சி.பி.எஸ்.இ தேர்வு வாரியத்தின் 10- வகுப்பு ரிசல்ட் கடந்த 12- ம் தேதி வெளியானது. இதில், சென்னை நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவி சஞ்சனா பட் 500/500 மார்க் எடுத்து அசத்தி உள்ளார். ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று அனைத்து படங்களிலும் 100 க்கு 100 என்று சென்டம் வாங்கி அசத்தி விட்டார்.
இதுகுறித்து சஞ்சனா பட், குடும்பத்தினர், “சிறுவயதில் இருந்தே ஒவ்வொரு வகுப்பிலும் சஞ்சனா டாப்பர்தான். 10- ம் வகுப்பு பொதுத்தேர்விலும் நல்லா எழுதி இருப்பதாக சொன்னாள். 495 மார்க் வரும் என்று எதிர்பார்த்தோம். இதுவரை எழுதிய தேர்வுகளில் இந்தத் தேர்வை மிகவும் நன்றாக எழுதி இருப்பதாக சொன்னாள். ஆனாலும், அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுப்பாள் என்று நினைக்கவில்லை. வீட்டில் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டாள்.
எங்கள் குடும்பமே டாக்டர் குடும்பம். ஆனால், சஞ்சனாவுக்கு டாக்டருக்கு படிக்க விருப்பம் இல்லை. ஐஐடி-யில் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். நாங்களும் ஓகே சொல்லிவிட்டோம். அதற்காக, அந்த பயிற்சிக்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நாட்டிலேயே புகழ்பெற்ற பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பமாட்டோம்.
சஞ்சனா கனவை நிறைவேற்ற குடும்பம் துணையாக இருக்கும்.500/ 500 மார்க் எடுத்துள்ளதால் வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன. சஞ்சனா, அடுத்து படிக்க வேண்டியது குறித்து திட்டமிட தொடங்கி விட்டாள். நாங்களும் மகிழ்சியாக இருக்கிறோம்” என்றனர்.
12-ம் வகுப்பில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தார். அதுபோல சென்னை மாணவி சஞ்சனா பட், சிபிஎஸ்இ தேர்வு வாரியத்தில் 10-ம் வகுப்பில் சாதனை படைத்துள்ளார். 500/500 மார்க் எடுத்த சாதனை மாணவி சஞ்சனா பட்- க்கு மெட்ராஸ் முரசு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

