தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 2023 மே 18,19 ஆகிய இரண்டு நாட்கள் விருதுநகரில் சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்.பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023. இச்சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நீரியல் நிபுனர் பேராசிரியர்.எஸ்.ஜனகராஜன் உரையாற்றினார். அகில இந்திய இணைச் செயலாளர் தோழர்.டி.ரவீந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத் தலைவர் ஏ.விஜயமுருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி.முருகன் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து சட்டமன்றத்தில் எவ்வித விவாதம் இல்லாமல் நிறைவேற்றியுள்ளது தமிழ்நாடு அரசு. இதில் மிக முக்கியமான சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023. இந்த சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உட்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய திட்டங்களுக்கு விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும் போது நியாயமான சட்டப்படியான இழப்பீட்டை பெறுவதற்கே விவசாயிகள் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்பு சட்டம் எந்த வகையிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள நிலங்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடவும் உதவாது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் பயன்படும்.
எனவே, தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இன்றைய தேதியில் 103 அடி தண்ணீர் உள்ளது, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் தேதியை முன்கூட்டியே அறிவித்தால், விவசாயிகள் தங்களை விவசாய பணிகளுக்கு தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். அதே போல் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்குப் இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும். எனவே பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக மணலுக்கு பதிலாக எம்.சாண்டும், அரசு சாலைகள் அமைக்கவும் அதிகமாக கருங்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித ஆய்வும் இல்லாமல் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் குளங்கள், விளைநிலங்கள், குடிநீர், குடியிருப்புகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்படும் கல்குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
கடந்த 25.4.2022 தேதியன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட எல்லைகளுக்குள் 1972 வனவிலங்கு சட்டம் 26ஏ (11) (பி)ன் படி காவேரி தெற்கு வனஉயிரியல் சரணாலயம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சேர்த்து 686,405 கி.மீ பரப்பில் சுமார் 47782,265 ஏக்கர், 20858.34 எக்டேர் ஆக மொத்தம் 68640,605 எக்டேர் நிலத்தினை கையகப்படுத்திட அரசு ஆணையும் வெளியிடப்பட்டு பணிகளை துவக்கியுள்ளது, அஞ்செட்டி அருகே மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுமார் 140 கி,மீ தூரத்திற்கு சரணாலயத்திற்கான இரும்பு கம்பி வேலி அமைத்திடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதனால் சுமார் 163 கிராம மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிடவும், காலம் காலமாக ஜீவனம் செய்து வரும் விவசாய நிலங்களிலிருந்து முழுமையாக வெளியேற்றிடவும், அவர்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்திட முடியாத அவல நிலைக்கு தமிழக அரசும், மத்திய அரசின் இத்திட்டம் வேகப்படுத்தி வருகின்றன.
அநேகமாக இத்திட்டம் குறித்து ஒன்றிய அரசின் அறிவிக்கையில் அப்பகுதி மக்கள் மத்தியில், கிராமங்களில் 3 மாத்த்திற்குள்ளாக கருத்து கேட்பு நடத்தப்படவேண்டும் என்பதை மாநில அரசும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் கருத்து கேட்பு நடத்தப்படவில்லை. ஆனால் அவசர அவசரமாக வனஉயிரின சரணாலயப் பணிகள் துவங்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன். உடனடியாக இரும்பு கம்பி வேலி அமைப்பதை அகற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே எங்கேயும் இரும்பு கம்பி வேலி அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுடன், அப்பகுதி கிராம மக்களின் கருத்துக்கேட்பு கூட்டத்தினை மாவட்ட நிர்வாகம் நடத்திய பின்னரே இது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் 63 கிராமங்களை வெளியேற்றுவதை அனுமதித்திட முடியாது, இதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்திட வேண்டும்,
அதே போல் வேலூர், திருண்ணாமலை, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் வனஓர விவசாயிகளின் பட்டா நிலங்களில் பயிர் செய்திடும் போது காட்டுப்பன்றி,யானை, மயில், குரங்கு போன்ற வனவிலங்குகளால் பயிர் பாதிப்புகள் அதிகமாக தொடர்கின்றதை தடுத்து நிறுத்திட,உரிய நடவடிக்கை மாநில, ஒன்றிய அரசுகள் மேற்கொள்வதுடன் பயிர்இழப்பீட்டை முழுமையாக வழங்கிட வேண்டும். அதே போல் யானை போன்ற வனவிலங்குகளுக்கு காடுகளில் குடிநீர், உணவு போன்றவைகளையும் மாநில அரசு உறுதி செய்திட வேண்டும்..
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் 9 லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்கின்றனர். 2 ஆண்டுகளாக தேங்காய் விலைவீழ்ச்சி ஏற்பட்டு தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் தென்காசி, குமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வழங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். மேலும் தென்னை விவசாயத்தை பாதுகாக்க இது உதவும் என்ற நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், சத்துணவு உட்பட உணவு வழங்கும் அனைத்து திட்டங்களிலும் தேங்காய் எண்ணெய்யை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்

