’’அரசின் தொழிலாளர் துறையை மதிக்காமலும், தொழிலாளர்களை பட்டினி போட்டு துன்புறுத்தி கட்டாய அடிமை சாசனம் போடவும் யூனிபிரஸ் நிறுவனம் முயற்சிக்கிறது. இப்படிப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைக்கு காவல்துறை முட்டுக் கொடுக்கிறது. இந்த போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது” என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் சிப்காட்டில் உள்ள யுனிபிரஸ் என்கிற கார் உதிரிபாக தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்தார்கள். இது அவர்களின் உரிமை. பல தொழிற்சாலைகளின் முன்பு உள்ளது போல அங்கும் தொழிலாளர்கள் கொடியேற்றினார்கள். அந்த கொடியையும், பெயர் பலகையையும் புல்டோசர் வைத்து சிப்காட் நிறுவனம் மூலம் அகற்றினார்கள்.
இது தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட்டு பேர உரிமைக்கு எதிரான மோசமான நடவடிக்கையாகும். அடுத்த நாள் (17.8.23) தொழிலாளர்கள் தங்களது சங்க கொடியை மீண்டும் உயர்த்தினார்கள்.
மறுநாள் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அனுமதிக்கவில்லை. நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக ஆலையை இயக்கி வருகிறார்கள். இது நிரந்தர தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட விரோத கதவடைப்பு ஆகும்.
தொழிலாளர் துறையில் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. இதில் யூனிபிரஸ் நிர்வாகம் கலந்து கொள்ள மறுக்கிறது. தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறபோது அதை நிறுவனம் தடுக்கக்கூடாது என்றும், வேலைக்கு அனுமதியுங்கள் என்றும், தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் பங்கெடுங்கள் என்றும் தொழிலாளர் துறை கூறியுள்ளது.
27.9.23 அன்று தொழிலாளர் துறை ஆணையர் அவர்களே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்தார். அதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் இன்று 28.09.23 ஆலை வாயிலில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்த தொழிலாளர்களையும், தொழிற்சங்க தலைவர் தோழர். முத்துக்குமாரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் அனுமதி மறுத்து பெரும் அடக்குமுறை ஏவப்படுகிறது. அரசு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அமைதி வழி போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை ஏவக்கூடாது.
அரசின் தொழிலாளர் துறையை மதிக்காமலும், தொழிலாளர்களை பட்டினி போட்டு துன்புறுத்தி கட்டாய அடிமை சாசனம் போடவும் நிறுவனம் முயற்சிக்கிறது.
இப்படிப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைக்கு காவல்துறை முட்டுக் கொடுக்கிறது. இந்த போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
இதில் உடனே தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் குறிப்பாக முதல்வர் அவர்களும் தலையிட்டு தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.