பாடுபடக்கூடிய ஒரு அமைப்பு, ஆனால் நாம் அரசியல் இயக்கம் என்று நம்மை வரையறுத்து கொள்ளுகிற பொழுது இந்த திராவிட பூமி பகுதியில் வாழ்கிற எல்லா தரப்பு மக்களுக்குமான ஒரு இயக்கமாக இது இருக்கும் என்று ஒற்றெழுத்து ர் என்பது விடுபடுகிற பொழுது பொருள் மாறுகிறது. அண்ணா இயக்கம் கண்ட பொழுது சொன்னது இது எல்லா மக்களுக்குமான ஆட்சி தான் இன்றைய முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ என்று சொல்லுகிறாரே அதன் பொருள் இதுதான்.

    எல்லோருக்கும் என்று சொல்லுகிற பொழுது பிரிவினை இல்லை ஆண் பெண் பேதம் இல்லை ஜாதி மத ஏற்றத்தாழ்வு, வேறுபாடு கிடையாது எல்லோரையும் முதலில் ஒன்றாக மாற்றுகிறோம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அய்யன் வள்ளுவர் சொன்னதை நடைமுறைப்படுத்துகிற ஒரே கட்சி இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகம் தான். சில பேரு ஜாதியினால் சில பேர் மதத்தினால் வேறு சில பேர் வேறு காரணங்களினால் பிரிவுகளை வைத்து அதன் மூலமாக வலிமை பெறுவார்கள்.

    ஆனால் எல்லோரையும் ஒன்றடக்கி எல்லோருக்கும் எல்லாம் தருவோம். இவருக்கு இது அவருக்கு அது என்ற பிரிவினை இல்லை எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வதற்கான காரணம் அறிஞர் அண்ணா உருவாக்கியபோது சொன்னதும், பெரியார் நமக்கு வடித்து தந்த பாதையும் தான். அதனுடைய வளர்ச்சி தான் இன்றைக்கு நாம் பலவற்றை காணுகிறோம் நமக்கு எதிர்ப்புகள் பல இருக்கின்றன இருக்கும். கொள்கையும் லட்சியமும் வைத்திருக்கிற அமைப்பு களுக்கு எல்லா காலமும் போராட்ட காலம் தான் என்பதில் மாறுபாடே கிடையாது.

    நீ பேசத் தெரிந்தவன்

    ஆளுங்கட்சி என்றால் சொகுசாக இருப்போம் என்பது அல்ல, ஆளுங்கட்சியாக இருக்கிற போதும் நமக்கு சவால்கள் உண்டு, இவர்கள் நல்லது செய்கிறார்களே என்று எரிச்சல் அடைகிறவர்களும் உண்டு, நான் நல்லவன் நல்ல கடமைகளை தானே ஆற்றுகிறேன் என்னை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்கக்கூடாது, இது பிடிக்காமல் இருக்கக் கூடியவர்களும் இருப்பார்கள் – காரணம் ராஜா ராணி படத்தில் கலைஞர் வசனம் எழுதுவார் சாக்ரடீசினுடைய அந்த கதாபாத்திரத்திலே நடிகர் திலகம் நடிக்கிற பொழுது அவர் மீது குற்றம் சுமத்துகிற ஒருவர் சொல்லுவார் நீ பேசத் தெரிந்தவன் இளைஞர்களை பேசி கெடுக்கிறவன் என்று குற்றம் சுமத்துகிறபோது, சாக்கி ரட்டீஸ் சொல்லுவார் ஏன் நீயும் பேசி பாரேன் – பேசி தோற்றவர்கள் நீங்கள் என்று சொல்லுவார். நம்மை பார்த்து நீ பேச தெரிந்தவன் என்று சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பேசி தோற்றவர்கள் என்று பொருள் – இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கிறது என்றால் இது இருக்கிறதே என்று பொறுக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள்.

