கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பதிவில், ‘’கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்” என்று கூறியுள்ளார்.




