மாணவர்களுக்கு பட்டம் வழங்க ஆளுநர் தொடர் தாமதம் செய்தால், துணை வேந்தர்களே பட்டமளிக்கும் சூழல் உருவாகும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்தும், மருத்துவக் கலந்தாய்வு நடத்தும் உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதை எதிர்த்தும் வெள்ளியன்று (ஜூன் 16) ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆளுநரின் நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ,
இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி திமுக மாணவரணி செயலாளரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, “தமிழ்நாட்டில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்காமல் உள்ளார். இதனால் மாணவர்கள் உயர்கல்விக்கும், பணிக்கும் செல்ல முடியாமல், ஆய்வ றிக்கைகளை வெளியிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சனாதனிகளை வைத்து பட்டம் வழங்கவும், பல்கலைக் கழகங்களில் சனாதனிகளை புகுத்தவும் ஆளுநர் முயற்சிக்கிறார். மதச்சார்பற்ற தமிழ்நாடு அதை அனுமதிக்காது. உலகளவில் தமி ழக மாணவர்கள் சிறந்து விளங்குவதை தடுக்கும் உள்நோக்கோடும் பட்டமளிப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். ஆளுநர் தொடர் தாமதம் செய்தால், துணை வேந்தர்களே பட்டமளிப்பு விழா நடத்தும் சூழல் உருவாகும்” என்றார்
“பல்கலைக் கழகங்களை அமைப்பது, நிர்வகிப்பது மாநில அரசின் உரிமை. துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழுவில், சட்ட விரோதமாக பல்கலைக் கழக மானியக்குழு தரப்பிலிருந்து ஒருவரை உறுப்பினராக நிய மிக்கக் கூறுகிறார். இதனால் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கும் ஒப்புதல் தர மறுக்கிறார்.
மாநில அரசுக்கு எதிராக, பாஜக செயல்தலைவரைப் போன்று செயல்படுகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார். “நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர தடையாக ஒன்றிய அரசு உள்ளது. மேலும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான இடத்தை நிரப்பும் பணி யையும் ஒன்றிய அரசே மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கிறது. இவற்றிற்கு எதிரான போராட்டம் தொடரும்” என்றார்.
க.நிருபன் சக்கரவர்த்தி
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான க.நிருபன் சக்கரவர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், “ஆர்எஸ்எஸ் கொள்கைகளை ஆளுநர் செயல்படுத்தி வருகிறார். கல்வி வளாகங்களில் காவிக் கும்பலை புகுத்தி, சமூக நீதி, சமத்துவ கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கிறார். மாணவர்களின் நலனை புறக்கணித்துச் செயல்படுகிறார். தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றிக்கு எதிராக அரசியல் வேறுபாடு கடந்து மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளோம். ஆளுநருக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.
இந்தப் போராட்டத்தில், ராஜீவ்காந்தி, எஸ்.மோகன் (திமுக மாணவரணி), கோ. அரவிந்த சாமி, மிருதுளா, சம்சீர் அகமது, காவியா, பாரதி (இந்திய மாணவர் சங்கம்), பா.தினேஷ் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), கூட்டமைப்பு நிதி பொறுப்பாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் அணி), சின்னதம்பி (மாணவர் காங்கிரஸ்), தயா நெப்போலியன் (முற்போக்கு மாணவர் கழகம்), புளியங்குடி அல் அமீன் (முஸ்லீம் மாணவர் பேரவை), எம்.ஜெ.இர்ஷாத் (சமூகநீதி மாணவர் இயக்கம்), எஸ்.பஷீர் அகமது (மாணவர் இந்தியா), வி.ஏ.முகமது ரிலுவான் (மதிமுக மாணவர் அணி) உள்ளிட்டோர் பேசினர்.

