சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அகில இந்திய சைனிக் பள்ளிகள் (AISSEE) நுழைவுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு, ஜனவரி 21 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வின் மூலம் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான 6, 9 ஆம் வகுப்பு மாணவர் – மாணவியர் சேர்க்கை நடைபெறும்.
சைனிக் பள்ளிகள் என்பது இந்தியாவில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைந்த ஆங்கில வழிக் குடியிருப்புப் பள்ளிகளின் வலையமைப்பாகும். அவை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான சைனிக் பள்ளிகள் சங்கத்தால் (எஸ்எஸ்எஸ்) நிர்வகிக்கப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் இந்திய கடற்படை அகாடமி (INA) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் நுழைவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதே சைனிக் பள்ளிகளின் முதன்மை நோக்கமாகும்.
தேர்வு தேதி: 21.01.2024
தேர்வு முறை: கொள்குறிவகை (பேப்பர்-பென்)
தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் 186 நகரங்கள்
தேர்வு மொழி: 9 ஆம் வகுப்பு சேர்க்கை தேர்வு ஆங்கில வழியில் மட்டுமே நடக்கும். 6 ஆம் வகுப்பு சேர்க்கை தேர்வு ஆங்கிலம், மராத்தி, இந்தி, ஒடியா, அஸ்ஸாமி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், குஜராத்தி, தெலுகு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் நடக்கும்.
முக்கிய தேதிகள் – 6 ஆம் வகுப்பு சேர்க்கை: மாணவ – மாணவியர் 31.03.2024 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் – 9 ஆம் வகுப்பு சேர்க்கை: மாணவ – மாணவியர் 31.03.2024 அன்று 13 வயது முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினர் / ராணுவ வீரர்களின் பிள்ளைகள், முன்னாள் ராணுவத்தினர்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (என்.சி.எல்) ஆகியோருக்கு ரூ.650. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.500.
விண்ணப்ப தேதிகள்: 07.11.2023 முதல் 16.12.2023

தற்போது, நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் மற்றும் 19 தனியார் சைனிக் பள்ளிகள் உள்ளன. இதில் விண்ணப்பதாரர்கள் AISSEE2024 மூலம் சேர்க்கை பெறலாம். இந்தப் பள்ளிகள் என்ஜிஓக்கள் / தனியார் பள்ளிகள் / மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. மேலும், சைனிக் பள்ளிகள் சங்கத்தின் (எஸ்எஸ்எஸ்) ஆதரவின் கீழ் செயல்படுகின்றன.
அரசு சைனிக் பள்ளி – உடுமலைப்பேட்டை
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது அமராவதி சைனிக் பள்ளி. இந்தப் பள்ளியானது இந்திய ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்குப் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். இணையதளம் https://www.sainikschoolamaravathinagar.edu.in/
தனியார் சைனிக் பள்ளி – தூத்துக்குடி
விகாசா சைனிக் பள்ளி 2017 ஆம் ஆண்டில் சொசைட்டி ‘ பிஎஸ்டிஎஸ் அறக்கட்டளை ‘ மூலம் ‘விகாசா பள்ளி’ என நிறுவப்பட்டது . தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடம், சாயர்புரம் கிராமத்தில் பள்ளி அமைந்துள்ளது. சைனிக் பள்ளி சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 04 மே 2022 அன்று விகாசா பள்ளி புதிய சைனிக் பள்ளியாக மாற அனுமதி பெற்றது. பள்ளி 13.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நுழைவதற்காக கேடட்களுக்கு பயிற்சி அளிக்க மற்றும் கல்வி கற்பதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது என்று அக்கல்வி நிறுவனத்தின் அறிவிப்பு கூறுகிறது. https://thevikasa.edu.in என்ற விலாசத்தில் சென்று கூடுதல் விபரங்களை பார்க்கலாம். நேரில் சென்றும் விசாரிக்கலாம்.
ஆன்லைன் மூலம் https://aissee.ntaonline.in/ நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

