பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் என்.எல்.சி ஒப்பந்த, இன்கோசர்வ், ஹவுசிகாஸ் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அது வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்கவும், வீடு நிலம் கொடுத்தவர்களை பணிநிரந்தரம் செய்தல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகாச் செய்யாமல், விடுபட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் நீதி கேட்டு பேரணியாக தலைமை அலுவலகம் சென்றனர்.
சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். காவிரி டெல்டா விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்பளார் பி.ஆர்.பாண்டியன் பேரணியை தொடக்கி வைத்தார்.
பி.ஆர்.பாண்டியன் பேசும் போது, ’’என்எல்சி தொழிலாளர்கள் 50 ஆண்டுகாலமாக தலைமுறை கடந்து போராடி வருகின்றனர். காவிரி உரிமைப் போராட்ட நடவடிக்கைகளில் என்.எ.ல்சி தொழிலாளர்கள், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அதற்கு நன்றிக்கடனாக விவசாயிகள் சங்கத்தினர், அவர்களது போராட்டங்களுக்கு உறுதுணையாக களம் இறங்கியுள்ளோம். கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த இரு அமைச்சர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்றார்.
பேரணியில், தமிழ்நாடு போக்குவரத்து சம்மேளன மாநில பொதுச்செயலாளர் லட்சுமணன், தேசிய தொடர்பு சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்தன், சம்யுக்தா கிசான் மோர்ச்சா இயக்கத்தின் நிர்வாகிகள் ராஜ்வீந்தர் சிங் கோல்டன், சுவாமி இந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
என்.எல்.சி தலைமை அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியை, நேரு சதுக்கத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, மனிதவளத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை மனுவாக அளிக்க என்.எல்.சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மனிதவளத்துறை தொழில் உறவு துணை பொது மேலாளர் திருக்குமரன், ஜீவா சங்கத்தின் சிறப்புத் தலைவர் சேகர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசினார். அப்போது ஜீவா சங்கத்தினர், இது சம்பந்தமாக என்.எல்.சி தலைவர், மனிதவளத்துறை இயக்குரிடம் மட்டுமே பேச தயாராக உள்ளதாகவும், வேறு எந்த முடிவும் எடுக்க முடியாத அதிகாரிகளிடம் பேச இயலாது என உறுதிபட கூறி, கோரிக்கை மனு யாரிடமும் தரமாட்டோம், என கூறி நேரு சதுக்கத்திற்கு திரும்பினர்.
அங்கு திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் ஜீவா சங்க சிறப்புத் தலைவர் சேகர் பேசும் போது, ’’உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மனிதவளத் துறை அதிகாரிகள் மெத்தனமாக நடந்து வருகின்றனர். மே 30-ஆம் தேதிக்குள் எங்களது கோரிக்கை குறித்து, என்.எல்.சி தலைவர், இயக்குநர் நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஜூன் 1-ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸை பேரணியாக சென்று வழங்குவோம்’’ என்று எச்சரித்தார். முடிவில், பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.




