spot_img
More
    முகப்புசெய்திகள்"கிருஷ்ணகிரி விவசாய பெருமக்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும்.." சீமான்

    “கிருஷ்ணகிரி விவசாய பெருமக்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும்..” சீமான்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

    “கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நான்கு தொழிற்வளாகங்கள் ( சிப்காட்) செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 5-வது தொழிற்வளாகம் அமைக்கும் பொருட்டு மேலும் 3034 ஏக்கர் விளை நிலங்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்கிறது.

    விளைநிலங்களைப் பறிக்க முயலும் திமுக அரசுக்கு எதிராக வேளாண் பெருங்குடி மக்கள் கடந்த 152 நாளாக அறவழியில் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து களத்தில் நிற்பதோடு, கடந்த ஏப்ரல் மாதம் 3 நாள் பட்டினிப் போராட்டத்தையும் முன்னெடுத்தது. ஆனால், வேளாண் மக்களின் உரிமைப் போராட்டத்தினை துச்சமென கருதி, காவல்துறை மூலம் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

    வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு – 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    மேலும், உத்தனப்பள்ளி உரிமைப் போராட்டக் களத்தில் கடந்த 150 நாட்களாகப் போராடி வந்த வேளாண் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா அன்னய்யா அவர்கள் நிலம் பறிபோகும் துயரந் தாளாமல் போராட்டக் களத்திலேயே மரணித்தச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தலைமுறை தலைமுறையாக பெற்ற தாயினும் மேலாக பேணிப் பாதுகாத்த விளைநிலங்களை, வலுகட்டாயமாகப் பறித்து இன்னும் எத்தனை விவசாயிகளின் மரணத்திற்கு திமுக அரசு காரணமாகப் போகின்றது?

    ஆகவே, உத்தனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் கொடுங்கொன்மையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

    வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைப்போராட்டம் வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்று உறுதியளிப்பதோடு, விவசாய பெருமக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற கடும்போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments