spot_img
More
    முகப்புசெய்திகள்’’அமைச்சரவையில் மாற்றம் ஏன்..?’’ மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’அமைச்சரவையில் மாற்றம் ஏன்..?’’ மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மனம் திறந்து’ பேசியதாவது:

    “தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த, ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களும், அவருக்கு உதவியாக இருந்த தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் அவர்களும், தொழில்துறை அதிகாரிகளும், இந்திய அளவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று முன்னணி தொழில் துறையினரை சந்தித்து பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர். அதற்காக, நான் அவர்களை இந்த நேரத்தில் மனதார பாராட்ட விரும்புகிறேன்.

    மேலும், இன்றைய தினம், தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த நிலையில், உங்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழ்நாடு அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும் என்று இந்த தருணத்தில் நான் கூற விரும்புகிறேன்.

    தலைவர் கலைஞருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் பல விரிவாக்கங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போது 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது இதுவே சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

    இங்கே வெகு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஹூண்டாய் நிறுவன அலுவலர்களுக்கும், நமது அரசு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் துறை நிச்சயமாக ஏற்கனவே முன்னேறி வந்திருக்கிறது. இன்னும் முன்னேறப் போகிறது.

    அதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் கடந்த ஆண்டும் சரி, இப்போது இந்த ஆண்டும் சரி, எந்த நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், தொழில்துறை நிகழ்ச்சியில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதுவே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments