‘‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’’ என்பது சொல் அலங்காரமா? அதே குதிரை, கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த வீண் வேலையை நிறுத்தவேண்டும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை விபரம் வருமாறு:
கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் அதிக இடங்களைப் பெற்ற, புதிய கட்சியான திரு.ஜோசப் விஜய் அவர்களது த.வெ.க.விடம், ‘ஆட்சியினை அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையைக் காட்டுங்கள்’ என்று பிடிவாதமாக நிபந்தனை விதித்தார் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநரான அர்லேகர்.
கூட்டணிமூலம் ஒரு நிர்ப்பந்தத்தால் உருவான ஆட்சி என்பது யதார்த்தம்!
107 இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அக்கட்சி தனித்த பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவினைத் தேடிச் சென்றது. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி, த.வெ.க. அமைத்த கூட்டணிமூலம் ஒரு நிர்ப்பந்தத்தால் உருவானது என்பதுதான் யதார்த்தம்.
அப்படி சில கட்சிகளது ஆதரவினைப் பெறத் தவறினால், மாற்று நிலை – ஆளுநர் ஆட்சி, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் ஏற்படும்; அது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது; ஆகையால், ‘‘எப்படியும் அதனைத் தடுத்தாகவேண்டும்” என்பதால், இடதுசாரிகள் – (சி.பி.அய்., சி.பி.எம் ஆகிய கட்சிகள்) ‘‘நிபந்தனையற்ற’’ ஆதரவினைத் தருவதோடு, ‘‘ஆட்சியில் பங்கு கொள்ளமாட்டோம், வெளியிலிருந்தே ஆதரவு’’ என்று கூறி, தங்களது 4 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைத் தந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முதலில் வெளியிலிருந்து ஆதரவு என்ற (இடதுசாரிகள் போல) தங்கள் எண்ணத்தைச் சொல்லி, தங்களின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு என்று அறிவித்த பிறகு, தங்கள் கட்சியில் நீண்ட விவாதம் நடத்தி, ஆட்சியில் பங்கு பெற்று, ஓர் அமைச்சர் பதவி பெற்றனர். அதுபோலவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் முந்தைய நிலையை, பிறகு மாற்றிக் கொண்டு, ‘‘கட்சி ஆணை’’ என்று கூறி, ஓர் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர். மற்றொரு கட்சியில் (அ.ம.மு.க.) வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சித் தலைமையின் ஒப்புதலின்றி தன்னிச்சையாகத் தனது ஆதரவைத் தெரிவித்தார்!
தி.மு.க. கூட்டணியிலிருந்தபோதே ரகசியக் கூட்டு – பேச்சுவார்த்தை:
மாய்மாலங்களில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியினரும், தங்களது மூத்த, முதிர்ந்த தலைமையின் கருத்துகளைப்பற்றி கவலைப்படாமல், ஆளுங்கட்சியாக வரவிருக்கும் கட்சிக்குத் தாவி விட்டதோடு, அங்கேயே போய் ‘ஆலிங்கனம்’ செய்து, தங்களது ‘‘அபிலாைஷகளை’’ இரண்டு அமைச்சர் பதவிகள்மூலம் தீர்த்துக் கொண்டனர். இந்தக் கூட்டணி வரும் தேர்தல்கள் அனைத்திலும் நீடிக்கும் என்ற ‘விசித்திர’ அறிவிப்பை, அதன் ‘மகாமகா’ ஒருங்கிணைப்பாளர் கூறினார். தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டே, ரகசியத் தொடர்பு ‘ஆரிய மாயை’யால் தொடங்கப்பட்டது.
அவர்கள் போவதுபற்றி கவலையில்லை; ஆனால், நாடாளுமன்றத்தில் சரியான கணக்குத் திறக்காத நிலையில், தங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து 10 எம்.பி.,க்களைத் தந்த தி.மு.க.விற்கு ஒரு சிறு நன்றியேனும் கூறி, ‘‘நண்பர்களாகப் பிரிந்து செல்லும் நனி நாகரிகத்தை’’க்கூட கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இந்தியா கூட்டணியின் எதிர்காலம்பற்றிய சிந்தனையும் – அதனால், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் முக்கிய இலக்கும்கூட – வன்மத்தால் – நினைவுக்கு வரவில்லை என்பதுதான் பரிதாபத்திற்குரியது.
தி.மு.க. என்ற ‘சுமைதாங்கி’க்கு நல்ல ‘விடுதலை’ கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோழர்களுக்கு மகிழ்ச்சியே, மிஞ்சும்!
சட்டமன்றத்தில், அ.தி.மு.க. இரு பிரிவானது!
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. 47 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், அதில் உள்ள ஒரு கோஷ்டி (25 பேர் அடங்கிய ஒரு குழு), அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமை மீது நம்பிக்கை இல்லையென்று குற்றம் சுமத்தினர். எடப்பாடி பழனிசாமி அணியில் 22 பேர் என்று காட்டினர்.
அதிருப்திக் குழுவினரின் வீட்டிற்கு மட்டும் சென்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தார் – எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை. இக்கோஷ்டியினர், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியாகிவிட்ட ஜோசப் விஜய் அவர்களின் கட்சிக்கே வாக்களித்தனர்.
‘‘தாங்கள்தான் அ.தி.மு.க.’’ என்று இரு தரப்பினரும், பேரவைத் தலைவரிடம் மனுக்கள் மேல் மனுக்களாகத் தந்தனர்!
இப்படி ‘கட்சித் தாவி’, வாக்கு அளித்த செயலால், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள்மூலம் தங்கள் பதவிகள் பறிபோகக்கூடும் என்பதால், அரண்டு போய் அணி மாறி, திரும்ப எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கே வந்தனர், வருகின்றனர். வருவதும், போவதும் அங்கே வாடிக்கை நிகழ்வுகள்!
ஊடகங்களில் வெளிவரும் செய்திகள்!
இந்தச் சட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் என்ற அச்சத்தின் இடையே, சிலருக்கு ஒரு விசித்திர வினோத யோசனை கூறப்பட்டதுபோலும். ‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் சேர்ந்துவிடுங்கள்; உங்களையெல்லாம் அமைச்சர்களாகவோ, வாரியத் தலைவர்களாகவோ ஆக்குவோம். இடைத்தேர்தலில் உங்களை நிறுத்தி வெற்றி பெற வைப்போம்’ என்று கூறப்பட்டிருக்கக் கூடும் என்பது யூகத்தோடு, ஊடகங்களில் வெளிவரும் செய்திகள்!
‘தூய சக்தி’ என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தவர்களின் இன்றைய நிலை!
‘‘நேர்மையான அரசியல் நடத்திக் காட்டுவோம்’’ என்றும், தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்றும், தங்களைத் ‘தூய சக்தி’ என்றெல்லாமும் கூறி, ஆட்சியைப் பிடித்தவர்கள். இப்போது கையாளும் இந்தப் பொது ஒழுக்கச் சிதைவு முறையை நியாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது. இது எப்படி ‘தூய சக்தி’யாகும்?
‘‘குதிரை பேரம்’’ என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், (அப்போது இந்தப் பெயர் புழக்கத்தில் இல்லை). 1952 ஆம் ஆண்டுதான் நடந்தது. 1952 இல் நடந்த ‘‘சுதந்திர’’ இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், கொல்லைப்புற வழியில் சி.ராஜகோபாலாச்சாரியாரை அழைத்து வந்தது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளால் வெற்றி பெற்று – ஆறு இடங்களைப் பெற்ற (சைக்கிள் சின்னம் பொறித்த பெட்டி) மாணிக்கவேல் நாயகர் என்பவருக்கு மந்திரி வேலை கொடுத்து, ஆச்சாரியார் பெரும்பான்மை பெற்றார்.
‘மக்கள் துரோகி மாணிக்கவேலர் ஒழிக!’ என்று தமிழ்நாடெங்கும் முழங்கினர்!