    இன்றைக்கு கூட சில புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன உத்தரப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் தொகை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும். 82 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம் அது. அந்த மாநிலத்தில் சற்றேறக் குறைய 4000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அடிப்படை நீதி என்பது உலக அளவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். இதிலே மிகச் சிறந்த இடத்திலே இருக்கிற நாடு பிரிட்டன். பிரிட்டன், கியூபா இந்த இரண்டு நாடுகளிலும் மருத்துவம் என்பது பொதுத் துறையில் இருக்கிறது. கியூபாவில் கல்வியும் பொதுத்துறையில் இருக்கிறது. அங்கே கல்வியும் இலவசம் அதேபோல் மருத்துவம் இலவசம். அது பெடல் காஸ்ட்ரோ கண்டுபிடித்தது.

    பிரிட்டனில் மருத்துவம் மட்டும் பொதுத் துறையில் இருக்கிறது. அந்த பிரிட்டனில் மட்டும் தான் ஆயிரம் பேருக்கு மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நாலாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலே ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிற போது நாம் பிரட்டனையும் கடந்து நிற்கிறோம் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களையும் கடந்து நிற்கிறோம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நம்மிடம் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருக்கின்றன. இங்கே ஒரு காலத்திலே மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படி என்று சொன்ன மண் இந்த மண், அந்த மொழி தெரிந்தவர்கள் மட்டும்தான் டாக்டர் ஆக முடியும் என்று பின்னி வைக்கப்பட்டிருந்த சதி வலை அது. நாம் வேதமும் படிக்கக்கூடாது வேதத்தை காதிலும் கேட்கக் கூடாது கேட்டால் காதில் ஈயத்தை காட்சி ஊத்துவோம் என்று சொல்லி கல்வியும் தராமல் அதை கற்றவர்கள் மட்டுமே தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று இருந்த காலத்தில் நீதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தான் சமஸ்கிருதம் தேவை என்பதை அடித்து அது தகுதி அல்ல என்று மாற்றிய பிறகு தான் சமஸ்கிருதம் படிக்காத அதை தெரியாத ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் இன்றைக்கு மருத்துவர்கள் ஆக மாறி இருக்கிறார்கள்.

    ‘நீட்’, ‘நெக்ஸ்ட்’ தேர்வு

    இன்றைக்கு நீட் தேர்வு வருகிறது நெக்ஸ்ட் தேர்வு வருகிறது நாம் எதிர்த்து குரல் கொடுக்கிறோம், மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். இதை அவர்கள் சட்டமாக மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திலே முயன்ற பொழுது அதை எதிர்த்து கடுமையாக பேசியதோடு மட்டுமல்லாமல் திருத்தம் கொடுத்து வாக்கெடுப்புக்கு விட்டு அவர்களை மிகப்பெரிய இக்கட்டிலே நிறுத்திய பெருமை நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு உண்டு. மாநிலங்களவையில் அது தோற்றுப் போனது – நான் பலமுறை அதை சொல்லி இருக்கிறேன் இந்த நீட் தேர்வு நெக்ஸ்ட் தேர்வு இப்போது தான் அறிமுகமாய் இருக்கிறது. பலர் ஆபத்தை உணர்ந்து இருக்கிறார்கள். நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.

    2020 இல் அது நிறைவேறுகிற போது, ஒரு சட்டப் பிரிவு நீட் தேர்வு வரும் மருத்துவக் கல்லூரி யில் நுழைகிறவர்கள் பன்னிரண்டாவது வகுப்பிலே எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதை தூக்கி தூரப் போட்டுவிட்டு அகில இந்தியாவிற்கும் பொதுவான நீட் தேர்வு எழுதிட வேண்டும் என்பது. அடுத்த பிரிவு பலர் அதை கவனிக்கவில்லை மருத்துவப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மேல் படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு தொழில் செய்ய வேண்டும் என்றால் ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை அகில இந்திய ரீதியில் எழுத வேண்டும். அந்த தேர்வு இந்த சட்டம் நிறைவேறியதற்கு பின்னால் மூன்று ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வரும் என்று ஒரு பிரிவு இருந்தது. ஆக அப்போதே தெரியும் இது 2023 இல் வந்துவிடும் என்று. அதற்கான அபாய அறிவிப்பு எச்சரிக்கையை விடுத்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். இந்த ரெண்டு பிரிவையும் நீக்குங்கள் என்று நான் கொடுத்த திருத்தம் அவர்களாலே ஏற்கப்படாமல் வாக்கெடுப்பு நடந்தது.

    உரிமை உணர்வு

    வாக்கெடுப்பு நடந்த நேரத்தில் திமுகவுக்கு அப்போது இருந்து எண்ணிக்கை வெறும் அய்ந்து. ஆனால் தைரியமாக திருத்தத்தை கொடுத்தோம் நீட் வேண்டாம் நெக்ஸ்ட் வேண்டாம் இந்த இரண்டையும் நீக்குங்கள் என்று கொடுத்த போது, இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து முழங்கி விட்டு போனாரே உள்துறை அமைச்சர் அமித்ஷா – அங்கிருந்து மருத்துவத் துறை அமைச்சரை அழைத்து என்னிடம் பேசி இதைத் திரும்பப் பெறுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன், எனக்கொன்றுமில்லை ஒரே ஒரு நிபந்தனையின் அடிப்படையில் என்று. என்ன நிபந்தனை என்று கேட்டார்கள் நன்றாக கவனியுங்கள் ஆளில்லாத இடத்தில் தனியாக பேசவில்லை, அவைகள் நிறைந்து நிற்கிற போது முக்கியமான நேரத்தில் வாக்கெடுப்பு முடியப்போகிற நேரத்தில் இந்த சின்ன பேச்சுவார்த்தை நடக்கிறது. நான் என் திருத்தத்தை திரும்பப் பெறுகிறேன், நீங்கள் ஒன்றை சேர்த்துக்கொடுங்கள் என்று – என்ன என்று கேட்டார்கள் நீட் வரும் நெக்ஸ்ட் வரும் தமிழ்நாட்டைத் தவிர என்ற ஒரு வார்த்தையை சேருங்கள், மீஜ்நீமீஜீt tணீனீவீறீஸீணீபீu என்று சேர்த்துக் கொடுங்கள் என்று சொன்னேன் சிரித்துக் கொண்டார்கள் ரொம்ப சாமர்த்தியமாக பேசுகிறீர்கள் என்று. இல்லை எங்களுடைய தேவை அதுதான் எங்கள் மாநிலத்தை பற்றித் தான் எனக்கு கவலை இது மாநிலங்கள் அவை நான் தமிழ்நாட்டின் பிரதிநிதி எனக்கு அது தேவையில்லை, மற்றவர்கள் வேண்டுமானால் அதை ஏற்றுக்கொள்ளட்டும் என்றேன்.

    வாக்கெடுப்புக்கு விடுகிறார்கள் – வாக்கெடுப்பிலே எங்களுக்கு கிடைத்தது, அய்ந்து வாக்குகள் வைத்திருந்த திமுகவுக்கு கிடைத்தது 86. ஆளுங்கட்சிக்கு பெரிய செல்வாக் கோடு கிடைத்தது 105 அதில் அதிமுகவின் வாக்குகள் 13 – அதுதான் மிக முக்கியம். 19 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சட்டம் நிறைவேறுகிறது. நிறைவேறுவதற்கு காரணம் 19 வாக்குகள், 13 அதிமுக வாக்குகள் அவர்களுக்கு ஆதரவு, மொத்த வாக்குகளில் 13 -அய் கழித்தால் 92. அந்த 13 நம்மோடு சேர்த்தால் 86 உடன் 13 சேர்த்தால் 99 ஆகியிருக்கும் பாரதிய ஜனதாவிற்கு 92 ஆகியிருக்கும் நாம் வெற்றி பெற்றிருப்போம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு இந்த மண்ணிலே கிடையாது நெக்ஸ்ட் இல்லாமல் போயிருக்கும். ஆனால் அவர்களும் சேர்ந்து இப்போது பேசுகிறார்கள் – நீட் தேர்வு தேவையில்லை என்று, எங்கே நிறைவேறியதோ அங்கே ஆதரவு கொடுத்த கட்சி அதிமுக. ஆனால் நமக்கு திறமை இல்லை தைரியம் இல்லை என்றெல்லாம் இன்றைக்கு பேசுகிறார்கள்.

