மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று (26.4.2023) விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கள ஆய்வில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம், திண்டிவனம் வெண்மணியாத்தூர் சிட்கோ தொழில்முனைவோர் சங்கம், கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஈஐடி பாரி கரும்பு விவசாயிகள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள், மீனவப் பிரதிநிதிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அரிசி ஆலை அதிபர்கள் சங்கங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கம், பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த கலந்துரையாடலில் நந்தன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் அன்னியூர் சிவா பேசுகையில், ‘’தென்மேற்கு பருவ மழையில் சாத்தனூர் அணை நிரம்புகிறது. இந்த சாத்தனூர் அணையின் உபரி நீரை ஊட்டுக் கால்வாய் மூலம் 16 கிலோ மீட்டர் அமைத்து நந்தன் கால்வாயுடன் இணைத்தால் வடமேற்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்கும் 36 ஏரிகள், 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும், வாதானூர் வாய்க்காலில் உள்ள ஏரிகள், 1,750 ஏக்கர் விவசாய நிலமும், பனைமலை ஏரி யின் இடது புறம் 32 கிலோ மீட்டரில் கல்லேரி ஏரிக்கு நீர் வெளியேற்றும் கருவி வழியாக தண்ணீரை திருப்பினால் 10 ஏரிகள் மூலம் 1,500 ஏக்கர் விவசாய நிலம் என்று மொத்தம் 10,750 ஏக்கர் விவசாய நிலங்கள் செழிக்கும்.
இந்த திட்டத்தால் திருவண்ணாமலை, விக்கிரவாண்டி, கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி, விழுப்புரம், மயிலம் ஆகிய 6 தொகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கோரிக்கை. விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது வாக்கு சேகரித்த நம்முடைய அப்போதைய எதிர்கட்சி தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான தளபதி அவர்கள், ’கழக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று அறிவித்தார். உடனே, அப்போதைய முதல்வர் எடப்பாடி, ஏதோ ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.
எனவே, நாடே போற்றும் திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய தளபதி, இந்த திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இந்த பகுதி விவசாய பெருங்குடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடைந்து போன 72 ஆண்டுகள் பழமையான விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணையை புதியதாக கட்டித்தர ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ள, முதலமைச்சர் தளபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு தனி வேளாண் பட்ஜெட் தந்த தங்களின் பொற்கால ஆட்சியில் நந்தன் கால்வாய் திட்டத்தையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நந்தன் கால்வாய் பாசன விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கோரிக்கை வைத்தார்.
நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கேட்கும் நந்தன் கால்வாய் திட்டம் இப்போதாவது நிறைவேறுமா..!

