முதலமைச்சர் கோப்பை – 2023 சென்னை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 16.06.2023 நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1923 வீரர் – வீராங்கனைகளுக்கு ரூபாய். 42.00 இலட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாப் பேரூரை:
விளையாட்டினை பொறுத்தவரை சென்னைக்கு என்று தனித்த அடையாளம் உண்டு. அந்த காலத்திலேயே குஸ்தி, குத்துச்சண்டை, படகுப்போட்டி, கிரிக்கெட், என அனைத்து தரப்பு மக்களும் விளையாட்டில் ஆர்வத்துடன் இயங்கி வரும் மாநகரமென்றால் அது சென்னை தான். உலகே வியக்கின்ற வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை நம்முடைய திராவிட மாடல் அரசு நடத்திக் காட்டியது.
கல்வியில் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு ஆர்வம் அதிகமோ, அதேபோல விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். இதனைபோட்டிக்கான பதிவுகளை தொடங்கிய போது விளையாட்டு வீரர்களும் – ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும், இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொண்டார்கள். அரசு நடத்துகிற விளையாட்டுப் போட்டி என்ற அளவில் இல்லாமல், அரசும் மக்களும் இணைந்து நடத்துகிற போட்டிகள் என்று சொல்கிற அளவுக்கு இப்போட்டிகளுக்கு அதிகளவில் மக்கள் பங்களிப்பு இருந்து வருகிறது.
வழக்கமாக விளையாட்டுபோட்டி என்றாலே கிரிக்கெட், டென்னிஸ், தடகளம் என்ற நிலை தான் இருந்து வந்தது. ஆனால், நம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி, சிலம்பம் உள்ளிட்டவற்றையும் இணைத்துள்ளோம். மொத்தம் 15 விளையாட்டுகளுக்கான போட்டிகள், பள்ளி, கல்லூரி, பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், என 5 பிரிவுகளில் ஆண்கள் – பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
இந்தப்போட்டிகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமம் – நகரம் – மாநகரம் என அனைத்து இடங்களிலும் இது நடத்தப்பட்டது. ஏழை – எளிய மற்றும் திறமைமிகு விளையாட்டு வீரர் வீராங்கனையர்களை அடையாளம் காணுகின்ற விதத்தில் தான் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.
38 மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023 மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலிருந்தும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 355 விளையாட்டு வீரர்கள் – வீராங்கனையர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிகள் நிறைவுற்ற பின்னர், மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்கள் மற்றும் அதிக புள்ளிகளை பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. தனி நபர் / இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரமும், ஹாக்கி போன்ற குழுப்போட்டிகளுக்கு ரூபாய் 9 லட்சம் வரையிலும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளன.
சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 134 மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றுள்ளனர். விளையாட்டு என்பதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது எல்லோரும் விளையாட்டில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளையும் நடத்தினோம். அதில் சிறப்பாக விளையாடி வென்ற 134 மாற்றுத்திறனாளிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாவட்டத்தில் மட்டும் 159 அரசு ஊழியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு சார்ந்தது மட்டுமல்ல. அது ஆரோக்கியத்திற்கும், புத்துணர்ச்சிக்கும் மிக மிக அவசியமான ஒன்று. உடலையும் – மனதையும் ஒரு சமநிலையில் வைத்திருக்க அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். இன்றைக்கு ஏராளமான பள்ளி – கல்லூரி மாணவ மாணவியரும் வந்துள்ளீர்கள். சுமார் 1300 பேர் இங்கு பரிசுகளை பெற்றுள்ளீர்கள். கடந்த 2 மாதங்கள் கோடை விடுமுறை. எவ்வளவு வெயில் அடித்தாலும், தளராமல் நீங்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் உங்களுடைய திறமைகளை நிரூபித்து வந்தீர்கள்.
இப்போது கோடை விடுமுறை முடிந்து கல்விக்கூடங்கள் அனைத்தும் திறந்துவிட்டன. நீங்கள் விளையாடுவதை கைவிடக்கூடாது. அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. இங்கு அரசு ஊழியர்கள் பிரிவில் ஆசிரியர்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பை கடன் கேட்காதீர்கள் என்று உரிமையோடு கூறிக்கொள்கிறேன். நம் மாணவர்கள் தொடர்ந்து விளையாடட்டும். அவர்களை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டுத்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இப்போது ஓர் எழுச்சி இருக்கிறது.
கிரிக்கெட் போட்டியை தாண்டி பல்வேறு தனி நபர் போட்டிகளில் நம்முடைய இளைஞர்களுக்கு மிகப்பெரியளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
உலகின் எந்த மூலையில் எந்த விளையாட்டு நடைபெற்றாலும், இந்தியா சார்பில் பங்கேற்று நம்முடைய தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் மிகப்பெரியளவில் சாதனைகளை செய்து வருகின்றனர்.
தேசிய அளவிலும், நம் வீரர்கள் பெரியளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டு பெருமை தேடித்தருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக, கிராமப்புறங்களில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மிகப்பெரியளவில் உதவிகரமாக இருக்கும். இதனை மனதில் வைத்து தான் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாத சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று சட்டப்பேரவையிலே அறிவித்தோம்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ELITE திட்டம், M.I.M.S (Mission International Medal Scheme) திட்டம், Champions Development Scheme (CDS) போன்ற திட்டங்களின் மூலம் ஒரு வீரருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகையை வழங்கி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத்துறைக்கென்று தமிழ்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாக, பல சர்வதேச அளவிலான போட்டிகளை அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடத்தவுள்ளோம். அந்த வகையில், தற்போது சர்வதேச ஸ்குவாஷ்-2023 தமிழ்நாடு அரசு பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது மட்டுமில்லாமல், அடுத்தடுத்த மாதங்களிலும், சர்வதேச அளவிலான அலை சறுக்கு, ஹாக்கி மற்றும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் போன்றவற்றையும் தமிழ்நாடு நடத்தவுள்ளது.
விளையாட்டுத்துறையில் இன்னும் பல புதிய முன்னெடுப்புகளை எல்லாம் எடுக்கவுள்ளோம். குறிப்பாக கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, வீரர்களுக்கான உதவிகளை செய்வது என்பதற்காகவே, தற்போது முதலமைச்சர் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையினை தொடங்கி வைத்துள்ளார்கள். இந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு வருகிற நிதி பங்களிப்புகளை தேவையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வருகிறோம். இவற்றை எல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்றோம். கோப்பைகளை பெற்றோம், பரிசுகளை வென்றோம் என்பதோடு உங்களது பயணம் நிறைவடைந்து விடக்கூடாது.
விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கான களம் தான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். நீங்கள் இதனை ஒரு தொடக்கப்புள்ளியாக வைத்து அடுத்தடுத்து வருகிற போட்டிகளில் பங்கேற்க தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். மாவட்ட, மண்டல, மாநில அளவில் நீங்கள் வென்றுவிட்டால், பிறகு தேசிய – சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அதற்கு தேவையான அத்தனை பயிற்சிகளையும் – உதவிகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிச்சயம் வழங்கும். இங்கு பரிசுகளை பெற்றுள்ள மாணவ – மாணவியர் படிப்போடு சேர்த்து உங்கள் விளையாட்டுத்திறனையும் வளர்த்துக்கொள்ளுங்கள். பொதுமக்களும் அப்படித்தான், உங்களுக்கு இருக்கின்ற அன்றாட வேலைகளில் விளையாட்டை மறந்து விடாதீர்கள்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளோம். இந்த மாநில அளவிலான போட்டிகள் ஜுலை 1 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை, சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன. இதிலும் வென்று சாதனை படைக்க மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்

