spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்..!’’ பாட்னா புறப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்..!’’ பாட்னா புறப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர்த் திருத்தலத்தில் கலைஞர் 100 நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் நாள் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்'' என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள கடிதம்: 

    ஆரூரின் ஆழித்தேர் வடிவில் திருவாரூர் காட்டூரில் எழிலார்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்தபோது, என் நெஞ்சில் எத்தனையோ எண்ண அலைகள்!

    விழாப் பந்தல் நிரம்பி வழியும் அளவுக்குத் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் நெஞ்சங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரைப் பற்றிய எண்ணங்களே மிகுந்திருந்ததை அறிவேன்.

    கலைஞர் கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர்.
    கோட்டத்தில் தலைவர் கலைஞரின் தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் திறந்து வைத்தார். அது நூலகமாக மட்டுமில்லாமல், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கைக்கான ஆவணக் காப்பகமாகவும் திகழும்.

    Augmented Reality என்ற புதிய தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்டில், இரண்டு நாற்காலிகள் காலியாக இருக்கும்.

    ஒரு நாற்காலியில் நாம் உட்கார்ந்து, பக்கத்தில் உள்ள நாற்காலியைப் பார்த்து வணங்கலாம், புன்னகைக்கலாம். அந்த நொடியில் எடுக்கப்படும் ஃபோட்டோ, சில நொடிகளில் பிரிண்ட் போடப்பட்டு நம் கைக்கு வரும்போது, நமக்கு பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருப்பார்.

    பள்ளி – கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.

    கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும். கோட்டத்தைக் காணும்போது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும்.

    அந்த உத்வேகத்தைக் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் நான்கு இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு வலிமை சேர்த்தோம்.

    கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

    ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன்.

    இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை – ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது.

    கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments