மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியை முறித்து முடிவெடுத்து அறிவித்தது அதிமுக. இதையடுத்து அதிமுக வெளியிட்ட அறிக்கை பாஜக-வை அசிங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை கடுப்பேற்றும் வகையில், ‘நன்றி மீண்டும் வராதீர்கள் என்று கடுப்பேற்றும் வகையில் கிண்டலித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொண்டர்களும் கடுமையான எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகி சூடேற்றியது.
அதிமுக தலைமையில் புதிய கூட்டணி
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று, அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கே.பி.முனுசாமி ஆவேசம்
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்” என்றார்.
பாஜக கூட்டணியில் இல்லை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில், ‘’மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. #நன்றி_மீண்டும்வராதீர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.
அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்
கூட்டணி முறிவு அறிவிப்பு என்பதை விட, அதிமுக வெளியிட்ட, ‘நன்றி மீண்டும் வராதீர்கள்’’ என்ற அறிவிப்பு 10 அண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் பாஜகவையும் அதன் தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் தொடர்சியாகவே, எப்போதுமே தலைமறைவாக, தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், ‘’கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது’’ என்று வாய்பூட்டு போட்டுள்ளார். ஆனாலும் அதிமுகவினர் போலவே, பாஜகவினரும் பட்டாசு வெடித்து அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால், இருகட்சிகளுக்கு இடையிலான விரிசல் சரிசெய்ய முடியாத அளவுக்கு போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.
இரும்பு மனிதரா எடப்பாடி பழனிசாமி?
தேசியத்தலைவர்களால் இரும்பு பெண்மணி என்று பார்க்கப்பட்ட ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக, எடுத்துள்ள முடிவும் அனைத்து இந்திய அளவில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இரும்பு மனிதராக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று கட்சியினர் வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர். தேர்தல் வெற்றிகளைப் பொருத்தே எடப்பாடி பழனிசாமி இரும்பு மனிதரா? என்பது தெரியும்.

