தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டருக்கான (ஓட்டுநர், நடத்துனர்) 812 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி அரசாணை வெளியிட்டுள்ளார்.
காலிப்பணியிடங்களின் விவரம்:
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 291 பணியிடங்களில் 174 பணியிடங்களையும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 423 பணியிடங்களில் 254 பணியிடங்களையும், கோவையில் உள்ள 100 பணியிடங்களில் 60 பணியிடங்களையும், மதுரையில் உள்ள 272 பணியிடங்களில் 136 பணியிடங்களையும், திருநெல்வேலியில் உள்ள 376 பணியிடங்களில் 188 பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிக்கான தகுதிகள்:
இந்த பணிக்கான தகுதிகள் 10 – ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தமிழில் எழுதப் படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் 18 மாதம் கனரக ஓட்டுனர் அனுபவமும் ஓட்டுனர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக தமிழ்நாட்டிற்குள் வாகனங்கள் ஓட்டுவதற்கான பேட்ஜ் உரிமம், தமிழக அரசால் வழங்கப்படும் முதல் உதவி கல்விக்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 சென்டி மீட்டர், எடை குறைந்தபட்சம் 50 கிலோ மற்றும் தெளிவான கண்பார்வையும் அரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.
இந்த காலிப்பணியிடங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 17,700 முதல் அதிகபட்ச ஊதியமாக ரூபாய் 56,200 வரை வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
’’வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே, அந்தந்த மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தின் நோட்டிஸ் போர்ட்டில், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் பட்டியல் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும் ஓவ்வொருவருக்கும் அவரவர் வீட்டுக்கு அழைப்பு குறிப்பு அனுப்பப்படும். நேர்காணல் முடித்த பின்னர், மருத்துவ சோதனை நடக்கும். அதன் பிறகு தேர்வானோரின் இறுதிப் பட்டியல் வெளியாகும். தேர்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி கொடுக்கப்படும். அதன் பிறகு, ஓட்டுநர், நடத்துனர் ஆக பணிமனை ஒதுக்கீடு ஆணை கொடுக்கப்படும். பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள பணிமணையில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் வேலையில் சேர வேண்டும்’’ என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
– கோ. தீபா புவனேஸ்வரி

