தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி-யின் துறையோடு சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரி சோதனை இன்று நடைபெற்றது. செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் வருமான வரித்துறையின் ரெய்டு நடந்தது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
’’எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. சோதனைகளை எதிர்கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும். வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
இருக்கின்ற சொத்துக்களே போதுமானது, புதிய சொத்துக்கள் தேவையில்லை. சோதனைக்கு பிறகு தவறை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்து கொள்ளவும் தயார்’’.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

