இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட், ஒருநாள், டி20 கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார். ஆனால், இவர் 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு எந்தவொரு சர்வதேச டி20 ஆட்டத்திலும் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பையில் கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். இவரும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு எந்தவொரு சர்வதேச டி20 ஆட்டத்திலும் விளையாடவில்லை.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ளதால், இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு, இந்தியா விளையாடிய 8 டி20 ஆட்டங்களுக்கும் ஹார்திக் பாண்டியா தலைமையேற்க, அந்த ஆட்டங்களில் ரோஹித் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற, 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஓர் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதுபற்றி ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோவிடம் ரவி சாஸ்திரி பேசியதாவது:
உலகக் கோப்பையில் விளையாட எல்லோரும் தகுதி பெறலாம். ஆனால், ஹார்திக் பாண்டியா அணியை வழிநடத்த வேண்டும். அடுத்த இரண்டு உலகக் கோப்பைகள் (2023 உலகக் கோப்பைக்குப் பிறகு) டி20 கிரிக்கெட். பாண்டியா ஏற்கெனவே இந்தியாவின் கேப்டனாக இருக்கிறார். முழு உடற்தகுதியுடன் இருக்கும் வரை இவரே அணியை வழிநடத்தட்டும்.
தேர்வுக் குழுவும் புதிய பாதையில் சிந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். தற்போதைய நிலையில், இளைஞர்களிடத்தில் ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள். புதிய அணியாக இருக்கலாம், புதிய அணியாக இல்லாவிட்டாலும் சில புதிய முகங்கள் இருக்கலாம்.
2007 டி20 உலகக் கோப்பை அணுகுமுறையைத் தேர்வுக் குழு பின்பற்றுவார்கள். புதிய திறமைகளைக் கண்டறிவார்கள். அணித் தேர்வு என்று வரும்பொழுது பாண்டியாவிடமும் நிறைய பரிந்துரைகள் இருக்கலாம். இவருடைய சிந்தனைகள் மாறுபட்டு இருக்கும். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடியுள்ளார். நிறைய வீரர்களைப் பார்த்திருப்பார். எனவே, இவருடைய கருத்துகளும் இடம்பெறும் என்றார்.
எதிர்காலம் பற்றி மூத்த வீரர்களுடன் ஹார்திக் பாண்டியா பேச வேண்டுமா என்கிற கேள்விக்கு, நிச்சயமாக. இவர்தான் அணியை வழிநடத்தப்போகிறார். எனவே, இவரது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஹார்திக் பாண்டியாவின் பணிச் சுமை பற்றி ரவி சாஸ்திரி கூறியதாவது: இவர் மூன்று வகை கிரிக்கெட்டும் விளையாடக் கூடியவர் அல்ல. அனைத்தும் தற்போது தனித்தனியாக நடக்கின்றன. டெஸ்ட் தொடர் தொடங்கியவுடன், ஓய்வெடுத்து மீண்டு வர ஹார்திக்குக்கு ஒருமாத காலம் இடைவெளி இருக்கும். தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். இவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், அது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது, உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவர்தான் பாண்டியா என்றார் ரவி சாஸ்திரி.
கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டின் அணுகுமுறை மீண்டும் விமர்சனத்துக்குள்ளானது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 168 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து இந்த இலக்கை 4 ஓவர்கள் மீதமிருக்க அடைந்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்பிறகு இந்தியா நிறைய புதிய முகங்களைக் கண்டறிந்து டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தியது.
2007-ல் இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் அறிமுக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகினார்கள். எம்.எஸ். தோனி தலைமையிலான இளைஞர் படையே டி20 உலகக் கோப்பையில் களமிறங்கியது. கோப்பையை வென்றது.

