நாடாளுமன்றத் தேர்தலை 2024-லில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்புகளுக்காக எதிர்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பாட்னாவில் கூட்டியிருக்கிறார். அதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் தலைநகர் பாட்னா சென்றுள்ளார். அவர், அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவரது சமுக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
பாட்னா வந்தடைந்தேன். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி மற்றும் பீகார் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இதமான வரவேற்பைப் பெற்றேன். ஆசிய சோதி புத்தர், மக்கள் நாயகர் கர்ப்பூரி தாக்கூர், B.P. மண்டல் ஆகியோரை நமக்களித்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த பாசிச – எதேச்சாதிகார ஒன்றிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மீண்டும் மலர, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் இத்தகைய சமூகநீதி மண்ணில் இருந்து எழத் தொடங்குவதில் எந்த வியப்பும் இல்லை.

மூத்த தலைவர் லாலு பிரசாத்-வை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது லாலு பிரசாத் கொண்டிருந்த அன்பை நாம் அனைவரும் நன்கறிவோம். அதே அன்புடன் என்னையும் வரவேற்று, சமூகநீதிச் சுடரை உயர்த்திப் பிடிக்க வாழ்த்தினார். நீண்ட காலம் நலமுடன் திகழ்ந்து எங்களை வழிநடத்திட வேண்டும் என்று நானும் அவரிடம் கோரினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைய கூட்டத்துக்குத் தயாராகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

