spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்''பாகிஸ்தானை சுருட்டி வீசியது இந்தியா..!'' கோலி, ராகுல், குல்தீப் யாதவ் ’அசத்தல்’

    ”பாகிஸ்தானை சுருட்டி வீசியது இந்தியா..!” கோலி, ராகுல், குல்தீப் யாதவ் ’அசத்தல்’

    ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. ஆசியக் கோப்பையின் 9 வது ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக நடுவரிசை பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் விலகினார். விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுல் அணிக்குத் திரும்பினார். பும்ரா அணிக்குத் திரும்பியதால் ஷமி நீக்கப்பட்டார். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

    பவர்பிளே ஓவர்களில் ஷாஹீன் ஷா அஃப்ரிடியை தீரமுடன் எதிர்கொண்ட கில் பவுண்டரிகளாக விரட்டினார். முதலில் நிதானமாகத் தொடங்கிய ரோஹித் சர்மா, பவர்பிளே ஓவர்கள் முடிந்தவுடன் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் பந்துகளை நாலாபுறமும் விரட்டிய அவர் கடைசியில் அவருடைய பந்திலேயே ஆட்டமிழந்தார். 52 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

    தொடக்க ஓவர்களில் ரன்களை ஷாஹீன் அஃப்ரிடியை அடித்து விளையாடிய கில், அவருடைய அடுத்த ஸ்பெல்லில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 24.1 ஓவர்களில் கன மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மழை நிற்காமல் பெய்ததால் மாற்று நாளான திங்களன்று ஆட்டம் தொடங்குமென அறிவிக்கப்பட்டது. திங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய கோலி – ராகுல் இணை அபாரமாக விளையாடியது.

    தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருந்த ராகுல் 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் சிக்ஸர் மழை பொழிந்த கோலி, 55 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். காயம் காரணமாக ஹாரிஸ் ராஃப் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணி இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது. இஃப்திகார் அஹமதின் பந்துவீச்சை கோலி – ராகுல் இணை சிதறடித்தது.

    இறுதிக்கட்ட ஓவர்களில் இருவரும் ருத்ரதாண்டவம் ஆட இந்தியா கடைசி 25.5 ஓவர்களில் 209 ரன்களைக் குவித்தது. சரியாக 100 பந்துகளில் சதமடித்த ராகுல், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை எட்டிய கோலி, 83 பந்துகளில் தனது 43வது சதத்தை எட்டினார். 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன், ஷதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஓர் அட்டகாசமான ஸீம் பந்தின் மூலம் தொடக்க பேட்டர் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டரும் கேப்டனுமான பாபர் ஆஸம், பாண்டியாவின் கிராஸ் ஸீம் பந்து எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதைக் கணிக்க முடியாமல் 10 ரன்களில் தனது ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார்.

    மழை குறுக்கீட்டிற்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய உடனே துணை கேப்டன் ரிஸ்வானை 2 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பினார் ஷார்துல். அதன்பிறகு சீட்டுக் கட்டைப் போல பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. தாக்குப் பிடித்து 27 ரன்கள் எடுத்த ஸமானை ஒரு ஃபிலாட்டர் பந்தின் மூலம் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். நடு ஓவர்களில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் சரணடைந்தனர்.

    சல்மான், இஃப்திகார் அஹ்மது ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சமாளித்து ரன் சேர்த்தனர். சைனாமேனா கூக்ளியா என்ற குழப்பத்திலேயே பாகிஸ்தான் பேட்டர்கள் தங்களுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 32வது ஓவரில் கடைசி பந்தில் ஆல்ரவுண்டர் ஃபஹீமை போல்டாக்கிய குல்தீப், தனது ஐந்தாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். காயம் காரணமாக நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் பேட்டிங் செய்ய முன்வராததால் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    களமிறங்கிய 9 பாகிஸ்தான் பேட்டர்களில் மூவர் மட்டுமே 20 ரன்களைத் தாண்டினர். இந்திய அணித் தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் பும்ரா, பாண்டியா, ஷார்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை எட்டிய, தனது 77வது சர்வதேச சதத்தை அடித்த கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி செவ்வாயன்று நடக்கும் சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments