spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு’காவிரி நீர் - கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக...

    ’காவிரி நீர் – கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்..!’’ சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

    ’’தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு அரசினர் தனித் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். 
    தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :
    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
    தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய காவிரி நதிநீர் உரிமையைக் காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை – எண்ணத்தை – இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது.
    ஆளும் கட்சியாக இருந்தாலும் – எதிர்க்கட்சியாக இருந்தாலும் – காவிரி நதிநீர் உரிமையைக் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், எப்போதும் எந்தச் சூழலிலும் உறுதியாக இருக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.
    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
    இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது.
    2021-ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24-ஆம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
    காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.  இதன் பயனாக 2021-22-ஆம் ஆண்டில் 46.2 இலட்சம் டன் அளவிலும், 2022-23-ஆம் ஆண்டில் 45.9 இலட்சம் டன் அளவிலும் காவிரி பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப் பெரிய சாதனையைப் படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.
    இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும், தென்மேற்குப்  பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம்.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி. க்கும் மேலாக உள்ளபோது, உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம்.
    திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை  இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள்.
    இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியதை, என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.
    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
    கடந்த ஜூன் மாதத்தில் பில்லிகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி-க்கு பதிலாக, 2.833 டி.எம்.சி மட்டுமே வரப்பெற்றோம்.
    இதனைத் தொடர்ந்து 3.7.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. துரைமுருகன் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தார்.
    மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதவாரியாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரினை உடனடியாக அளித்திட கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள். மீண்டும் 5-ஆம் தேதியும் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
    தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், 2023-24 பாசன ஆண்டானது ஒரு பற்றாக்குறை ஆண்டு என்ற காரணத்தைக் கூறி, இதன் பின்னரும் கர்நாடகா நமக்கு அளிக்க வேண்டிய நீரினை அளிக்கவில்லை. இதனால் குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதவாரியாக தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
    இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி அன்று மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மீண்டும் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தினார்கள். இதன் பின்னரும், கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை.
    ஜூலை 27-ஆம் தேதி அன்று, கர்நாடகாவின் 4 அணைகளின்  மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாகவும் இருந்த போதிலும், பில்லிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது.
    இதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரிடம் கோரப்பட்டது.
    தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இந்த தொடர் முயற்சிகளையடுத்து, ஜூலை 25  அன்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு 11,000 கன அடி நீரினை அடுத்த 6 நாட்களுக்கு திறக்குமாறு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
    ஜூலை 31  அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 83-வது கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அளிக்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடுமாறு கோரியது. இருப்பினும், பில்லிகுண்டுலுவில் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த 7 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரினை மட்டுமே திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு அளித்தது.
    கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரின் பற்றாக்குறையை சரிசெய்யுமாறு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திட ஆகஸ்ட் 4 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். 
    இதனையடுத்து  ஆகஸ்ட் 10  அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 15,000 கனஅடி என்ற அளவில் ஆகஸ்ட் 11 முதல்  அடுத்த 15 நாட்களுக்கு வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
    ஆகஸ்ட் 11 அன்று நடந்த கூட்டத்தில் 15 ஆயிரம் கன அடி என்பதை 10 ஆயிரம் கன அடியாக ஆணையமே குறைத்துக் கொண்டது. இதனை ஏற்காமல் தமிழ்நாடு அரசின் உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து, கர்நாடகா உடனடியாக 24,000 கனஅடி நீரை வழங்கவும், பற்றாக்குறையான 28.849 டி.எம்.சி நீரையும் வழங்கவும் உத்தரவிடுமாறு கோரி, ஆகஸ்ட் 14 அன்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தது. இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
    இதனையடுத்து, ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், வினாடிக்கு 5,000 கன அடி நீரை  15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. 
    இந்தக் கூட்டங்களில், ஏற்கெனவே நிலுவையிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு நாம் வலியுறுத்திய போதிலும், எவ்வித உத்தரவையும் ஆணையம் வழங்வில்லை.
    எனவே, செப்டம்பர் 19  அன்று மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.  உடனடியாக 12,500 கனஅடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறு கோரினார்கள். ஆனால் இந்த மனு மீது ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    இதனிடையே, செப்டம்பர் 19 அன்று கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தனது 22, 23 மற்றும் 24-ஆவது கூட்டங்களில் எடுத்த முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுமாறு கோரி ஒரு மனு தாக்கல் செய்தது.
    இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்து மனுக்களை முடித்து வைப்பதாகவும் ஆணையிட்டது.
    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 29  அன்று நடைபெற்ற தனது 25-ஆவது கூட்டத்தில், பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
    இந்த அளவையும் விட  குறைவாகவே கர்நாடகா தற்போது பில்லிகுண்டுலுவில் அளித்து வருவதால், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள், தலைவர், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவர்களுக்கு, 6.10.2023 அன்று எழுதிய கடிதத்தில் கர்நாடகா ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாததை சுட்டிக்காட்டி, ஆணையம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
    இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளது. அதாவது இன்னும் இரண்டு நாட்களில் நடத்த உள்ளது.
    இக்கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24–இல், ஏற்கெனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீரளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும், அடுத்த 10-15 நாட்களுக்கு அளிக்கவேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம்.  மேலும், சட்ட வல்லுநர்களிடம்  ஆலோசித்து, தேவைப்படின் தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
    தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-2024 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் போதிலும் 1.06.2023 முதல் 3.10.2023 வரை பில்லிகுண்டுலுவில் 46.1 டி.எம்.சி நீர் பெறப்பட்டுள்ளது.
    இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனம்- Turn system-படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று, குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
    எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இந்த பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றேன்.
    தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல – மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்!
    அதனை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம்.
    ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தயங்காமல் செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
    அதே உணர்வுடன் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
    ஏற்கனவே, ஒரு தீர்மானம் வரையப்பட்டு அதன் நகல் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசினர் தனித்தீர்மானத்தின் வடிவத்தினை செம்மைப்படுத்தி, திருத்தப்பட்ட தீர்மானத்தினை நான் இப்போது முன்மொழிகிறேன்.
    அரசினர் தனித் தீர்மானம்
    “தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.”  (மேசையைத் தட்டும் ஒலி)
    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே !
    நான் முன்மொழிந்த மேற்காணும் திருத்தப்பட்ட தீர்மானத்தினை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்று, நிறைவேற்றித் தருமாறு வேண்டி, கேட்டு அமைகிறேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments