spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’தோழர் கே.கே.காலமானார்’’ பாரதி கிருஷ்ணகுமார் கண்ணீர்

    ’’தோழர் கே.கே.காலமானார்’’ பாரதி கிருஷ்ணகுமார் கண்ணீர்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் கே.கே என அழைக்கப்பட்ட தோழர் கே.கந்தசாமி. ‘’இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய கணத்தில் நேரில் வர இயலாத எனது கையறு நிலை எண்ணி மனம் மேலும் ஆழமாகத் துயர் கொள்கிறது கே கே. உளப்பூர்வமான ஆழ்ந்த அஞ்சலி. உங்களை அறிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல். சென்று வாருங்கள் தலைவா..!’’ என்று இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயலாற்றினார். இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த, கல் உடைக்கும் தொழிலாளியான இவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, மார்க்சிய தத்துவத்தை படிப்படியாக கற்று, அதன்படி உறுதியாக பற்றி நின்று, 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக பாட்டாளி மக்களின் நலன் களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மதுரை மாவட் டம் முழுவதும் எளிய மக்களின் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களான பி.ராமமூர்த்தி, கே.பி.ஜானகியம்மாள், என்.வரதராஜன் உள்ளிட்ட தலைவர்களோடு கட்சிப் பணியாற்றியவர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஏராளமாக கொண்டு வந்த களப் பணியில் கம்பீரமாக திகழ்ந்தவர்.

    பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் தோழர் கே.கந்தசாமி செயல்பட்டு வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தமது மகள் பொன்னி – மருமகன் அசோக் பராமரிப்பில் இருந்து வந்த தோழர் கந்தசாமி ஞாயிறன்று இரவு காலமானார். சென்னையில் அவரது உடலுக்கு சிபிஎம், சிபிஐ தலைவர்கள், ஏராளமான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது உடல் திங்களன்று மாலை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி, மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்திரன் (மதுரை புறநகர்), மா.கணேசன் (மதுரை மாநகர்), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), ஏ.வி.அண்ணாமலை (தேனி), மதுரை மாமன்ற துணைமேயர் டி.நாகராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.பாலா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று பிற்பகல் இறுதி நிகழ்ச்சி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ’’தோழர் கே.கே.காலமானார்’’ என்று தலைப்பிட்டு பாரதி கிருஷ்ணகுமார், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள இரங்கல் அறிக்கை:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பரங்குன்றம் கிளையை உருவாக்க எனக்குத் துணையாக வழிகாட்டியாக இருந்தவர்.

    அவர் எனக்குத் தந்த எல்லையற்ற சுதந்திரத்திற்கும் நம்பிக்கைக்கும் அவரது வாழ்வின் இறுதிவரை நான் உண்மையாக இருந்தேன்.

    திருப்பரங்குன்றத்தின் மீது பரவிச் செல்லும் உங்கள் கம்பீரமான குரலை, கபடமற்ற கணீர்ச் சிரிப்பை, பார்த்த கணத்தில் உங்கள் கண்கள் புலப்படுத்தும் கொண்டாட்டத்தை, தோழமையை, என்னுடனான உங்கள் அந்தரங்கமான உரையாடல்களைக் காலத்தால் ஒருபோதும் கவர்ந்து செல்ல முடியாது என் வாழ்வின் இறுதிவரை.

    இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய கணத்தில் நேரில் வர இயலாத எனது கையறு நிலை எண்ணி மனம் மேலும் ஆழமாகத் துயர் கொள்கிறது கே கே.

    உளப்பூர்வமான ஆழ்ந்த அஞ்சலி.

    உங்களை அறிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல் .

    சென்று வாருங்கள் தலைவா..!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments