சென்னையில் அக்டோபர் 14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி., இன்று கொடுத்தார். விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது அழைப்பு விடுத்தார் கனிமொழி எம்பி.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14 ஆம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்க உள்ளது. இதில், சோனியா காந்தி, பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்ட அறிக்கை:
‘’முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், பெண் உரிமைக்காகவும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசு வேலைவாய்ப்பு, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை தொடர்பான சட்டங்கள், அவரது ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.
தற்போது முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிமூலமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்கள், மகளிரை அர்ச்சகராக்கியது என பெண்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்டகால கோரிக்கை. ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால மறதிக்கு பிறகு, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நிறைவேறியுள்ளது. அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வராமல், 2029-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்த வலியுறுத்துவது அவசியம். இதை கருத்தில் கொண்டும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் அக்.14-ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்க உள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பெண்உரிமை போற்றும் இந்த மாநாட்டில் தி.மு.க மகளிர் அணியினர் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் பங்கேற்க வேண்டும்’’.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நேரில் அழைப்பு -கனிமொழி எம்பி.,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்பி தலைமையில் ஆன குழுவினர் விழாவுக்கான அழைப்பிதழை இன்று கொடுத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை மாநாட்டிக் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது நேரில் அழைத்தார் கனிமொழி எம்பி. இதுகுறித்து கனிமொழி எம்பி அறிக்கையில், ‘இன்று தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, நம் கழக மகளிர் அணியின் ஒருங்கிணைப்பில், வருகின்ற அக்டோபர் – 14 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினோம். மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்’ என்று கூறியுள்ளார்.

