பல வருடங்களுக்குப் பிறகு பன்னம்பாறையில் ஒரு பிரம்மாண்டமான அரசு நிகழ்ச்சி!! ஊர் மக்கள் மகிழ்ச்சி!!!
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசின் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை நேரடியாக மனுவாக பெறும் “மக்கள் களம்” நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்கள்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இந்த நிகழ்ச்சி 09.11.2023 அன்று இரவு பன்னம்பாறை கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி முன்னிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்பட மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்கள்.

நிறைவேற்றி தருவதாக என்று சொன்னார்கள்
அதிகமான கால்நடை வளர்ப்பு தொழிலை நம்பி உள்ள பன்னம்பாறை கிராமத்தில் ஆடு, மாடு, நாய், கோழிகளுக்கு மருத்துவம் பார்க்க கால்நடை கிளை மருந்தகம் இல்லை. இதற்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கால்நடை கிளை மருந்தகம் அமைக்க முடியாமல் போனது. இன்றைய நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் அனைவரின் முன்னிலையிலும் இந்த கோரிக்கையை வைத்தார். கனிமொழி எம்பியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக என்று சொன்னார்கள்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் உறுதி
இது தவிர மக்கள் அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
18 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வடக்கு பன்னம்பாறைக்கு புதிய சாலை வேண்டி பல கட்டமாக முயற்சி எடுத்த பிறகு, தற்போது புதிய சாலை அமைக்க ஆர்டர் ஆகி விட்டது. ஆனால், சாலை அமைக்கும் பணிக்காக மறு மதிப்பீடு செய்யப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு சென்றிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிய வந்தது. இந்த நிகழ்ச்சியில் நான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தேன். கனிவுடன் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், தன்னுடைய உதவியாளரிடமும், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த கூறினார்கள்.

மக்களோடு மக்களாக கனிமொழி எம்பி.,
விழாவில் வயதான பாட்டி ஒருவர், விழா மேடைக்கு நேரில் செல்ல முயன்ற போது மேடையில் இருந்த கனிமொழி எம்.பி., அந்த பாட்டியின் அருகே ஓடோடோடிச் சென்றார். அவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்டதுடன், மக்களைத் தேடி மருத்துவத்தின் மருந்துப் பெட்டகத்தைக் கொடுத்தார். ‘’உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்தார். அந்த பாட்டி, கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தார். கனிமொழி எம்.பி.,-யின் இந்த ’மக்கள் களம்’ திட்டம் பன்னம்பாறை மக்களிடையே நல்வரவேற்பை பெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனு கொடுத்தனர். எவ்வளவு நேரம் ஆனாலும் கடைசியில் உள்ள மனுதாரரிடம் பொறுமையாக மனுக்களை பெற்றுக் கொண்டார் கனிமொழி எம்பி.,
தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.பி, அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பொதுமக்களிடம் நான் மதிப்பை பெற்றிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி-யிடம் நேரில் மனு கொடுத்ததால் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி கவனம் செலுத்தி பிரச்னைகளை அவர் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
விடியல் பிறக்கட்டும்..!
– கோமதிநாயகம் விசு