அப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து, ‘மக்கள் துரோகி மாணிக்கவேலர் ஒழிக!’ என்று தமிழ்நாடெங்கும் முழங்கினர். ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்கு நிற்காமலேயே, கொல்லைப்புற வழியில், சட்டமன்ற மேலவை, அதுவும் நியமனம் மூலம் எம்.எல்.சி. ஆகி, முதலமைச்சரானார். அக்கட்சித் தாவலுக்கு ஏடுகள் அப்போது தந்த பெயர், ‘ஆயாராம், காயாராம்’ என்பது. காங்கிரஸ் கட்சிதான் அதைத் தொடங்கி விதைத்த முதல் கட்சி.
அதன் பிறகு, தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்படவில்லை; கூட்டணி அமைச்சரவை மூலம் அணி மாறுதல், கட்சி மாறுதல் போன்ற அரசியல் அவலங்கள் வரவில்லை. இப்போது…. மகாமகா வெட்கப்படத்தக்க வேதனை அரசியல்.

தொங்கு சட்டமன்றம், கூட்டணி அரசு மூலம், நிலையான ஆட்சி ஏற்பட்டாலும், கொள்கைச் சமரச ஆட்சியாகவும் அமையும் பேரபாயம் என்பது, அதன் உடன் அமைந்த அம்சம் என்பதால், ஒரு கட்சிக்குத் தனித்த பெரும்பான்மை தரும் தெளிவான நிலை தமிழ்நாட்டில் தொடர்ந்தது. 2006 இல் இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும், பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, தனித்த ஆட்சியாகவே கலைஞர் ஆட்சி நடந்தது. அதன் கொள்கைப் பூர்வத் திட்டங்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாத நிலை இருந்தது.
தற்போது தமிழ்நாடு அரசியல் களம் இதுபோன்ற ‘‘குதிரை பேரங்கள்’’, பதவி அரசியல் தேடிகளின் கூடாரமாகி வருவது விரும்பத்தக்கதல்ல! அதன் விளைவாக ஜனநாயகத்தின் பலவீனத்தால் ஏற்படும் அரசியல் பிழைத்த நிலை – சிறிதும் நேர்மையின்றி, ஆசை வெட்கமறியாது என்ற பழமொழி போல, நாளும் நடக்கிறது.
பொது ஒழுக்கச் சிதைவின் உச்சமல்லவா?
எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா, அதன் பிறகு இடைத்தேர்தல், பிறகு அதற்குரிய பரிசுகள் என்று ‘நாக்கில் தேனைத் தடவுவது’ பொது ஒழுக்கச் சிதைவின் உச்சமல்லவா?
வாக்காளர்களைத் துச்சமாகக் கருதுகிறார்கள் – மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தப் ‘‘பேரங்களை’’யும் அரசியல் அருவருப்புகளையும் கண்டு, ‘‘ஏமாற்றம்’’ என்பதைப் புரிந்து கொண்டு, தங்களது முடிவுகளை மாற்றத் தெரியாதவர்கள் அல்ல!
தமிழ்நாட்டின் பழைய அரசியல் வரலாற்றை மறந்துவிடக்கூடாது!
முன்பு, ‘ஓகோ’வென்று சட்டமன்றத்தில் ஆட்சி அமைத்த, அண்ணா தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பைக் கொண்டு வந்ததினால், நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில், 37 இடங்கள் தோற்று, இரண்டு இடங்கள் (கோபி, சிவகாசி ஆகிய தொகுதிகளில்) மட்டுமே வென்று, அதிர்ச்சித் தோல்வி கண்டு, பிறகு தன்னைத் திருத்திக் கொண்டது தமிழ்நாட்டின் பழைய அரசியல் வரலாறு என்பதை இன்றைய ஆளுங்கட்சி மறந்துவிடக்கூடாது!.
‘‘குதிரை பேரம்’’ என்பதற்குப் பதில் சொல்வதாக அரசியல் வீர வசனம் பேசுவது மட்டும் அறம்சார்ந்ததாக ஒருபோதும் ஆகாது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றம்’ என்பது புரியட்டும்! ‘‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’’ என்பது சொல் அலங்காரமா? அதே குதிரை, கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த வீண் வேலையை நிறுத்தவேண்டும்!

