spot_img
More
    முகப்புசெய்திகள்''60 ஆயிரம் சத்துணவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்..!'' சீமான்

    ”60 ஆயிரம் சத்துணவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்..!” சீமான்

    ’’தற்போது காலியாகவுள்ள 60 ஆயிரம் சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
    ·
    தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக வீதியில் இறங்கிப் போராடிவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த திமுக, இரண்டு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    பெருந்தலைவர் காமராசர் அவர்களால் தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக 1955 ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் 1982 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,29,000 பணியாளர்களுடன் அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 43000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 இலட்சம் ஏழை மாணவ – மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

    கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும். தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு பல ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்கள் போராடியும் இன்றுவரை அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது துயர் மிகுந்த வலியாகும்.

    மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்? தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற கேள்விக்கு திராவிட மாடல் அரசு என்ன பதில் கூறப்போகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு காலியான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் 1,27,000 சத்துணவு பணியாளர்களில் தற்போதும் 97,000 பேர் மட்டுமே பணியாற்றுகின்ற அவலச்சூழல் நிலவுகிறது. மேலும் தமிழ்நாட்டிலுள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் 3கிமீ உள்ளாகச் செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை திமுக அரசு கணக்கெடுத்து வருவதும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    ஆகவே, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவு பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தற்போது காலியாகவுள்ள 60 ஆயிரம் சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments