படித்த பள்ளியும் வகுப்பறைகளும் நடுமூளையில் நங்கூரமிட்டுருப்பவை. அப்போதெல்லாம் பாளையில் சேவியர்ஸ் பள்ளியில் இடம் கிடைப்பது என்பது இப்போது எம்.ஐ.டி பாஸ்டனில் இடம் கிடைப்பது மாதிரி பெருமிதத்துக்குரிய விஷயம். சரியாய் 43 வருஷத்துக்கு முன்னால் நுழைவுத்தேர்வு எழுதி அங்கு இடம் கிடைத்து, RMKV-யில் ஊதா டவுசர் துணியும் எண்டைஸ் கடையில் வெள்ளைச் சட்டைதுணியும் வாங்கி ஸ்டார் டெய்லரிடம் கொடுத்து தைத்து (இங்கெல்லாம் துணி வாங்கி, ஸ்டார் டெய்லரிடம் தைப்பதெல்லாம் அப்போது ரொம்பப் பெரிய விஷயம்…) பளிச்சென பள்ளிக்கு வந்து 43 வருஷமாச்சு.
நேற்று (23.10.2023)144 வது ஆண்டு விழா! நானும் ஒரு சிறப்பு விருந்தினராய் மேடையில். “ஒளியும் உய்வும் உண்மையால்” என்கிற இலச்சினை பொறிக்கப்பட்ட மேடையில் நான் பள்ளி தலைமை ஆசிரியர் ரெக்டர் என பல பள்ளி ஆளுமைகள் மற்றும் இன்னொரு சிறப்பு விருந்தினர் திரு முத்தையா அவர்களுடன் அமர்ந்திருந்த போது, காது வழியே எண்டார்பின்கள் கொட்டிக்கொண்டே இருந்தது.

நான் நுழைந்த வருடம் 1980இல் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது. அன்று வரிசையில் நின்ற எல்லோருக்கும் பட்டர் பேப்பர் கவரில் கொடுத்த தேங்காய் மிட்டாயின் இனிப்பு இப்போதும் இனிக்கிறது. மாலை நாடகத்தில் தமிழாசிரியர் நேவிஸும் இயற்பியல் ஆசிரியர் பாலுச்சாமியும் நடித்த மேடை நாடகமும் நினைவில் ஒட்டியிருக்கிறது. 20 ஆண்டுகளாக ஏறிய மேடையும் ஆற்றிய உரைகளைவிட நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இந்த மேடை கொடுத்தது. 1987 இல் படித்த வகுப்பறை ஆசிரியர் அறையாய் மாறியிருந்தது.

சன்னல் வழியே பார்த்த போது என் தமிழாசிரியர் மீசெகிரகோரி தன் வெள்ளைச் சட்டையின் கைகளை மடக்கிக்கொண்டு கம்பீரமாய்ச் சிரித்தது போலிருந்தது. சோர்வாயிருந்தால், ஒரே ஒரு முறை நாம் படித்த பள்ளிக்குப் போய் அங்கே வளாகத்தில் மாணவர்க்கு வைத்திருக்கும் தண்ணீரை ஒருகுவளை பருகி வாருங்கள். பள்ளி வளாகம் முழுக்க அதே நீல டவுசரும் வெள்ளைச் சட்டையும் போட்டு ஏராளமான மாணவர்கள். ஒவ்வொருத்தர் முகத்திலும் என் முகம் ஒட்டியிருந்தது. அல்லது என் முகத்தில் அவர்கள் அத்தனை பேரின் முகமும் ஒட்டி இருந்தது. சமீபத்திய வண்ணதாசனின் கவிதை மாதிரி.
நன்றி: மருத்துவர் கு.சிவராமன் முகநூல்