    துணிந்து செய்தோம் ஒருவேளை அன்றைக்கு அவர்கள் தமிழக நலனுக்காக என்று உரிமை உணர்வோடு செயல்பட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேட்டால் இந்த நீட் தேர்வினால் பல உயிர்களும் போயிருக்காது. இந்த நெக்ஸ்ட் தேர்வு என்ற அவலமும் வந்திருக்காது. இதெல்லாம் நடக்கிறது இப்படித் துணிச்சலோடு நாங்கள் அங்கே நிற்பதற்கு காரணமே பெரியார் தந்த அந்த உரிமை உணர்வு, கலைஞர் எங்களை வளர்த்து வந்த பாங்கு, இன்றைய தி.மு.க. தலைவர் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு தருகின்ற ஊக்கம். பிரச்சினை என்று வந்தால் எந்த நேரத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள் என்பதுதான் அவர் எங்களுக்கு காட்டுகிற வழி. பல நேரங்களில் சில முடிவுகளை நாங்களே எடுக்கிறோம் அது சரியான முடிவாக இருக்கும் என்ற நம்பிக்கை தலைமைக்கு உண்டு. காரணம் கொள்கை வழியிலே வளர்ந்த காரணத்தினால் எல்லா நேரங்களிலும் நாங்கள் உணர்வோடு உணர்வுபூர்வமாக நின்று இருக்கிறோம்.

    தவறு நடக்காது

    பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேர்ந்த களத்தில், அன்றைய அந்த ஆட்சி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி – முரளி மனோகர் ஜோஷி அவர்கள் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் சோதிடத்தையும் ஒரு பாடமாக சேர்த்தார், இது என்ன பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதே என்று கேட்ட போது அண்ணன் முரசொலிமாறன் அவர்கள் எங்களை வழி நடத்திக் கொண்டிருந்தவர் இதை அனுமதிக்கக் கூடாது – கடுமையாக எதிர்த்து பேசுங்கள் என்று சொன்னார். நாம் கூட்டணியில் இருக்கிறோம் நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்களே என்ற போது என்னையா அமைச்சர் பொறுப்பு கொள்கைக்கு மேல், போய் பேசு என்று சொன்னார். எப்படிப் பேசுவது என்று கேட்ட போது சொன்னார் நம்முடைய மாநாடுகளிலெல்லாம் கொதிப்போடு கொந்தளிப்போடு பேசுவீர்களே அதைப்போல பேசுங்கள், கடுமையாக பேசுங்கள் என்று சொல்லி அனுப்பினார். மாநிலங்கள் அவைகள் நான் பேசினேன் மக்கள் அவையில் பழனிமாணிக்கம் பேசினார்.

    அங்கே பேசுகிற போது சொன்னோம் – கூட்டணியில் இருக்கிறோம் என்ற காரணத்தினால் நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகிற பொம்மைகள் நாங்கள் அல்ல. காங்கிரசோடு கூட்டணியில் இருந்த போது தான் அவசர நிலை வந்தது – அந்த நேரத்தில் கூட்டணியில் இருக்கிறோம் என்று கருதாமல் அதை எதிர்த்து ஆட்சியை இழந்த கட்சி திமுக மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு உங்களோடு இருக்கிறோம் என்பதற்காக இந்த பைத்தியக்காரத்தனமான வேலைக்கெல்லாம் நாங்கள் ஆள் இல்லை. சோதிடம் என்பது மனிதனுடைய அறிவை மழுங்கடிப்பது. அது படிக்கின்ற மாணவர்களுக்கு தேவையில்லாதது என்று பேசுகிற நேரத்தில் ஒரு கருத்தை நான் சொன்னேன். திமுக இருக்கிற இடத்தில் தவறு நடக்காது தவறுகள் நடக்கிற இடத்தில் திமுக இருக்காது இவ்வளவுதான் அது உணர்ச்சி வேகத்தில் பேசியது. செய்தி தலைவருக்கு வந்து சேருகிறது தலைவர் இரண்டு நாட்களுக்கு பிறகு வட சென்னை கூட்டத்தில் பேசுகிற போது டில்லியில் நாடாளுமன்றத்தில் திமுக இருக்கிற இடத்தில் தவறு நடக்காது, தவறுகள் நடக்கிற இடத்தில் திமுக இருக்காது என்று பேசி இருக்கிறார். இது அவர்களுடைய சொந்தக் கருத்து என்று நான் சொல்லமாட்டேன், அது என்னுடைய கருத்து, அது திமுகவின் கருத்து, இதுதான் எங்கள் உணர்வு என்று சொல்லுகிற போது ஒரு முடிவை நாங்கள் எடுக்கிறோம். அது கொள்கையளவில் எடுக்கிறோம். அதுதான் இன்றைக்கும் தொடர்கிறது. அங்கே ஒன்றியத்தில் நடைபெறுகிற ஆட்சிக் கூட்டாட்சிக்கு எதிராக, மாநில நலன்களுக்கு எதிராக, மாநில மொழிகளுக்கு எதிராக, அடிப்படை மக்களுக்கு எதிராக பல சட்டங்களை இயற்றுகிற போது சிறுபான்மையினர்களை ஒடுக்குவதற்கு சட்டங்கள் இயற்றுகிற போதெல்லாம் நாங்கள் உரிமை குரலாக அங்கே துணிந்து நின்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

    திமுக இருக்கிற காரணத்தினால் தான் இந்தியாவில் பல மாநிலங்கள் அடிமைப்படாமல் இருக்கின்றது. திமுக பெயரளவிற்கு தான் மாநிலக் கட்சி ஆனால் இதனுடைய வீரியம் தாக்கமும் இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நடைபெறுகிற ஆட்சிக்கு மாற்றாக நாளை எந்த ஆட்சி வரவேண்டும், யார் பிரதமராக வரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட போகிற இடம் அண்ணா அறிவாலயம் தான். இதை நான் சொல்லவில்லை வடபுலத்தில் இருக்கிறவர்களே சொல்லுகிறார்கள், ஸ்டாலின் என்று சொல்லுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த இயக்கமும் இந்த தலைவரும் இன்றைக்கு இந்தியா முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அங்கமாக மாறி இருக்கிறோம். எதிர்ப்புகள் வருகின்றன நாம் அஞ்சப் போவதில்லை. பல வகைகளிலே முனையலாம் நாம் முடங்கப் போவதில்லை காரணம் பெரியார் அண்ணா, கலைஞர் என்ற மாபெரும் தலைவர்கள் உருவாக்கி வளர்த்த பேரியக்கம் இது. அதன் அடுத்த தலைமுறையும் இங்கே உட்கார்ந்திருக்கிறது, அடுத்தடுத்த தலைமுறையும் தொடரும்.

    பூபதி என்ற நெஞ்சில் நெருங்கிய மறக்க முடியாத ஒரு அன்பு சகோதரர் இன்று இல்லை ஆனால் அவருடைய வார்ப்பிடமாக செல்வி அஞ்சுகம் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு துணையாக தம்பி வெற்றிக்குமார் எல்லா வகையிலும் நிற்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் துணையாக இருக்கிற பொழுது அவருடைய வாழ்க்கைப் பயணம் மட்டுமல்ல சமுதாயத்தினுடைய முன்னேற்றமும் பாராட்டத்தவகையில் இருக்கும் என்று நம்பிக்கை நமக்கெல் லாம் உண்டு – இந்த குடும்பமே இன்று பெரியார் வழியிலே சிவக்குமாரை போன்றவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியினை ஒரு நினைவு நாள் கூட்டம் என்று சொல்லி மிகப் பெரிய பொதுக்கூட்டமாக மாற்றி அமைத்து அதில் நீங்கள் எல்லாம் திரளாக பங்கேற்று இருக்கிறீர்கள், நானும் கலந்துகொண்டிருக்கிறேன். தஞ்சைக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வந்திருக்கிறேன் இனி அடிக்கடி வருவேன், உங்களை சந்திக்காமல் இருக்க முடியாது, மீண்டும் சந்திப்போம் நன்றி

    இவ்வாறு திருச்சி சிவா சிறப்புரையாற்றினார்.

    நூல்கள் அன்பளிப்பு

    ஓய்வு பெற்ற தலைமை அஞ்சலக தலைவர் மன்னார்குடி எம்.சுந்தர்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

    இந்நிகழ்வின் தொடக்கத்தில் பெரியார் படிப்பகத்தில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை மற்றும் பொதுநலத் தொண்டர் ந.பூபதி, கலைஞர் ஆகியோரது படத்திற்கு திமுக கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடக்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கலைக் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவாக படிப்பக தலைவர்

    இரா.வீரக்குமார் நன்றி கூறினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments