spot_img
More
    முகப்புஅறிந்துகொள்வோம்’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வீட்டிற்கே வந்து வாதாடினார். மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துரை வருமாறு:

    நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழா கொண்டாடுவதையும், அதற்காக மிகச் சிறப்பான நினைவுத்தொகுப்பு வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

    இந்த நிகழ்ச்சிக்காக அவரது குடும்பத்தின் சார்பில் என்னிடம் அழைப்பிதழ் தந்தார்கள். ராமமூர்த்தி எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை தாண்டி எங்கள் குடும்ப நண்பர் என்று தான் முதலில் சொல்ல வேண்டும்.

    மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்டகால நட்பு உண்டு. தலைவர் கலைஞர் அவர்களும், மருத்துவர் ராமமூர்த்தி அவர்களும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டால், இளமைக் கால நண்பர்கள் பேசிக் கொள்வதைப் போல இருக்கும்.

    தலைவர் கலைஞரின் இலக்கிய ஆளுமை, எழுத்துநடை, ஆட்சி நிர்வாகத் திறன் மீது டாக்டர் ராமமூர்த்தி பெருமதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் மீது மட்டுமல்ல, என் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர் தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டவர் டாக்டர் ராமமூர்த்தி.

    மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வீட்டிற்கே வந்து வாதாடினார். எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார்.

    மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார்.

    மிகப் புகழ்வாய்ந்த, நாட்டுப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த ராமமூர்த்தி, தனக்கெனத் தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்ததோடு, அதில் தனிச்சிறப்பான இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். உயிர்காக்கும் துறையான மருத்துவத்துறையில், நரம்பியல் துறை வல்லுநராக – இந்தியாவின் முகமாகவே உலகம் முழுதும் அறியப்பட்ட சிறப்புக்குரியவர் டாக்டர் ராமமூர்த்தி. இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை இயலின் தந்தை என்றே போற்றப்பட்டவர்.

    டாக்டர் ராமமூர்த்தி உலகம் முழுதும் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். உலகெங்கிலும் இருந்து வல்லுநர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். நரம்பியல் துறையிலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவிலும் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

    புதிய பிரிவுகளை நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார்.

    மருத்துவத்துறை முன்னோடியாகவும், மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த டாக்டர் ராமமூர்த்தி நூற்றாண்டில் அவரது வாழ்வும் பணியும் சிறப்பான முறையில் நினைவுகூரப்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்.
    நன்றி, வணக்கம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments