இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றிவந்த ரபீந்தர் சிங் என்பவர், ராணுவத்திலிருந்து அயல் பணியாக R&AW-வுக்கு வந்தார். பிறகு ராணுவத்தை விட்டுவிட்டு R&AW-ல் முழுமையாக இணைந்தார்.
1990 ஆண்டுகளில் சிஐஏ விரித்த ஒரு ஹனி – ட்ராப்பில் சிக்கிக்கொண்டார் மனிதர். இதற்குப் பிறகு அலுவலகத்தில் தனக்குச் சம்பந்தமில்லாத ஆவணங்களை நகல் எடுப்பதை R&AW அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால், அவரைக் கண்காணிக்க முடிவு செய்தது R&AW.
ரபீந்தர் சிங்கின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. தீவிர கண்காணிப்பின் கொண்டுவரப்பட்டார் மனிதர். ஆனாலும் 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் நேபாளம் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
2007 ஆம் ஆண்டு வாக்கில் அவர் நியு ஜெர்சியில் இருப்பதைக் கண்டுபிடித்தது R&AW. சுரேந்தர்ஜீத் சிங் என்ற பெயரில் அவர் அளித்த தஞ்சக் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு கட்டத்தில் சிஐஏ பணம் தருவதை நிறுத்திவிட்டது. ஒரு திங் டாங்கில் வேலைபெற முயற்சித்தார் ரபீந்தர் சிங். அதையும் சிஐஏ தடுத்து நிறுத்தியது. தஞ்சக் கோரிக்கையாளராகவே வாழ்ந்துவந்த அவர் 2016 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

இந்தியாவின் கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற அமர் பூஷன் இந்த சம்பவத்தைப் பின்னணியாக வைத்து Escape to Nowhere என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Khufia.
ஆனால், வெறும் ரபீந்தர் சிங்கின் கதையை மட்டும் வைத்து எடுக்காமல் வேறு சில சுவாரஸ்யங்களையும் சேர்த்திருக்கிறார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த மீர்ஸா என்பவரைக் கொல்ல R&AW முயல்கிறது. ஆனால், அந்த முயற்சியில் ஈடுபடும் பெண் அதிகாரி அதற்கு முன்பே கொல்லப்படுகிறார்.
நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் எப்படி வெளியானது, அதன் பின்னணியில் என்ன என்ற கேள்வியில், ரபீந்தர் சிங்கின் கதையை இணைத்திருக்கிறார்கள். இதற்கு நடுவில் தாய்ப் பாசம், காதல் என சென்டிமென்ட் அம்சங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. புவிசார் அரசியலில் R&AW -வும் ஒரு பகடைக்காயாக உருட்டப்படுவதையும் படத்தில் ஆங்காங்கே தொட்டுக் காட்டுகிறார்கள்.

இந்தியில் வெளியாகும் உளவு த்ரில்லர்களில் நடிப்பதற்கென்றே ஆஷிஷ் வித்யார்த்தியில் ஆரம்பித்து பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் வாமிகா கபி புதிய நுழைவு. ஆனால், அவருக்கென வலிந்து நுழைக்கப்பட்டிருக்கும் கவர்ச்சிக் காட்சிகள் படத்தோடு ஒட்டவேயில்லை.
2023 ஆம் ஆண்டு விஷால் பரத்வாஜின் மூன்றாவது படைப்பு இது. மனிதர் 24 மணி நேரமும் வேலை பார்ப்பார் போலிருக்கிறது. சிறப்பான மேக்கிங். கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம்.
Netflix தளத்தில் தமிழிலும் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

