தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பிடித்த பின்னர், செய்து காட்டும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்தான் சேலம் மாநகராட்சி 34 -வது கோட்டம் உறுப்பினராக இருப்பவர் ஈசன் இளங்கோ. அவர் தனது முகநூல் பக்கத்தில் ஜுலை 9-ம் தேதி ஓர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது கோட்டத்தில் நடைபெற்றுள்ள பணிகள், நடந்து கொண்டிருக்கும் பணிகள் குறித்த பட்டியலை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இது, மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார். அவரது ரிப்போர்ட்டை அப்படியே தந்துள்ளோம்.
’’அய்யா வணக்கம், நான் உங்களால் மாமன்ற உறுப்பினர் ஆன பின்பு இந்த 15- மாத காலத்தில் நமது கார்பெட் தெருவில் சிதிலமடைந்து இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகங்கள் தனித்தனியே புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதியதாக ஆண்கள் சுகாதார வளாகம் கட்ட ரூபாய் 34- லட்சம் மதிப்பீட்டில் கட்டட திட்ட மதிப்பீடு தயார் செய்து அதை கட்ட மாநகராட்சி பொது நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சரியான ஒப்பந்ததாரர் மூலம் விரைவில் இப்பணி துவக்கப்படும்.
புத்துமாரியம்மன் கோயில் குடிநீர் மேல் நிலைநீர்தேக்க தொட்டியில் இருந்து கார்பெட் தெரு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் வரக்கூடிய தண்ணீர் மிகப் பழைய பகிர்மான குழாய் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் தண்டவாளம் அடியில் அதிக ரயில்கள் செல்லும் அதிர்வினால் சேதமடைந்து இருந்ததை கண்டுபிடித்து 15-நாட்கள் இரவு பகலாக மாநகராட்சி பொறியியல் பிரிவினர் மிகவும் சிரமப்பட்டு புதியதாக மாற்றி சாக்கடை நீர் கலப்பதை நிரந்தரமாக தவிர்த்தும் தண்ணீர் வீணாகாமல் கூடுதல் விசையுடன் வீடுகளுக்கு வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கார்பெட் தெரு மயானத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர்திரு. இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ. அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போர்வெல் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு சிண்டெக்ஸ் தொட்டி வைத்து அங்கு வருவோருக்கு தண்ணீர் வசதியும், உட்கார்ந்து சடங்குகள் செய்யக்கூடிய கூடமும் அமைக்கப்பட உள்ளது..
கார்பெட் தெரு 1,2,தெருக்களில், புதிய சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது, விரைவில் சரியான முறையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும். நான்கு முறை மருத்துவ முகாம்கள் நடத்தியும், கொசு மருந்துகளை அடிக்கடி அடுத்தும் வருகின்றோம்.
நமது பகுதி மக்கள் கட்டணமின்றி மருத்துவம் பார்க்க ஜோதி டாக்கீஸ் சாலையில், காலை 8-00 முதல் 12-00 மணி வரையிலும் மாலை 4.00 முதல் 8-00 மணி வரையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு துணை பணியாளர் ஆகியோருடன் செயல்படும் ஒரு நகர்புற நலவாழ்வு மையம் ஒன்று நமது மக்களின் நலனுக்காக துவங்கப்பட்டுள்ளது.

எலிகளின் மண் பறிப்பு தொல்லை மற்றும் ஆக்கிரமிப்பு அடைப்புகளால் ஏற்படும் சாக்கடை அடைப்புகளை எடுத்து சுகாதார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அழைக்கும் போது முடிந்தவரை நான் நேரில் வந்து அதை தீர்க முயன்று இருக்கின்றேன்.
இது போல் என்னால் இயன்ற அளவு என் பொறுப்பை நான் சரியாக செய்து வருகின்றேன். என்னுடைய பொறுப்பு காலத்திற்குள் உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சியம் 100% சதவீதம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு அனைத்து பணிகளையும் செய்ய வைக்க முடியும் என நான் நம்புகின்றேன்.
நன்றி !!’’
– ஈசன் இளங்கோ
09-07-2023

