spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்''அவள் கொள்ளுப் பெயர்த்தி அல்ல... தாய்..!'' டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி

    ”அவள் கொள்ளுப் பெயர்த்தி அல்ல… தாய்..!” டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி

    ‘’அவள் கொள்ளுப் பெயர்த்தி அல்ல… தாய்..!’’ என்று குறிப்பிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள சமூக வலைத்தளப் பதிவு: 

    எனது கொள்ளுப்பெயர்த்தி மிளிர். என் மீது அன்பைப் பொழிவாள் அந்த நான்கரை வயதுக் குழந்தை. ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு உறக்கம் வருகிறது என்று கூறிவிட்டேன்.

    அவ்வளவு தான்…

    என்னை எனது இருக்கையிலிருந்து எழுப்பிய அந்தக் குழந்தை, எனது கைகளைப் பிடித்து எனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றது. அறையில் என்னைக் கட்டாயப்படுத்தி அமர வைத்த மிளிர், எனது காலில் இருந்த இரு செருப்புகளையும் கழற்றி அருகில் இருந்த சாளரம் ஓரத்தில் சாய்த்தி வைத்தாள்.

    தொடர்ந்து என்னை படுக்கையில் சாய்த்த மிளிர், என் மீது போர்வையை போர்த்தி உறங்க வைத்தாள். அத்துடன் நிறுத்தி விட்டு அந்தக் குழந்தை அங்கிருந்து வெளியேறவில்லை. எனக்கு அருகிலேயே நின்று கொண்டு என்னைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.

    அவள் தட்டிக் கொடுத்ததில் எனக்கு உறக்கம் வரவில்லை… மாறாக உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

    சரியாக நான்கறை ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மிளிருக்கு பெயர் சூட்டும் விழா.
    நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த அந்த விழாவில் மிளிருக்கு நான் தான் பெயர் சூட்டினேன்.

    அந்த விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின்,

    ’’சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
    காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
    வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
    பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
    நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
    தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
    வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
    கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
    அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
    சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!’’

    என்ற தாலாட்டுப் பாடலை நான் முழுமையாகப் பாடி பெயர் சூட்டினேன்.

    அதன் பின்னர் நான்கரை ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை எனக்கு தாலாட்டுப் பாடி உறங்க வைக்க முயல்கிறது. என்ன ஒரு கொடுப்பினை இது.

    எனது வாழ்வில் கடினமான சூழல் ஏற்படும் போதெல்லாம் இந்த நிகழ்வை நினைத்துக் கொள்வேன். மனம் மகிழ்ச்சியாகவும், இலகுவாகவும் மாறி விடும்.

    பல நேரங்களில் மிளிரிடம் எனது தாய் யார்? என்று கேட்பேன். ஒவ்வொருமுறை கேட்கும் போதும் ’’நான் தான் உங்களுக்குத் தாய் தாத்தா” என்று அவள் கூறுவாள்.

    மிளிரின் செய்கைகள் எனக்கு எனது தாயின் பாசத்தை நினைவூட்டின. அதனால் தான் அவள் எனக்கு கொள்ளுப் பெயர்த்தி அல்ல… தாய்!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments