spot_img
More
    முகப்புசெய்திகள்’’கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023..!’’ வாபஸ் பெற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    ’’கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023..!’’ வாபஸ் பெற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    ‘’தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 எந்த வகையிலும் நீர்நிலைகளை பாதுகாத்திட உதவாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில் வளர்ச்சி மற்றும், புதிய வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் பயன்படும். எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்’’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    ”நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசி நாளில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற புதிய சட்டத்தை சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது. சட்டமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே இதுபோன்ற சட்டமுன்வடிவுகளை படித்து கருத்து சொல்வதற்குக்கூட போதிய அவகாசம் கொடுக்காமலும், மிக முக்கியமாக நிலம் தொடர்பான ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன் உரிய முறையில், விவாதிக்காமல் அவசர கதியில் முழுக்க, முழுக்க பெரும் நிறுவனங்கள், தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவும் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள், பெரும் கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கோடு இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகள், குளங்கள், இவற்றிற்கு செல்லும் நீர்வழிப்பாதைகள் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில் மழை காலத்தில் கூடுதலாக பெய்திடும் மழைநீரை கூட முறையாக சேமித்து வைக்க முடியாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் உள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் அரசு முறையாக நீர்நிலைகளை பாதுகாக்காமல் உள்ளதுதான். 

    பல நீர்நிலைகளில் ஆக்கிமிப்புகளால் அதன் முழு பரப்பளவு குறைந்துள்ளது. அரசின் புதிய சட்டத்தின் நோக்க காரண விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளபடி நீர்நிலைகள் பல குறிப்பாக ஆறுகள் மற்றும் ஓடைகள், காலபோக்கில், இயற்கை நிகழ்வுகளால் அவற்றின் பரப்பையும், போக்கையும் மாற்றிக் கொள்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு சரியானது என எந்த ஆய்வுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே உள்ள நீர்நிலைகள், ஆறுகள் ஓடைகளின் பரப்பையும் அதன் போக்கையும் செயற்கையாக ஆக்கிமிப்பின் மூலமாகத்தான் பெரும்பகுதி நடைபெற்றுள்ளது என்பதை அரசு உணர வேண்டும். 

    நிலம் கையகப்படுத்துவற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில் ஏழை, சிறு-குறு விவசாயிகளிடம் உள்ள நிலங்களையும், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அரசு அறிவிக்கும் எந்த திட்டத்திற்கும் எந்த வரன்முறையுமின்றி நிலங்களை இந்த சட்டத்தின் மூலம் எடுக்க வழிவகை செய்யும். மேலும் பரந்தூர் விமான நிலையம் உட்பட தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் பல்வேறு சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஜவுனி பூங்கா போன்ற இது போன்ற திட்டங்களுக்கும் சாதாரண விவசாயிகளுடைய நிலங்களையும், இந்த சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்த முடியும். 

    மேலும் நிலம் தொடர்பான உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு அரசு அமைக்கும் நிபுணர் குழுவிற்கு முழு அதிகாரமும் வழங்கப்படுவது ஆபத்தானது. எனவே, தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 எந்த வகையிலும் நீர்நிலைகளை பாதுகாத்திட உதவாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில் வளர்ச்சி மற்றும், புதிய வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் பயன்படும். எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்”.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments