spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியாதமிழ்நாட்டில் பத்ம விருதுகள் பெற்றவர்கள் யார் யார் ? முழு ரிப்போர்ட்

    தமிழ்நாட்டில் பத்ம விருதுகள் பெற்றவர்கள் யார் யார் ? முழு ரிப்போர்ட்

    நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 66 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேருக்கு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

    புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் 25.05.2026 அன்று நடைபெற்ற  விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேரந்த ஏழு பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்பட்டன.

    மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷன்  விருது பெற்றார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரைப்பை குடல் மருத்துவத் துறையை நிறுவினார். ராமகிருஷ்ண மடத்தின் மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னார்வச் சேவை புரிந்து வரும் இவர், தனது சொந்த கிராமமான கல்லிப்பட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளார். மேலும், 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2022-ல் உலக இரைப்பை குடல் அமைப்பின் மிக உயரிய விருதான ‘மாஸ்டர்ஸ் அவார்டும்’ பெற்ற பெருமைக்குரியவர்.

    மருத்துவச் சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறந்து விளங்கிய 99 வயது மூத்த மருத்துவர் டாக்டர் எச் வி ஹண்டே பத்மஸ்ரீ  விருது பெற்றார். தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான (1980–1986) இவர், போலியோ மற்றும் தட்டம்மை நோய்களை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றியதோடு ‘டாக்டர் பி. சி. ராய் விருதையும்’ பெற்றுள்ளார். மேலும், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதுடன் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

    கலைத் துறையில், நீலகிரி மாவட்டத்தின் ஆலு குறும்பர் சமூகத்தின் பாரம்பரிய ‘அஜிலே பொட்டு’ ஓவியக்கலையை இயற்கை நிறங்களைப் பயன்படுத்தி மீட்டெடுத்துப் பிரபலப்படுத்திய ஆர்.கிருஷ்ணன் கிட்னாவுக்கு அவரது மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பழங்குடியின வனம் சார்ந்த மரபுகள் மற்றும் கதை சொல்லும் கலையைப் பாதுகாப்பதில் இவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, 2025-ம் ஆண்டு தனது மறைவு வரை கலைப் பயிற்சி அளிப்பதில் உறுதியாக இருந்தார்.

    மத்திய ரிசர்வ் காவல் படையின் முன்னாள் தலைமை இயக்குநரான கே விஜய்குமார், பொதுச் சேவைக்காக பத்மஸ்ரீ விருதுடன் கௌரவிக்கப்பட்டார். நக்சல் தீவிரவாத ஒழிப்பு, வீரப்பனைப் பிடிப்பதற்கான சிறப்பு அதிரடிப் படைத் தலைமை, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு மேலாண்மை, 26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு உத்திசார் பிரிவை உருவாக்கியது எனப் பல்வேறு பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார்.

    இலக்கியத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பங்களித்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி பத்மஸ்ரீ விருது பெற்றார். 18 இந்திய மொழிகளின் படைப்புகளைத் தொகுத்து, 16 ஆண்டுகள் உழைப்பில் இவர் உருவாக்கிய “நிட் இந்தியா த்ரூ லிட்ரேச்சர்” என்ற நூல் தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஒரு பெரும் சாதனையாகும்.

    “இந்திய சமூக வானொலியின் தந்தை” என்று அழைக்கப்படும் மூத்த வானொலி ஒலிபரப்பாளர் டாக்டர் ஆர் ஸ்ரீதர், பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் இந்தியாவின் முதல் சமூக வானொலி நிலையத்தை வடிவமைத்ததுடன், ஞானவாணி மற்றும் ஞான தர்ஷன் ஆகியவற்றைத் தொடங்குவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

    தமிழ் இசை மற்றும் பக்தி இலக்கியத் துறையில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பண் இசையில் திருமுறை பாடி வரும் புகழ்பெற்ற ஓதுவர் என் சுவாமிநாதன், பத்மஸ்ரீ விருது பெற்றார். பல கோவில்களில் ஓதுவராகப் பணியாற்றிய இவர், 26 ஆண்டுகள் திருத்தணி முருகன் கோவிலில் இசைப் பணியாற்றினார். தேவாரப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், உலகெங்கிலும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார்.

    நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 66 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments