ஆகஸ்டு- 11 பா.இராமச்சந்திர ஆதித்தனார் 89-வது பிறந்தநாள். மாலை முரசு நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்து மறைந்த பா.இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் இன்று .
அவருக்கு கவிஞர் கண்ணதாசனை மிகவும் பிடிக்கும் .கண்ணதாசன் ஊரைச் சேர்ந்தவர் கவிஞர் அரு.நாகப்பன் பட்டிமன்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர். கண்ணதாசன் மறைவுக்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் சிறுகூடல்பட்டியில் பட்டிமன்றம் நடத்துவார் ஒருமுறை அந்த பட்டிமன்றத்தை காண வரும்படி பா .இராமச்சந்திர ஆதித்தனாரை அழைத்தார். அவரும் ஒப்புக் கொண்டார். ஐயாவுடன் நானும் காரில் சென்றேன் .அந்த ஊருக்கு சென்று அங்கு கண்ணதாசன் வணங்கிய மலையரசி அம்மனை தரிசித்து விட்டு பட்டிமன்றத்தை நள்ளிரவு வரை உட்கார்ந்து கேட்டார். இரவு நேரத்தில் கூட்டம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அய்யா அவர்கள் கடைசி வரை இருந்து அந்த பட்டிமன்றத்தை கேட்டு ரசித்து விட்டு திரும்பினார்.
பட்டிமன்றத்திற்கு வந்தவர்களுக்கு சோடா கொடுத்தார்கள். உள்ளூர் தயாரிப்பு .நானும் விரும்பி குடித்து விட்டேன். மீண்டும் காரில் வரும்போது வயிற்றை கலக்கி விட்டது. ஐயாவிடம் சொன்னதும் காரை நிறுத்தினார். நான் கீழே இறங்கி சென்று எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு மீண்டும் காரில் ஏறினேன்.

அப்போது அய்யா அவர்கள் சொன்னார்கள் .இது போன்ற வெளி ஊர்களில் குளிர்பானங்களை பார்த்து குடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இப்படி ஒவ்வொரு முறையும் அவர் உயிரோடு இருக்கும் வரை சின்ன சின்ன விஷயங்கள் எல்லாவற்றிற்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறியவர். என் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தால் நன்றாக இருக்கும். வீடு வாங்கும் போது அதை எப்படி தேர்வு செய்ய வேண்டும். பத்திரிகையில் கட்டுரை எழுதும்போது அதற்கான தலைப்பு எப்படி தேர்வு செய்ய வேண்டும்.
எந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கூட கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பார். வகுப்பில் நாம் ஆசிரியரிடம் பாடம் கேட்டு இருப்போம். ஆனால் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக தொலைபேசியிலும் நேரிலும் அவரிடம் பத்திரிகை பாடம் படித்திருக்கிறேன்.
எந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது, எந்த செய்தியை எப்படி தலைப்பு செய்தி ஆக்க வேண்டும் என்பதை அவரைப் போல் யாரும் முடிவு எடுக்க முடியாது.
அதுபோல எங்கள் திருச்செந்தூரில் மாசி மாதம் முருகன் கோவில் தேரோட்டம் நடக்கும் போது முதல் இடத்தில் தனக்கு பக்கத்தில் என்னை நிறுத்தி தேர் இழுக்க வைத்தார்.
எப்போதும் என் தந்தை அவருக்கு பக்கத்தில் இருப்பார். தந்தை மறைவிற்குப் பிறகு அந்த இடத்தில் என்னை நிறுத்தி அழகு பார்த்தார்.
தன் பத்திரிகையில் உள்ள ஊழியர்களுக்கு குடும்ப பாசத்துடன் உதவி செய்தவர்.
வெளியே இருந்து எந்த அழுத்தம் வந்தாலும் அது அரசியல் ரீதியாக இருந்தாலும், அதிகாரிகள் மூலமாக வந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்காதவர். ஒரு முறை மிக உயர் பதவியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி அவர் தொடர்பாக வந்த செய்திக்காக எங்கள் அலுவலகத்திற்கு வந்து ஐயாவை பார்த்து இந்த நிருபர் இந்த செய்தியை போட்டு இருக்கிறார். அது தவறு எனவே அவரை வேலையை விட்டு நீக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார் .
அதற்கு ஐயா அளித்த பதில், செய்தி தவறு என்றால் அதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். அதற்காக என் ஊழியரை வேலையை விட்டு நீக்கும்படி சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று பதில் கூறி அனுப்பினார்.
அந்த துணிவு அவருக்கு மட்டும் தான் உண்டு.
* படத்தில்அய்யா பின்னால் இருப்பது நான்.

-கே.கே.ஆர். ஆதித்தன் , முகநூல் கட்டுரை

