spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’தமிழ்நாட்டின் கிரிஜா அம்மா..!’’ பிரதமர் மோடி உருக்கமான பேச்சு

    ’’தமிழ்நாட்டின் கிரிஜா அம்மா..!’’ பிரதமர் மோடி உருக்கமான பேச்சு

    ’’தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். அந்தச் சந்திப்பின் போது, இளைய மாணவர்களும் அவருடன் இருந்தார்கள்’’ என்று பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். 

    ’மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 134-வது அத்தியாயத்தில் (31.05.2026) பிரதமர் நரேந்திர மோடி உரையின் தமிழாக்கத்தின் முக்கிய குறிப்புகள்:

    எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது.  இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு நிகழ்ச்சியானது நாடெங்கிலும் பெரும் விவாதப் பொருளாகிறது என்றால் அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்.  வெறும் இரண்டே நாட்களுக்கு உள்ளாக ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலே தேசிய சாதனை மூன்று முறை தகர்க்கப்பட்டது. இதை சாதித்துக் காட்டிய இரண்டு வீரர்கள் என்றால் அவர்கள் தாம் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோர். இந்த முறை மனதின் குரலில் இந்த இரு விளையாட்டு வீரர்களோடும் உரையாடிப் பார்ப்போமே என்று நான் நினைத்தேன்.

    கடந்த நாட்களில் நான் ஐரோப்பாவின் நெதர்லாண்டு நாட்டுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே பல கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது ஒரு கணம் அனைத்து பாரதநாட்டவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது. நெதர்லாண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவிலே சோழர்கள் காலத் தொன்மையான தாமிரப் பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலே நெதர்லாண்டின் பிரதம மந்திரியும் உடன் இருந்தார். இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து எனக்குத் தொடர்ந்து செய்திகள் கிடைத்து வருகின்றன. மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள், பெருமிதத்தைத் தெரிவித்து வருகிறார்கள். உலகெங்கிலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் இதனால் சிறப்பான உற்சாகம் பெருக்கெடுத்திருக்கிறது.

    இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் நிறைய ஆவல் இருக்கிறது. ஆகையால் இதோடு தொடர்புடைய சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவற்றிலே 21 பெரிய மற்றும் 3 சிறிய பட்டயங்கள் இருக்கின்றன. இவை முக்கியமாக பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழன் வாயிலாக அவருடைய தந்தையார் பேரரசர் ராஜராஜ சோழன் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தல் தொடர்பானது. ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை ஒரு புத்த விஹாரம் அமைக்க தானமாக அளிப்பது பற்றி இதிலே குறிப்பு இருக்கிறது. இந்தத் தாமிரப் பட்டயங்களிலே சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல்வல்லமை எத்தனை மகத்தானதாக விளங்கியது என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு அவர்களுக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிய தகவல்களும் இவற்றிலே காணக் கிடைக்கின்றன. சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளமான வரலாறும், கலாச்சாரமும் தொடர்பாக நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. 

    நமது அரசு பாரதத்தின் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்தத் தொடரிலே, ஞான பாரதம் இயக்கத்திற்குட்பட்டு, சத்திஸ்கட்டின் மல்ஹாரிலும் கூட ஒரு மகத்துவம் வாய்ந்த தேடல் நடந்திருக்கிறது. இங்கே மூன்று அபூர்வமான தாமிரப் பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன. இவை பாண்டுவம்ச அரசகுடும்பத்தின் மஹர்ஷி பாலார்ஜுனரின் ஆட்சிக்காலத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த எழுத்துப்பொறிப்புகள், 6 – 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, அதாவது 1400-1500 ஆண்டுகள் பழமையான இந்த தாமிரப் பட்டயங்கள், பண்டைய பிராம்மி எழுத்துக்கள் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றிலே அந்தக் காலகட்டத்தின் ஆட்சிமுறை, அறம் மற்றும் கலாச்சாரம் பற்றிய மகத்துவமான தகவல்கள் கிடைக்கின்றன.

    கடந்த மாதங்களில் ஒரு மிகப்பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. இது மனதின் குரலோடும் கூட தொடர்புடையது. ஆகையால் இன்று நான் இதுபற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். அந்தச் சந்திப்பின் போது, இளைய மாணவர்களும் அவருடன் இருந்தார்கள்.

    கிரிஜா அம்மா, சுமார் 15 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். இவற்றிலே சென்னையின் ஜய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மிகவும் முக்கியமானது. இவருடைய தேசபக்தி உணர்வு, அனைத்து பாரதவாசிகளுக்கும் கருத்தூக்கமளிக்கவல்லது. இவர் மனதின் குரலால் உள்ளெழுச்சி பெற்று, தேசத்தின் பல இராணுவ வீரர்களுக்கு பங்களிப்பு அளிக்கும் உறுதி பூண்டார். இதன் பொருட்டு இவர் தனது அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளித்தார். வீரம் நிறைந்த படைவீரர்களுக்கு நாம் ஒவ்வோர் தினமும் ஒரு ரூபாய் பணத்தைப் பங்களிப்பாக அளித்துவர வேண்டும் என்று மாணவர்களிடம் இவர் கூறினார். அதாவது ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவன் தரப்பிலிருந்தும் 365 ரூபாய் திரட்டப்படும்.

    இந்தச் சின்னச்சின்னப் பங்களிப்பால் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேர்ந்தது. கிரிஜா அம்மா, இந்த மொத்தப் பணத்துக்கான காசோலையை என்னிடத்தில் அளித்தார். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, பாரத அன்னையிடம் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு உணர்வு எத்தனை ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது. கடந்த ஆண்டு தான் சென்னையின் முதல் ஹிந்து வித்யாலயமானது தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது. தேசத்தின் கல்வி மற்றும் கலாச்சார கௌரவத்தை முன்னெடுத்துச் செல்லும் பள்ளி வலையமைப்பு தொடர்பான இவருடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நம்முடைய படைவீரர்களூக்குத் தங்களுடைய பங்களிப்பை அளித்த அந்த மாணவச் செல்வங்களுக்கும் நான் குறிப்பாக என் பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

    நண்பர்களே, பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரிலும், ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அது நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது. பல வேளைகளில், இந்த முயற்சிகள் அதிக பேசுபொருளாவதில்லை என்றாலும், அதைப் பற்றி நாம் அறியும் போது, தேசம் தனது குடிமக்களின் சக்தியின் துணையோடு முன்னேறி வருகிறது என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.  உங்கள் அருகிலே இப்படிப்பட்ட முயற்சிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். யார் சமூகத்திற்காக நல்ல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், முடிந்தால் நீங்களுமே கூட ஏதோ ஒரு நல்ல பணியிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாத மனதின் குரலில் மேலும் சில உள்ளெழுச்சியளிக்கும் விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments