மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மற்றும் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் அறிவித்துள்ளார். பெங்களூருவில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ள நிலையில் பெங்களூரு கூட்டத்துக்கு போவது பற்றி திமுக யோசிக்குமா? அல்லது கலந்து கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றால் அதனை எதிர்ப்போம் என்று பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.

