பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை, பணிகாலத்தில் உயிரிழந்த அரசு அச்சகப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், 1 இலட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழை வழங்கி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு அச்சகப் பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் சார்பாக, பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்குகின்ற நிகழ்ச்சி மற்றும் அரசு அச்சக பணியாளர்களுக்கான நவீன வசதியுடன் 34.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கே அடிக்கல் நாட்டியிருக்கக்கூடிய 96 குடியிருப்புகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்குகின்ற நிகழ்ச்சி மற்றும் தமிழரசு இதழினுடைய ஒரு இலட்சத்து ஒன்றாவது சந்தா வழங்குகின்ற இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சி. உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் வணக்கத்தையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக அரசு தேர்தல் அறிக்கையிலே சொன்னபடி, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள், தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்று, தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியிருக்கிறோம், நிறைவேற்றியிருக்கிறோம்.
பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக என்றுமே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, சென்ற அரசால் போடப்பட்ட அத்தனை அவதூறு வழக்குகளையும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை வெளியிட்டு அத்தனை வழக்குகளையும் இரத்து செய்தார்.
அதேபோல, கொரோனா நேரத்தில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கெல்லாம் 5000 ரூபாய் நிதி உதவி கிடைக்கச் செய்ததும் நம்முடைய அரசு. தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்காக சேவை செய்ய நம்முடைய அரசு காத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அதேபோல் இன்று இந்த நிகழ்ச்சிக்கு பொதுவாக பத்திரிகையாளர்களெல்லாம் வந்திருக்கிறீர்கள், மூத்த பத்திரிகையாளர்களும் வந்திருக்கிறீர்கள். மற்ற நிகழ்ச்சிகள், மற்ற துறை நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்கள் அந்த நிகழ்ச்சியின் செய்தியை சேகரிப்பதற்காக வருவீர்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு அளவில் வரும், ஒவ்வொரு கோணத்தில் வரும், சில சமயம் வராமல் கூட போய்விடும். ஆனால் இன்றைக்கு உங்களுடைய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் செய்தியை நீங்கள் சேகரிக்காமல் இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு வேறொரு மிக முக்கியமான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரு புதிய அமைச்சர் பதவியேற்று இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு வந்திருக்கிறீர்கள். எனவே, அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான நிகழ்ச்சி தான். நேற்று நம்முடைய அமைச்சர் சாமிநாதன், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, உடனே இந்த அரசு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் என்றால், பத்திரிகையாளர்களுக்கு இந்த அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எப்போதும் போல நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு துணைநின்று, ஏதாவது தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி, நல்லது செய்தால் எங்களை தட்டிக்கொடுத்து நீங்களெல்லாம் உங்களுடைய பணியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றேன்’’.என்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
’’தமிழ்நாடு அரசின் அச்சகத்துறை சார்பாகவும் நடைபெறுகிற இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எங்களுடைய அழைப்பை ஏற்று அதுவும் குறுகிய காலத்தில் அழைப்பு விடுத்தவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டு வருகை தந்து, இந்த நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிற நம்முடைய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்பிற்கினிய சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வருக, வருக என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பத்திரிகையாளர் நல வாரியத்தில், நம்முடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, முதன் முதலாக இன்றைக்கு இந்த நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்குகிற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அட்டை பெற வருகை தந்திருப்பவர்களையும், அதேபோல இந்த அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ தமிழரசு இதழில் 20,000 உறுப்பினர்களை இந்த இரண்டாண்டு காலத்திலே சேர்க்கப்பட்டு, இன்றைக்கு ஒரு இலட்சத்து ஒன்றாவது உறுப்பினருக்கு முதல் இதழை வழங்குகிற நிகழ்ச்சியாகவும், அதேபோல, அச்சகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் பயனற்றுப் போயிருந்த நேரத்தில், நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு இன்றைக்கு
ஏறத்தாழ 35 கோடி ரூபாய் அளவிற்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல, அச்சுத் துறையில் பணிபுரியக்கூடிய, பணியில் இருக்கும்பொழுது உயிரிழந்த அந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சியாகவும், இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுவும் குறுகிய காலத்திலே, நேற்றைக்கு காலையில் முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கிற அரசுச் செயலாளர், செய்தித்துறை இயக்குநர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட அத்துணை அரசு அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் துறையின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இந்த அழைப்பை ஏற்று வருகைதந்த நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களையும் மீண்டும் மீண்டும் வருக, வருக என வரவேற்று வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்’’ என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மரு.இரா.செல்வராஜ் வரவேற்று பேசினார்., எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் மு.அருணா நன்றி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜான் எபினேசர், துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், , பத்திரிகையாளர் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினர்கள் எஸ்.கவாஸ்கர், லெட்சுமி சுப்பிரமணியன், நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.




