spot_img
More
    முகப்புசெய்திகள்’’நெல்லை, தென்காசி மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதனை..!’’

    ’’நெல்லை, தென்காசி மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதனை..!’’

    நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நெல்லை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சுபாஷ் கார்த்திக், தமிழ்நாடு அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டிலேயே ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுப்புராஜ், குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வருமான வரித்துறையில் சேர வாய்ப்பு கிடைத்து உள்ளது. இவருமே தங்களின் கடின உழைப்பின் மூலம் சிகரத்தை அடைந்துள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் சுபாஷ் கார்த்திக் (23). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் முதுகலை நானோ தொழில்நுட்ப படிப்பு படித்து வருகிறார். அதோடு யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாராகி வந்தார்.

    இந்நிலையில், யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானதில், தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் சுபாஷ் கார்த்திக் 118-வது இடம் பிடித்துள்ளார்.

    மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ள சுபாஷ் கார்த்திக் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வந்தேன். பயிற்சி மையம் கொடுத்த ஊக்கத்தாலும், பாடங்களை சரியான முறையில் திட்டமிட்டு படித்ததாலும் என்னால் வெற்றி பெற முடிந்தது. இந்தமுறை மொத்தம் 180 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. எனவே, என்னுடைய முதல் தேர்வாக ஐஏஎஸ் இருக்கும்” என்று கூறினார்.

    ஐஎஃப்எஸ் அதிகாரி தேர்ச்சி: தென்காசி மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த குருசாமி- முனியம்மாள் தம்பதியரின் மகன் சுப்புராஜ் (27). இவர், கடந்த ஆண்டு ஐஎஃப்எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பயிற்சியில் உள்ளார். இவர், யுபிஎஸ்சி தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் 621-வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து, தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

    இதுகுறித்து சுப்புராஜ் கூறும்போது, “நான் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறேன். எனது 6-வது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். அகில இந்திய அளவில் 621-வது இடம் கிடைத்துள்ளது.

    ஐஏஎஸ் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐபிஎஸ் பணிக்கும் சிறிதளவே வாய்ப்பு உள்ளது. ஐஆர்எஸ் பணி கிடைக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போது உள்ள பணியை தொடர்ந்துகொண்டு மீண்டும் முயற்சிப்பதா அல்லது புதிய பணியை தேர்வு செய்வதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”
    என்றார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து:

    திருநெல்வேலி மாவட்டம். அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி. கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர் அன்புச்சகோதரர் சங்கரன் அவர்களின் அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக், தனது முதல் முயற்சியிலேயே இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் இந்திய ஒன்றிய அளவில் 118-வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.

    ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் சங்ககால தமிழ்ப்பெண்பாற் புலவர் பொன்முடியாரின் புறநானூற்று பாடல் வரிகளுக்கேற்ப, சிறந்த தந்தையாகவும் ஆசிரியராகவும் இருந்து மகனைக் கல்வியில் சான்றோனாக்கி, வெற்றிகண்டதில் அகம் மகிழ்ந்து இருக்கும் அன்புச்சகோதரர் சங்கரன் அவர்களுக்கும் அவரது இணையர் அம்மையார் லதா அவர்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.

    நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான பணியில் சிறந்து விளங்கி, மேலும் பல உயரங்களைத் தொட்டு, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வேண்டுமெனும் பேராவலைத் தெரிவித்து, அன்பு மகன் சுபாஷ் -க்கு எமது புரட்சி வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments