இசைஞானி இளையராஜாவுக்கு ஜுன் 2-ம் தேதி பிறந்தநாள், அன்றைய தினம் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியூர் பயணத்தில் இருந்ததால் அவரால் சென்னையில் இளையராஜா வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்ல முடிய வில்லை. இந்நிலையில் சென்னை திரும்பிய கே.அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். உடனே, இளையராஜா வீட்டுக்கு சென்று நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதையடுத்து கே.அண்ணாமலை, வெளியிட்ட அறிக்கையில், ‘’இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள், நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

முன்னதாக, இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ‘’
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர்கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இசை அன்னையின் செல்லப்பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். தனது 14 வயதிலேயே இசைவாழ்க்கையை துவங்கியவர். ஆரம்பத்தில் தனது சகோதரர்களோடு நாடகத்தோடு இணைந்த நாட்டுப்புறக்கலை மூலம் தனது இசை விருந்தை மக்களுக்களித்து வந்தார்.
திரையுலகில் காலடியெடுத்து வைத்து, அனைவரையும் தனது இசையின் பிடியில் வசீகரம் செய்தார். அவரது பாடல்களுக்கு மயங்காதவர் யாரும் உண்டோ. அவரது பாடல்களுக்கு நானும் ஒரு மிகச்சிறந்த ரசிகன். இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள். அவரது பாடலான முதல் மரியாதை பட பாடல், சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது.

1,000 படங்களுக்கு மேல் இசையமைத்தும், 20,000 கச்சேரிகள் செய்தும் தனது திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய இசைஞானி அவர்கள், இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு CNN – IBN நடத்திய கருத்துக் கணிப்பில் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
பால் நிலா பாதை, யாருக்கு யார் எழுதுவது?, எனக்கு எதுவோ உனக்கு அதுவே, சங்கீத கனவுகள், யாதுமாகி நின்றாய், ஆதிசங்கரரின் விவேக சூடாமணி, உனக்குத் திரை எது? போன்ற புத்தகங்கள் மூலம் அவரது ஆன்மீகம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை அறிய முடியும். பத்ம பூஷன் விருது, கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, 2018இல் பத்ம விபூஷண் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இசையோடு இணைந்து பொதுவாழ்க்கையிலும் அவரது சேவை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று வாழ்த்தி இருந்தார்.
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கு ஜுன் 4-ம் தேதி பிறந்தநாள். அவருக்கு பொன்னார், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என்று அறிக்கையில் சொல்லி இருந்தார்.

அந்த அறிக்கையில், ‘’இன்றைய தினம், எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, இந்த நாளை மிகச் சிறப்பானதொரு நாளாக மாற்றிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள், என் மேல் அன்பு கொண்ட கட்சி சாரா மற்றும் மாற்றுக் கட்சி சகோதர சகோதரிகள் மற்றும் என் நலம் விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கான சேவையில், உங்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து உழைப்போம்.
ஜெய் ஹிந்த்!
இந்நிலையில்தான் இசைஞானி இளைஞராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விட்டு அவரது காலி விழுந்து தனது பிறந்தநாளுக்கான ஆசியை பெற்றார் கே.அண்ணாமலை.

