பிப்ரவரி 13, 2009 அன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் 16 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 161 பேர் படுகாயமடைந்தனர். அன்றைய தினம் ‘கருப்பு’ வெள்ளி என்று அழைக்கப்பட்டது.
.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 2, 2023), அதே எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் தடம் புரண்டதில் 233 பேர் பலியானார்கள். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
ஒடிசா, தமிழ்நாட்டில் துக்கம் ஒரு நாள் அனுசரிக்க, இரு மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

2009 இல் என்ன நடந்தது?
அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தைக் கடந்து தண்டவாளத்தை மாற்றிக் கொண்டிருந்தபோது தடம் புரண்டன. ”பெட்டிகள் தடம் புரண்டு ரயிலில் இருந்து பிரிந்தது. 13 பெட்டிகளில் ஒன்று மற்றொன்றில் ஏறியது. தடம் புரண்ட 13 பெட்டிகளில் 11 ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் இரண்டு ஜெனரல். இரவு 7.30 மணி முதல் 7.40 மணி அளவில் விபத்து நடந்தது” என்று அதனை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.
’இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் அப்போது வந்த செய்தியின் தமிழ் ஆக்கம்:
ஹவுரா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தடம் புரண்டதில் குறைந்தது 16 பயணிகள் பலியானார்கள். மற்றும் 161 பேர் காயமடைந்தனர். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், தனது பதவிக் காலத்தில் இந்திய ரயில்வேயின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகவும், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நாளில், நடந்த இந்த ரெயில் தடம்புரண்ட அசம்பாவிதம் அதிர்ச்சி அளிக்கிறது.
புவனேஸ்வரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 13 பெட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு தடம் புரண்டதில் 16 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 161 பேர் காயமடைந்தனர்.

’’ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் அருகே அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் 16 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 161 பேர் காயமடைந்ததாக கிழக்கு கடற்கரை ரயில்வே பொது மேலாளர் அஜய் குமார் கோயல் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கோயல், ’’13 பெட்டிகளில் 11 ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் இரண்டு ஜெனரல் பெட்டிகள். ரயிலின் என்ஜின் கவிழ்ந்து போனது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை’’ என்றார்.
இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனது இரயில்வே பட்ஜெட்டில் ரயில்வேயின் பாதுகாப்பு சாதனை மற்றும் ரயில் விபத்துகள் குறைவதை எடுத்துக்காட்டிய ஒரே நாளில், இரவு 8:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ‘’விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்றார் லல்லு பிரசாத் யாதவ்.
’ஐந்து லட்சமும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு வேலையும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

